காலணிகளில் கவனம் !
11 Jul,2018
பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம். பாதங்களில் பிரச்னை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம். பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்’’ என்கிறார் நியூரோ பிசியோதெரபிஸ்ட் ஃபமிதா. விரிவாகப் பார்ப்போம்.
சியாட்டிகா (Sciatica)
சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.
தட்டைப்பாதங்கள் (Flat Feet)
முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம் ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.
குதிகால் வலி (Achilles Tendinopathy)
குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும். பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.
பி.டி.டி.டி என்னும் ‘போஸ்டீரியர் டிபியல் டெண்டன் டிஸ்ஃபங்ஷன்’ (Posterior Tibial Tendon Dysfunction)
கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வது, விளையாட்டுகளால் பாதங்களில் காயம் ஏற்படுவது, தட்டைப்பாதங்கள் இருப்பது போன்றவை பி.டி.டி.டி என்னும் பிரச்னைக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழலில் கால்களை அசைக்க முடியாது. ஆரம்பத்தில் பாதத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் காணப்பட்டுக் கடைசியில் அது தட்டைப்பாதமாக மாறிவிடும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மாத்திரை, மருந்துகள், சிலவகை தெரபி மற்றும் பாதங்களின் `ஆர்ச்’சுக்கேற்ற காலணிகளை அணிவதன்மூலம் தீர்வு காணலாம். இப்பிரச்னை தொடர்ந்தால், அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்
* காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.
* குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.
* தரையில் வழுக்காத செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
* தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை. பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்