எல்லாம் எலும்பின் செயல்
13 Jun,2018
மனித உடலின் ஆகப்பெரிய ஆச்சர்யம் என்றால், அது எலும்புதான். நம் இயக்கத்துக்கும், பலத்துக்கும் அடிப்படையாக இருப்பதும் எலும்புகள்தாம். எலும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
எலும்புகள் குறையும்
பிறக்கும்போது நம் உடலில் இருக்கும் 300 எலும்புகள், வளர்ந்தபிறகு 206 எலும்புகளாகக் குறைந்துவிடும். பல எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்துவிடும். இதுதான் எலும்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணமாகும்.
வளர்ச்சித்தட்டுகள்
கை மற்றும் கால்களில் உள்ள நீண்ட எலும்புகளின் முடிவில் வளர்ச்சித் தட்டுகள் இருக்கும். அவை திறந்திருக்கும்வரை மட்டுமே உடலில் வளர்ச்சி ஏற்படும். ஆண்களுக்கு டீன் ஏஜின் முடிவிலும், பெண்களுக்குப் பருவமடைந்தது முதல் இரண்டு வருடங்களிலும் இந்த வளர்ச்சித் தட்டுகள் மூடிவிடுகின்றன.
உடற்பயிற்சி முக்கியம்
பொதுவாக, 30 வயது வரை மட்டுமே எலும்புகள் அடர்த்தியாக இருக்கும். போதிய உடற்பயிற்சி செய்யாவிட்டாலோ, கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் போதிய அளவுக்குக் கிடைக்காவிட்டாலோ 30 வயதுக்கு மேல் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். அதனால் ஆரோக்கியமான எலும்புகளுக்கு அத்தியாவசியமான ஒன்று, உடற் பயிற்சி. தினசரி நடைப்பயிற்சிகூடப் போதுமானது.
பலமாகும் எலும்பு
காயமடைந்த மேற்பரப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய எலும்பை உருவாக்கும். சிலநேரங்களில், புதிய எலும்புகள் பழையதைவிட பலமாகவே இருக்கும்.
எல்லாம் செய்யும் எலும்புகள்
நாம் நகர்ந்து செல்ல உதவுவது எலும்புகள்தாம். அதுமட்டுமல்லாமல் மூளை, இதயம் மற்றும் நுரையீரலைப் பாதுகாப்பதும் அவை தாம். ரத்தசெல்களை உருவாக்குவதோடு, உடல் இயங்கத் தேவையான அனைத்து கனிமங்களையும் சேகரித்து ஒழுங்குபடுத்துவதும் எலும்புகளே!
நீளமான எலும்பு
தொடை எலும்புதான் உடலிலுள்ள மிக நீளமான எலும்பாகும். அதேபோல் காதுகளின் நடுப்பகுதியில் உள்ள ஸ்டேப்ஸ் குருத்தெலும்பே மிகச்சிறிய எலும்பு (0.11 இன்ச்).
மொபைல் பார்க்க உதவும் எலும்பு
நம் கை, விரல்கள் மற்றும் நாடிப்பகுதியில் மட்டுமே 54 எலும்புகள் உள்ளன. நீங்கள் எழுதுவதற்கும் மொபைல் பார்ப்பதற்கும் பியானோ வாசிப்பதற்கும் உதவுவது இவைதாம்.
வாழும் திசு
எலும்புகளில் உள்ள `கொலாஜென்’ அவ்வப்போது தன்னைத்தானே நிரப்பிக்கொள்ளும். இதனால் ஏழாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் எலும்புக்கூடு புதிதாகிறது.
பல்லும் எலும்புதான்
எலும்புகளைப் போன்றே கால்சியமும் கனிமங்களும் இருப்பதால் பற்களும் எலும்புக்கூட்டின் ஒரு பகுதியே. ஆனால் பற்களில் `கொலாஜென்’ இல்லாததால் எலும்புகளின் பலமும் வளைவுத் தன்மையும் பற்களில் இல்லை.
பெண்ணுக்குச் சிறப்பு எலும்பு
ஆணுக்கும் பெண்ணுக்கும் எலும்புக்கூட்டின் அமைப்பு ஒரே மாதிரி இருப்பது ஆச்சர்யமே. ஆனாலும், பெண்ணின் உடலில் உள்ள `பெல்விஸ்’ (Pelvis) எலும்பின் அளவு, வடிவம் எல்லாம் குழந்தைப் பிறப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அசையா மூட்டு
எலும்புகள் இணையும் பகுதி மூட்டு. சில மூட்டுப்பகுதிகள் (கால் மூட்டு போல) அசையும் தன்மை கொண்டிருக்கும். மற்றவை (மண்டை ஓட்டில் உள்ள மூட்டுகள்) எப்போதுமே அசையாது.
குறுத்தெலும்பு பத்திரம்
எலும்புகளைத் தசைகளும் தசை நார்களுமே தாங்கிப்பிடிக்கின்றன. அதேபோல் எலும்புகளைத் தலையணைபோல இருந்து ஏந்துவது குறுத்தெலும்புகளே. இந்தக் குறுத்தெலும்புகள் பலவீனமாகும் போதுதான், மூட்டுவலி (Arthritis) வருகிறது.
வேடிக்கையான எலும்பு
முழங்கையில் இருக்கும் அல்நார் (Ulnar) தான் ‘வேடிக்கையான எலும்பு’ என அழைக்கப்படுகிறது. பெயர்தான் எலும்பே தவிர, உண்மையில் அது ஒரு நரம்பு. முழங்கையில் அடிபடுவதால் கூச்சம் ஏற்படுவதுபோன்ற வலி வரும். அதனால் அதை ‘வேடிக்கையான எலும்பு’ என்றும் சொல்வார்கள்.