எலக்ட்ரானிக் சருமம்!
24 Jul,2018
போர் மற்றும் விபத்துகளால் கை, கால்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்ட செயற்கை உறுப்புகள் இரும்பு, மரம் போன்ற கடினமான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. ஆனாலும், அவை இயல்பான தோற்றத்திலிருந்து வடிவிலும், செயல்பாட்டிலும் மாறுபட்டு பயனாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பதாய் இருந்தன.
பின்னர் எடை குறைந்த பிளாஸ்டிக், அக்ரிலிக், கார்பன், பாலிஎதிலின் போன்ற பொருட்களால் ஆன செயற்கை உறுப்புகள் பயன்பாட்டை எளிதாக்கின. இன்றோ 3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தின் மூலம், செயற்கை உறுப்புகளின் இயக்கத்தை மனதால் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், ‘வெப்பம், குளிர், கூரிய பொருட்களால் ஆன காயம் போன்று எந்த தொடு உணர்வும் இல்லாதிருப்பது செயற்கை உறுப்புகள் பொருத்திக்கொண்டவர்களுக்கு மிகப்பெரும் குறையாகவே இருந்து வந்தது. இந்தக் குறையைப் போக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு புதிய மின்னணு தோலை (E Dermis) உருவாக்கியுள்ளனர். செயற்கை உறுப்பின் மீது இந்த மின்னணு தோலை வைக்கும்போது வலி, சூடு, குளிர்ச்சி, தொடு உணர்வு என அனைத்து உணர்வுகளையும் அனுபவிக்க முடியுமாம்.
நம்முடைய தோலானது, மூளையில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய நெட்வொர்க் ரிசப்டார்ஸை (Network Receptors) கொண்டுள்ளது. அந்த வகையில், ஒரு பொருளின் வளைவு மற்றும் கூர்மை என இரண்டு குறிப்பிட்ட உணர்ச்சிகளை அனுப்புவதற்கேற்ற சாதனத்தை வடிவமைப்பதில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்முடிவில், மனித தோல் அடுக்கில் உள்ள ரிசப்டார்ஸ்களைப் பின்பற்றி, துணி மற்றும் ரப்பரால் ஆன சென்ஸார்கள் பொருத்தப்பட்ட மின்னணு தோலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒரு பொருள் கூர்மையானது, சூடானது போன்ற உணர்வுகளை இந்த ரிசப்டார்கள் கண்டுபிடித்து, பின்னர் அவற்றை செயற்கை உறுப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயர்களின் மூலமாக மூளையினுள் இருக்கும் புற நரம்புகளுக்கு (Peripheral Nerves) எடுத்துச் செல்கின்றன.‘வலி, நிச்சயமாக வேதனையான, விரும்பத்தகாத ஒன்றாக இருந்தாலும், செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.
தற்காப்பான தொடு உணர்வுக்கு இந்த மின்னணு தோல் மிகவும் தேவையான ஒன்று’ என்கிறார் தலைமை ஆய்வாளரான லூக் ஆஸ்பர்ன். உணர்வில்லாத ஓர் உறுப்பு உயிரூட்டம் பெற்றால், ஒரு மனிதனுக்கு வாழ்க்கையே திரும்ப கிடைத்த மாதிரி. அப்படிப்பார்த்தால், அவன் எப்பொழுதும் தொழில்நுட்பத்திற்கு நன்றியுள்ளவனாகிறான்