தூக்கமே மனிதனைச் சுறுசுறுப்பாக வைக்கும்
03 Jul,2018
போதுமான அளவு முழுமையான தூக்கமே மனிதனைச் சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்துக் களைத்த மனிதன் இரவுத் தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்குதான் சோம்னிபோபியா (Somniphobia) என்று பெயர். அதாவது தூக்கத்தின்போது என்ன நடக்கும் என்ற பயம். லத்தீன் மொழியில் Somnus என்றால் தூக்கம்; Phobia என்றால் பயம்.
காரணம்: பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக்கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள் (முக்கியமான விஷயங்களைக் கூறிவிடுவோமோ என்கிற கவலை) என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்குத் தூங்கினால் அவர்களைப் பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.
அறிகுறிகள்: பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
சிகிச்சை: தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தைத் தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்குச் சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.