'புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்' - ஆராய்ச்சி முடிவுகள்
02 Jun,2018
தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான "குவாண்டம் துகள்கள்" (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து "குவாண்டம் துகள்"களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.
இக்கண்டுபிடிப்பின் முக்கிய ஆய்வுக் குழுவினர்- (இடது புறம் இருந்து வலது புறம்) முனைவர் கேத்ரின் டி காஸ்ட்ரோ, முனைவர் மாத்யூ டேவிஸ், முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.
"தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்" என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.
"தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்" என முனைவர் சுதாகர் கூறுகிறார்.
மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.
இந்திய ஆய்வுக் குழுவில் முக்கிய பங்காற்றியவர்கள், முனைவர் மைதிலி ஞானமங்கை பாலசுப்ரமணியம் (இடம் இருந்து மூன்றாவது), மற்றும் கவிதா சிவாஜி (இடம் இருந்து நான்காவது)
இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.
தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.
வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.
ஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.
மிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் "குவாண்டம் துகள் தொழிற்சாலை"யினை நிறுவுவது.
ஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.
மேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்