காலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்?
15 Jul,2018
இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும்கூட சர்க்கரை நோயாளிகள் சிலருக்குக் காலையில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடலின் பல்வேறு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? அதைச் சரிசெய்ய முடியுமா? விளக்குகிறார் சர்க்கரைநோய் மருத்துவர் தேவராஜன்.
“நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் குளூகோஸில் இருந்துதான் பெரும்பாலும் கிடைக்கிறது. இரவில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படாது என்றாலும், உடலிலிருக்கும் செல்கள், மூளை போன்றவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்க உடல் தொடர்ந்து குளுகோஸைத் தயாரித்துக்கொண்டே இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகளின் உடல், தேவையானஅளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது என்பதால், ரத்தத்திலிருக்கும் சர்க்கரை, செல்களைச் சென்றடையாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும்.
இரவில் உறங்குவதற்கு முன்னர் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டாலும், குறைந்த அளவே இன்சுலின் சுரக்கும். எனவே, நள்ளிரவுக்குள் ஏறக்குறைய இன்சுலின் தீர்ந்துவிடும். இதனால் காலையில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இது `டான் பினாமினன்’ (Dawn Phenomenon) எனப்படும். இரவில் சாப்பிடாமல் உறங்குபவர்கள், விரதமிருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதைச் சரிசெய்ய உடல் அதிக அளவில் குளூகோஸ் தயாரிப்பதால்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இரவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதைத்தான் `ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்பார்கள். அப்போது அவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பது குறைவதால், குளூகோஸ் தயாரிக்கும் பணி அதிகமாகும். இதனாலும் காலையில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்படிக் காலையில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை, `சோமோகி எஃபெக்ட்’ (Somogyi Effect) என்பார்கள். இரவு மூன்று மணிக்குத் தொடங்கி விடியற்காலையில் உச்சத்தை அடையும் கார்டிசால் ஹார்மோன் (Cortisol) சுரப்பு, உடலில் இன்சுலின் அளவைக் குறைத்துவிடும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவது சாதாரணமாக நடக்கக்கூடியது. என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது நடக்கும்போது, காலையில் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.
காலையில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்க, சிலநேரங்களில் இரவில் சாப்பிடும் உணவுகளும்கூடக் காரணம். அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், அளவுக்கு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதால் இப்படி நடக்கலாம். இதனால் இதயம், கல்லீரல் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி, இதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருப்பவர்களுக்கு இது ஏற்படாது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உணவு முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்; நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரவு உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். காலையில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, வழக்கமாகச் சாப்பிடுவதுபோல நிறையச் சாப்பிடாமல் அளவாகச் சாப்பிட வேண்டும். சில சர்க்கரை நோயாளிகள் காலை உணவுக்கு முன்னரும் இன்சுலின் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இருந்தாலும், காலையில் போட்டுக்கொள்ளும் இன்சுலினைவிட இரவில் போட்டுக்கொள்ளும் இன்சுலினே அதிகப் பயன் தரும்.
காலையில் அதிகமாக இருக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நாம் மருத்துவர்களின் ஆலோசனையின்படி, இரவில் இன்சுலின் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இன்சுலினில் இரண்டு வகைகள் உள்ளன. நீண்டநேரம் செயல்படக்கூடியவை; குறைந்த நேரம் செயல்படக்கூடியவை (Long Acting and Short Acting Insulin). இவற்றை நாம் கவனித்து, தேவைக்கேற்ப மாற்ற வேண்டும். இவை அனைத்தையும் தவறாமல் செய்தால், இந்தப் பிரச்னையிலிருந்து சுலபமாக விடுபடலாம்.”