''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.''
இதைச் சொலிவிட்டு, மனைவி மோனாவை பார்த்து சிரிக்கிறார் சந்தோஷ், மோனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண பந்தத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஓராண்டுதான் ஆகிறது. தற்போது தம்பதிகளிடையே நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது.
மோனாவிடம் திரைப்படத்திற்கு செல்ல நேரமில்லை என்று சொன்னபோது, அவர் மாதவிடாய்க்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தம் அதாவது பி.எம்.எஸ் (Pre-Menstrual Stress) என்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது சந்தோஷுக்கு தெரியாது.
இது சிறிய விவகாரம். எனவே கோபமும் விரைவிலேயே அடங்கிவிட்டது. ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற சமயத்தில் நிலைமை உயிரையும் குடித்துவிடுகிறது.
ராஜஸ்தானில் அஜ்மீரில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசியெறிந்துவிட்டார். அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.
இந்த வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெண் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தில் இருந்ததாக அந்த பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டது. அதனால் தன்னுடைய செயலின் விளைவு என்ன என்று தெரியாத நிலையில் அந்த தாய் இருந்ததாக குறிப்பிடப்பட்டது. வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
பி.எம்.எஸ் என்றால் என்ன?
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு முன் இந்த காலகட்டம் துவங்குகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்கள் பெண்ணுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட ஒரு பொருளை சாப்பிட விருப்பம் அல்லது வெறுப்பு, கோபம் வருவது, படபடப்பு வழக்கமான நடவடிக்கைகளில் வித்தியாசம் ஏற்படுவதை கவனிக்கலாம்.
டெல்லியில் உள்ள பெண்கள் நல சிறப்பு மருத்துவர் அதிதி ஆசார்யாவை சந்தித்து அவரிடம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அழுத்தம் பற்றி விரிவாக பேசினோம்.
''பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் பி.எம்.எஸ் நிகழ்கிறது. சிலருக்கு உடல் வலி அதிகரிக்கும். சிலருக்கு வயிற்று வலியும், மார்பகத்தின் அருகே வலியும் ஏற்படும். சிலருக்கு தலைவலி ஏற்படலாம். சில பெண்களின் மனோநிலை திடீரென மாறலாம். காரணமே இல்லாமல் அழுகை வரலாம்'' என்று அதிதி சொல்கிறார்.
அறிவியல் பொது நூலகத்தின் PLosONE என்ற பத்திரிகையில் 2017 ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி 90 சதவிகித பெண்கள் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் 40 சதவிகித பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதிலும் இரண்டு முதல் ஐந்து சதவிகித பெண்களுக்கு மிக அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது, இது அவர்களின் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
ஆண்களுக்கு புரியாத மாதவிடாய் பிரச்சனை
இந்த சமயத்தில் பெண்களின் மனம் அமைதியாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது, மற்றவர்கள் தங்களை புரிந்துகொள்ள வேண்டும் என விரும்பும் பெண்கள், குடும்பத்தினர் தங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயல்பே.
வணிகவியல் இளங்கலை பட்டம் பயிலும் ஆயுஷ், தனது தோழியின் மனோநிலையில் ஏன் மாறுதல் ஏற்படுகிறது என்று புரியாமல் குழம்பினார்.
''நாங்கள் பழகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எனக்கு ஆரம்பக்கட்டத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு நாள் காரணமே இல்லாமல் என் தோழி கோபித்துக் கொண்டபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நானும் பதிலுக்கு கோபத்தை கொட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்'' என்கிறார் ஆயுஷ்.
கூகுளில் வேறு ஒரு செய்தியை தேடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாதவிடாய் தொடர்பான விஷயங்களை ஆயுஷ் படித்தார். பிறகு அதுதொடர்பான தகவல்களை தேடிப்படித்து ஓரளவு விஷயங்களை புரிந்துகொண்டார். மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பும் பெண்களின் மனதில் அழுத்தம் உண்டாகலாம் என்றும் அதற்கு பெண்களின் சுபாவம் காரணமில்லை, ஹார்மோன்களே காரணம் என்பதையும் அறிந்துகொண்டார்.
ஆயுஷின் கருத்தை மேலும் விவரிக்கும் டாக்டர் அதிதி, ''என்னிடம் வரும் தம்பதிகளில் பலரின் கணவருக்கு மாதவிடாய், அதற்கு முன்பு ஏற்படும் மன அழுத்தம் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. தனது வாழ்க்கைத் துணை எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும், வலியையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பது பெண்களுக்கு மேலும் அதிக எரிச்சலை கொடுக்கிறது. இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது'' என்று சொல்கிறார்.
வாழ்க்கைத்துணையின் பங்கு
ஓராண்டு திருமண வாழ்க்கையில் தன் கணவரின் புரிதலில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் மோனா.
என் கணவருக்கு சகோதரிகள் இருந்தாலும், மாதவிடாய் பற்றி அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார். ஆனால் இப்போது அவரிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. அவரின் ஆதரவு இருப்பதால் நான் மாதந்தோறும் அந்த கொடுமையான காலகட்டத்தை கடப்பது சற்று இலகுவாக இருக்கிறது.''
PLosONE ஆய்வறிக்கையின்படி, இயல்பான தம்பதிகளுடன் ஒப்பிடும்போது லெஸ்பியன் ஜோடிகளிடம் மதாவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் குறித்த புரிதலும், ஆதரவும் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால், இருவருமே பெண்களாக இருப்பதால் ஒருவரின் உணர்வுகள் மற்றவருக்கு புரிவது இயல்பாகவே இருக்கிறது.
எனவே, கணவனோ, காதலனோ அல்லது ஆண் நண்பரோ ஒரு பெண்ணின் மனோநிலையையும், குறிப்பாக மதாவிடாய் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் சிரமங்களையும் புரிந்து கொண்டால், பல பிரச்சனைகள் ஏற்படுவதையே தவிர்க்கலாம். ஆனால் பி.எம்.எஸ் காலகட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவதே நல்லது என்கிறார் அதிதி.
பிரிட்டனில் த கன்வர்சேஷன் என்ற வலைதளத்தில் பி.எம்.எஸ் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்தில் மனோநிலையில் மாறுதல்கள் ஏற்படும் பெண்களுக்கு தனியாகவும், அவர்களின் துணைவர்களோடு இணைந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
துணைவரோடு சிகிச்சையளிக்கப்பட்ட பெண்கள் பி.எம்.எஸ்-இல் இருந்து குணமாகும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததையும், தனியாக சிகிச்சை பெற்ற பெண்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை என்று இந்த இந்த ஆய்வில் தெரியவந்தது.''
அதிதியின் கருத்துப்படி, ''பி.எம்.எஸ் சமயத்தில் பெண்களின் வயிறு, மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் வழக்கத்தைவிட வித்தியாசமாக உணர்வார்கள். ஒருவரின் அந்தரங்க உறுப்புகளில் வலி ஏற்பட்டால் அவர்களால் எப்படி இயல்பாக இருக்கமுடியும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த சமயத்தில் வாழ்க்கைத் துணை புரிந்து கொண்டு உதவி செய்தால் அது எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கும்!''
மனைவி மோனாவுடன் அமர்ந்திருக்கும் சந்தோஷ் புன்சிரிப்புடன் இவ்வாறு கூறுகிறார், ''திருமணமான புதிதில் மனைவிக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே ஆண்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ளவேண்டும் என நினைப்பேன். ஆனால், இப்போது அந்த சிரமமான நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.''