ஆரோக்கியம் அவசியம் என நினைக்கிறீர்களா?
27 Jul,2018
நீங்கள் கடைப்பிடித்தே ஆகவேண்டிய 5 வழிமுறைகள்.
1. எடை பார்ப்பது நல்லது!
வாரத்துக்கு ஒரு முறை உங்கள் எடையைத் தெரிந்துகொள்ளுங்கள். எடை அதிகமானால் அலர்ட் ஆகலாம். குறைக்கவும் முயலலாம். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடையை அளவிடுவது துல்லியமாக இருக்கும்.
2. வாரத்துக்கு 10 மணி நேரத்துக்கு மேல் டி.வி வேண்டாமே!
தொலைக்காட்சி உங்கள் நேரத்தைச் சாப்பிடுகிறதா? இதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. டி.வி பார்க்கும் நேரத்தைப் பாதியாகக் குறைத்துப் பாருங்கள். உடலில் கலோரி எரிக்கப்படுவது கணிசமாக உயர்வதை நீங்களே உணர்வீர்கள்!
3. ஒரு மணி நேர உடற்பயிற்சி அவசியம்!
ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது கடினம்தான். ஆனால், டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டால் இது சாத்தியமே. ஒரு மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்யாமல், மூன்று 20 நிமிடங்களாகப் பிரித்துக்கொண்டு செய்யலாம். வேறு உடற்பயிற்சிகள் செய்ய முடியாதவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை தலா 20 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்
4. கார்போஹைட்ரேட், பால் பொருள்களுக்கு `நோ’ சொல்லலாமா?
கார்போஹைட்ரேட், பால் பொருள்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடாதீர்கள். பதிலாக அவற்றின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்; சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். இது, வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரத்துக்குத் தரும்.
5. காலை உணவு முக்கியம் பாஸ்!
காலை ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. புரதம், நார்ச்சத்து அதிகமாக இருக்கிற, கொழுப்பு குறைவாக உள்ள, அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுபவர்கள், மாலையில் கொஞ்சம் இனிப்பு வகையும் சாப்பிடலாம், பிரச்னையில்லை. சிறுதானியங்கள், பருப்புகள், பழங்கள், அவித்த முட்டைகள் இவையெல்லாம் காலை உணவில் இருப்பது சிறப்பு