குடலிறக்கம் எனப்படும் ‘அம்பிலிக்கல் ஹெர்னியா’ (Umbilical Hernia),
26 May,2018
திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்று. உங்கள் வீட்டு உறவுப்பெண்களில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை தேவையா? தேவை என்றால் லேப்ராஸ்கோபி (Laparoscopy) அல்லது ஓபன் சர்ஜரி (Open Surgery) ஆகிய இரண்டில் எது சிறந்தது? என்பனபோன்ற
சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரும், பொது அறுவைசிகிச்சை நிபுணருமான ஆனந்தியிடம் கேட்டோம்.
“ஹெர்னியா அல்லது குடலிறக்க நோய் என்பது உடலில் உள்ள பலவீனமான துளைகளின் வழியாக உடல் உறுப்புகள் வெளியே வருவது; குறிப்பாக, குடல் வெளியே வருவதையே அப்படி அழைப்பார்கள். இதில், அம்பிலிக்கல் ஹெர்னியா என்பது தொப்புள் மற்றும் அதன் அருகே ஏற்படும் குடலிறக்க நோயாகும். இது ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் என்றாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இது பிறவியிலோ அல்லது இடைப்பட்ட காலத்திலோகூட வரலாம். பிறந்த குழந்தைகளில் சிலருக்குத் தொப்புள் வீங்கியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதுவும் அம்பிலிக்கல் ஹெர்னியாதான்.
குழந்தைக்கும் வருமா அம்பிலிக்கல் ஹெர்னியா?
தாயின் கருப்பையில் குழந்தை இருக்கும்போது, குழந்தையின் வயிற்றுக்குள் இருக்கவேண்டிய உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் தொப்புள் துளை வழியாக வயிற்றுக்கு வெளியே உள்ள ஒரு பையில்தான் இருக்கும். குழந்தை வளர வளர, வெளியே இருக்கும் பையில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகக் குழந்தையின் வயிற்றின் உள்ளே போக ஆரம்பித்துவிடும். குழந்தை பிறக்கும் முன்பே எல்லா உறுப்புகளும் உள்ளே சென்றுவிடும். பிறந்தவுடன் அந்தத் துளை மூடிவிடும். ஆனால் சில நேரங்களில் சில உறுப்புகள் வயிற்றுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிடும். இதைத்தான் பிறவியிலேயே வரும் `அம்பிலிக்கல் ஹெர்னியா’ என்கிறோம்.
குழந்தையின் தொப்புள் ஓட்டை ஒன்று முதல் இரண்டு சென்டிமீட்டர் என்ற அளவில் இருந்தால், குழந்தை பிறந்த மூன்று வருடங்களுக்குள் தொப்புளை ஒட்டியபடிக் குடலைவிட்டு வெளியே வந்திருக்கும் சில உறுப்புகள் மறுபடியும் குடலுக்குள் சென்றுவிடும். தொப்புளில் வீக்கம் எதுவும் இல்லாமல் சரியான நிலைக்குத் திரும்பிவிடும். 90 சதவிகிதக் குழந்தைகள் இப்படிச் சரியான நிலைமைக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் சிலருக்குத் தொப்புள் துளை மூடாமல் வீங்கியபடி இருக்கும். அவர்கள் ஒவ்வொருமுறை இருமும்போது குடல் துருத்திக்கொண்டு வெளியே வந்து போகும். இப்படி இருந்தாலும் சிலருக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. ஆனால் சிலநேரங்களில் இருமினால் வெளியே வரும் குடல், தொப்புள் துளைக்குள் மாட்டிக்கொண்டு விடும். அப்போது மிகுந்த வலியையும் அசௌகர்யமான உணர்வையும் சந்திக்க நேரிடும். தொப்புளில் மாட்டிக்கொள்ளும் குடல் அழுகிப்போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில்தான் உயிர் காக்கும் அவசர அறுவைசிகிச்சை தேவை.
பிறவியிலேயே வரும் `அம்பிலிக்கல் ஹெர்னியா’ ஒருபக்கமிருக்க, இடையில் வரும் `அம்பிலிக்கல் ஹெர்னியா’ பெண்களை அதிகம் பாதிக்கிறது. அதாவது உடலின் எடை அதிகமாக இருந்தாலோ, நுரையீரல் பாதிப்பால் தொடர்ந்து இருமும்போதோ, மிகவும் கனமான பொருள்களைத் தூக்கும்போதோ கருவுறும் நேரங்களிலோ (மூன்று அல்லது நான்கு முறை கரு உண்டாகிறவர்கள், ஒரே நேரத்தில் இரட்டைக் கரு அல்லது மூன்று கருவைச் சுமக்கிறவர்கள்) வயிறு பலவீனமாவதுடன் வயிற்றின் அழுத்தமும் அதிகமாகும். அதுமட்டுமல்ல வெவ்வேறு காரணங்களுக்காக லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யும்போது, முதலில் தொப்புள் அருகே துளை போடப்படும். இதனால் வயிற்றின் அந்தப் பகுதி பலவீனமடைவதால், அந்த இடத்திலும் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இருமுதல், உடல்எடை அதிகரிப்பது போன்ற காரணங்களால் வயிற்றின் அழுத்தம் அதிகமாவதால் வயிற்றின் தசைகளுக்கு இடையிலான இறுக்கம் குறைந்து, தளர்ந்து நாளடைவில் விரிவடைய ஆரம்பிக்கும். தசைகள் விரிவடையும்போது, அந்த இடத்தில் ஓர் இடைவெளி உண்டாகும். அந்த இடைவெளி வழியாக குடல் பகுதியைச் சேர்ந்த உறுப்புகள் அல்லது கொழுப்பு போன்றவை வெளியே வந்து ஒரு பை போல மாறி ஹெர்னியாவாக உருவாகி நிற்கும். பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ, கனமான பொருள்களைத் தூக்கும்போதோ அந்தப் பையானது பலவீனமான தொப்புள் துளை வழியாக வெளியே வரும். இதனால் தொப்புள் வீக்கமாகத் தெரியும். பிறகு கையால் உள்ளே தள்ளிவிட்டால் அவை உள்ளே சென்றுவிடும்.
இப்படி அதுவாக வந்து அதுவாக உள்ளே சென்றுவிட்டால் பிரச்னை இல்லை. சில நேரங்களில் கையால் உள்ளே தள்ளிவிட்டாலும் உள்ளே போகாமல் குடலோ அல்லது கொழுப்போ, தொப்புளுக்குள் மாட்டிக்கொண்டு விடும். இப்படி மாட்டிக்கொள்வதால் அந்தத் திசுக்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு அவை அழுகிப்போகலாம். அதுபோன்ற நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவசர அறுவை சிகிச்சைதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்
யாருக்கு அறுவை சிகிச்சைகள் தேவை?
தொப்புள் துளை ஒரு செ.மீ-க்கு கீழ் உள்ளவர்களுக்கு வலி ஏதும் இல்லை என்றால் அறுவை சிகிச்சை தேவையில்லை. பெரிய தொப்புள் துளை உள்ளவர்களும், வலி அதிகம் உள்ளவர்களும் (துளையின் அளவு எதுவாக இருந்தாலும்) அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
`எனக்கு அம்பிலிக்கல் ஹெர்னியா வருகிறது.பிறகு அமிழ்த்திவிட்டால் உள்ளே போய்விடுகிறது. மற்றபடி இதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று சொல்பவர்களுக்கு `லேப்ராஸ்கோபி’ முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த மறுநாளே பழைய நிலைக்குத் திரும்பிவிடலாம். சிலருக்கு மிகப்பெரிய தொப்புள் துளை இருக்கலாம். இன்னும் சிலருக்கு ஹெர்னியா பை உள்ளே செல்லாமல் வெளியிலேயே மாட்டிக்கொண்டு இருக்கலாம். இதுபோன்ற நிலையில் உள்ளவர்களுக்கும் அதிக வலியால் அவதிப்படுவோருக்கும் தொப்புளுக்கு அருகே உள்ள பகுதி திறக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உள்தையல் அல்லது நைலான் வலை (Prolene Mesh) வைக்கப்பட்டு அந்த இடம் சீராக்கப்படும்