இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.
விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது’
விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது,
உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது.
ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கருவள சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வோரில் இறுக்கமற்ற, தளர்வான பாக்சர் உள்ளாடை (ஜட்டி) பயன்படுத்தியோருக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை அணிந்தோர் கொண்டிருந்த நீந்திச்செல்லும் சக்தியுடைய 33 சதவீத விந்தணுக்களைவிட 17 சதவீதம் அதிக விந்தணுக்களை இறுக்கமற்ற உள்ளாடை அணிந்திருந்தோர் பெற்றிருந்தனர்.
ஆனால், விந்தணுவின் வடிவமோ, டிஎன்ஏயின் தரமோ யாருக்கும் பாதிக்கப்படவில்லை.
உள்ளாடைக்குள் நிலவும் அதிக வெப்பம் இந்தப் பிரச்சனையின் மூலக்காரணம் என்ற அனுமானத்தோடு, இந்த ஆண்களின் வயது, உடல் எடை குறியீடு மற்றும் புகை பிடித்தல், சுடுநீரில் குளிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விந்தணுவை பாதிக்கக்கூடிய பிற அம்சங்களையும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு இதனை ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
விந்தணுவை உற்பத்தி செய்ய விதைப்பைகளுக்கு ஆணையிடும் மூளையின் ஒரு ஹார்மோன்தான் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்). இந்த வகையான ஹார்மோன் இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோரிடம் 14 சதவீதம் குறைவாக இருந்தது ‘ஹூமன் ரிபுராடக்ஷன்’ பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கு அதிக ஹார்மோனை சுரக்க செய்வதும், இறுக்கமான உள்ளாடை அணிகின்றபோது விந்தணுக்களை குறைப்பதையும் இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்) கட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்குறி நோயியல் பேராசிரியர் ஆலன் பேஸி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இறுக்கமான உள்ளாடை அணிவது விதைப்பைகளில் சேதமடைய செய்வதை, வேறுபட்ட உள்ளாடை வகைகளை அணிந்த ஆண்களிடன் காணப்படும் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் மாறுபடுகின்ற நிலை (ஃஎப்எஸ்ஹெச்) காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
இனப்பெருக்கம் ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு
படத்தின் காப்புரிமை Getty Images
இந்த ஆய்வு விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றியது. ஆண்மைத்தன்மை பற்றியதல்ல.
எந்த வகையான உள்ளாடைகளை அணிந்தாலும், விந்தணு எண்ணிக்கை இயல்பாகவே இருக்கிறது.
ஆனால், குறைவான விந்தணு உற்பத்தி நிலையிலுள்ள சில ஆண்களுக்கு, இறுக்கமான உள்ளாடை அணிவதை மாற்றிக்கொண்டு தளர்வான உள்ளாடைகளை அணிவது உதவலாம் என்று பேராசிரியர் ஆலன் பேஸி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“இறுக்கமான உள்ளாடையால் பாதிப்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆண்கள் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்வதற்கு மலிவான, எளிய முயற்சி இருப்பதையும் இது காட்டுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“விந்தணு அதிகரிப்பதற்கு சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. எனவே முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள்” என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஜோர்ஜ் சாவெரோ பிபிசியிடம் கூறியுள்ளார்.
“மலட்டுத்தன்மை என்பது வெறுமனே பெண்களை சார்ந்த பிரச்சனையல்ல. இனப்பெருக்கம் என்பது ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு. எனவே, கருவளத்திற்கு ஆண்களின் பங்களிப்பு பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்” என்று டாக்டர் ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்