தும்மினால் தொற்றுமா?
03 Jul,2018
திடீரெனத் தும்மல் வரும். அலர்ஜியா, ஜலதோஷமா என்று காரணம் தெரியாமலேயே மாத்திரையை விழுங்குவீர்கள். அதற்கு முன் இரண்டுக்குமான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். சளி, ஜலதோஷம் என்பது ஒரு வகைத் தொற்றால் ஏற்படுவது. ஒரு சின்னக் கைகுலுக்கலிலோ, தும்மலிலோகூட அது அடுத்தவருக்குப் பரவிவிடும். அது வெறும் ஜலதோஷமாக இருந்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக ஒரு வாரத்தில் காணாமல் போய்விடும். ஆனால், அலர்ஜி என்பது முற்றிலும் வேறு. இது பரவாது. தூசு, சிறு துகள்கள் என ஏதாவது மூக்கின் துவாரத்தின் வழியே செல்லும்போது அதை ஆபத்து என நம் எதிர்ப்பு சக்தி ஒதுக்கிவிடும். அதனால் அலர்ஜி ஏற்படும். காரணம் எதுவானாலும் சுயமருத்துவம் செய்யாதீர்கள்.
ஆயுள்: சளி, ஜலதோஷம் எல்லாம் மூன்று நாள்களிலிருந்து அதிகபட்சமாக 14 நாள்கள் வரை இருந்து மறைந்துவிடும். ஆனால், அலர்ஜி என்பது ஒரு தொடர்கதை. உங்களுக்குத் தூசு அலர்ஜி என்றால், தூசு படும்போதெல்லாம், கண் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் பிரச்னைகள் ஏற்படும்.
காலம்: சளி, ஜலதோஷம் ஆகியவை கிருமித்தொற்று ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாள்களில் பரவத் தொடங்கும். அலர்ஜியைப் பொறுத்தவரையில் ஒவ்வாத சிறு தூசு என்றாலும் உடனே தொற்றிக்கொண்டு நம்மைப் படுத்திவிடும்.
பருவநிலை: வெயில், மழை என சீதோஷ்ண நிலை மாறுபாடுகளால் சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படலாம். குறிப்பாக மழைக்காலத்தில் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருக்கும். அலர்ஜிக்குக் காலம், நேரமெல்லாம் கிடையாது. ஒவ்வாமையைத் தூண்டும் சின்ன விஷயம்கூட அதைத் தீவிரப்படுத்தலாம்.