பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு 40 சதவிகிதப் பெண்களுக்கு ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக தைராய்டு வீக்கம் (Thyroid Inflammation) ஏற்படும். இப்படிப்பட்ட பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ (Postpartum Thyroditis) ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் முழுநேரப் பொறுப்பில், இந்தப் பிரச்னையின் அறிகுறிகளைப் பிரசவித்த தாய்மார்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். ஓய்வில்லாமல் இருப்பதால் ஏற்படும் சாதாரணச் சோர்வு மற்றும் உடல் உபாதை என்றே அவற்றை நினைத்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பி சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால். போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அவர் விளக்குகிறார்.
ஏன் ஏற்படுகிறது போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அவர்களின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலில் மாற்றம் ஏற்படும். காரணம், வயிற்றில் வளரும் கருவைத் தாயின் உடல் ஏற்றுக்கொள்வதற்கான உடலியல் தகவமைப்பு இது. இதன் காரணமாக, தைராய்டு உள்ளிட்ட சில ஹார்மோன்களின் சுரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும்; இவை ‘ஸ்லீப் ஸ்டேட்’டில், செயல்படாமல் இருக்கும். இந்நிலை, பிரசவத்துக்குப் பிறகு மாறும். அப்போது, அந்த ஹார்மோன்களெல்லாம் தங்கள் சுரப்பை மீண்டும் ஆரம்பிக்கும்.
பொதுவாக, நம் உடம்பில் தைராய்டு ஹார்மோன்கள் சுரந்து, அவை ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், கர்ப்ப காலம் முழுக்க ரத்தத்தில் கலக்காமல் இருந்த இந்த ஹார்மோன்கள், பிரசவத்துக்குப் பிறகு கலக்க ஆரம்பிக்கும். இது இரண்டு, மூன்று மாதங்கள் நடக்கும். எனவே, இக்காலகட்டத்தில், அதிக தைராய்டு சுரப்பினால் `ஹைப்பர் தைராய்டிஸம்’ (Hyperthyroidism) ஏற்படும். பிறகு ஹார்மோன்கள் சமநிலை அடைந்து, ஒரு கட்டத்தில் ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்கள் குறைந்து `ஹைப்போதைராய்டிஸம்’ (Hypothyroidism) ஏற்படும். இவை இரண்டும், போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸின் இரண்டு நிலைகள்.
விளைவுகள்
பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகான ஒரு வருட காலம், மிகவும் முக்கியமானது; போராட்டமானதும்கூட. தாய்மை என்ற புதிய பொறுப்பு, குழந்தைக்குப் பால் கொடுப்பது, இரவு பகல் அதைக் கவனித்துக்கொள்வது, தாய்மையால் தங்கள் உடலுக்கு நேரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராவது எனப் பல பொறுப்புகள் அவர்களுக்கு வந்துசேரும். இவற்றுடன், உடலில் நிகழும் ஹார்மோன் விளையாட்டுகளால், உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் சில மாறுதல்கள் ஏற்படும். குறிப்பாக, பிரசவத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் தைராய்டு ஹார்மோன் சுரப்பால், எரிச்சல், படபடப்பு, சோர்வு, நினைவுத்திறன் குறைவு, வறண்ட சருமம், உடல் வலி என அவதியுறுவார்கள். இந்த ஹார்மோன் சமநிலையின்மை நிலை நார்மலுக்குத் திரும்ப ஒரு வருட காலம் ஆகும்.போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் என்பது, பிரசவித்த ஒரு வருடத்துக்குள் சரியாகிவிடும். ஒருவேளை அதற்குப் பிறகும் பிரச்னை தொடர்ந்தால், அது போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் அல்ல, சாதாரண தைராய்டு பிரச்னை. எனவே, தொடர் மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அவசியம்.
தீர்வுகள்
பெரும்பாலான பெண்களுக்கு, இதற்குச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. ஏற்கெனவே சொன்னதுபோல, ஒரு வருட காலத்துக்குள்ளாக ஹார்மோன்களின் சுரப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியதும், போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸும் தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை, இந்த ஒரு வருட காலத்துக்குள், பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருந்தால், அந்தப் பெண்கள் மருத்துவப் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் பிரச்னை, பிரசவத்துக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, தீர்வு காண்பது எளிதாகும்.
அறிவது எப்படி?
* முதலில் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தைராய்டு சுரப்பில் மாற்றம் இருந்தால், தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
* தைராய்டு பரிசோதனையில், T3 மற்றும் T4 ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருந்து, TSH (Thyroid Stimulating Hormone) ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால், அது ‘ஹைப்பர்தைராய்டிஸம்’. இது மருந்துகள் மூலம் சரிசெய்யப்படும்.
* இதுவே T3 மற்றும் T4 ஹார்மோன்களின் அளவு குறைவாக இருந்து, TSH ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், அது ‘ஹைப்போதைராய்டிஸம்’. இதற்கு ஹார்மோன் சுரப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படும். மேலும், உணவில் அயோடைஸ்டு உப்பின் அளவைக் குறைக்கப் பரிந்துரைக்கப்படும்