ஜிம்முக்குப் போகாமல் ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கலாம்’, இந்த ஜூஸைக் குடிங்க, கொஞ்சம் கொஞ்சமா தொப்பை கரைஞ்சுடும்ஸ’, `இந்த பெல்ட்டை தினமும் அரை மணிநேரம் வயித்துல கட்டிக்கிட்டா மூணே வாரத்துல அழகான இடுப்புக்கு உத்தரவாதம்’ – இதுபோன்ற விதவிதமான விளம்பரங்களைச் செய்து
வருகின்றன பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள். ஒரு காலத்தில் முக அழகு, சருமப் பராமரிப்பு எனச் சுற்றிச் சுழன்று படையெடுத்த விளம்பர நிறுவனங்கள், இன்றைக்கு வயிற்றை அழகாகக் காண்பிக்க இப்படியெல்லாம் மெனக்கெடுகின்றன. அழகான உடலமைப்பு லிஸ்ட்டில் தொப்பை இல்லாத வயிறும் சேர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.
`தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்காமல் கண்டவற்றையும் வயிற்றில் கொட்டிக்கொண்டு, தொப்பை விழுந்த பிறகு ஜிம்மே கதியெனக் கிடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். சிலரோ தொப்பையைப் பற்றிக் கவலைப்படாமல், சற்று பெரிய சட்டையைப் போட்டு அட்ஜஸ்ட் செய்துகொள்வது அல்லது பெல்ட்டை போட்டுக்கொள்வது எனச் சமாளிக்கிறார்கள். ஆனால், தொப்பை (Central Obesity) வெறும் அழகுப் பிரச்னை மட்டுமல்ல, அதை மறைத்துக்கொண்டு தப்பிப்பதற்கு. `இது நீங்கள் வயிற்றில் சேமித்துவைக்கும் தேவையற்ற கொழுப்பு. தொப்பை, இதயநோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகி, உயிருக்கே உலை வைக்கலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். தவறான உணவுப் பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்துபோவதும் சேர்ந்து நவீன இந்தியர்களை, `தொந்தியர்’களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரபணுரீதியாக பிற நாட்டினரைவிட, இந்தியர்களுக்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
`தொப்பை ஏற்படக் காரணம் என்னஸ யாருக்குத் தொப்பை வரும்ஸ அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்னஸ இதற்குத் தீர்வுகள் உண்டா?’ என்று இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணனிடம் கேட்டோம்.
“நம் உடலில் தோல்புறக் கொழுப்பு (Subcutaneous Fat), உட்புறக் கொழுப்பு (Visceral Fat) என இரண்டு வகைகள் உள்ளன. தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம்தான் தோல்புறக் கொழுப்பு. குடலின் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருப்பது உட்புறக் கொழுப்பு. பொதுவாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்குவதைத்தான், `தொப்பை’ என்கிறோம்.
தொப்பை எப்படி உருவாகிறது?
உடல் என்னும் உயிர் இயந்திரம் இயங்க, ‘கலோரி’ என்ற எரிபொருள் (ஆற்றல்) தேவை. கலோரியை, நாம் உண்ணும் உணவின் வழியாக உடல் பெற்றுக்கொள்கிறது. நாள் முழுவதும் உடல் இயங்குவதற்குத் தேவையான அளவையும் தாண்டி கலோரிகள் கிடைக்கும்போது அவற்றை மூளை வீணடிக்க விரும்பாது. அவசரக் காலத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காக அவற்றைக் கொழுப்பாக மாற்றி, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைக்க உத்தரவிடும்.
பெரும்பாலும், நம் உடலிலுள்ள மரபணுக்களே (Genes), நமது உடலில் எந்த இடத்தில் கொழுப்பு செல்கள் படிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால்தான் மரபுரீதியாக பலருக்குத் தொப்பை தொடர்கிறது. அத்துடன் கொழுப்புப் படிவதற்கு ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) என்ற ஹார்மோனும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனும் காரணமாகின்றன. ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பிலும் இடுப்புக்குக் கீழேயும் அதிகமான கொழுப்புப் படியும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், அவர்களுக்கு வயிற்றிலும் கொழுப்பு படிய ஆரம்பிக்கிறது.
தொப்பையால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம்?
உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய், பக்கவாதம், புற்றுநோய் உள்படப் பல்வேறு பிரச்னைகளுக்கும் தொப்பை நுழைவாயிலாக மாறிவிடுகிறது. இதைத் தவிர பித்தப்பைக் கற்கள், மூட்டுவலி, அதீத மன அழுத்தம், கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை, தைராய்டு மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆப்பிளா, பேரிக்காயா?
இந்தியர்களில் பலருக்கு உடல் எடை சரியாக இருந்தாலும், தொப்பை காணப்படும். இப்படித் தொப்பை இருப்பதையும் உடல் பருமன் என்றுதான் கூறுகிறார்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை `ஆப்பிள் மாடல்’ என்றும் இடுப்பு மற்றும் பின்புறத்தில் கொழுப்பு சேர்வதை `பேரிக்காய் மாடல்’ என்றும் கூறுகிறார்கள். இரண்டுமே மோசமானவை என்றாலும், `ஆப்பிள் மாடல்’ உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 88 செ.மீ என்பது பெண்களுக்கு 80 செ.மீ ஆக இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும்.
தீர்வுகள் என்ன?
மரபுவழி, கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கம், உடலுழைப்பின்மை, ஹார்மோன் குறைபாடு எனத் தொப்பை வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்தால் மட்டுமே தொப்பையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மரபிலேயே தொப்பை இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றத்தால் தொப்பை மற்றும் உடல் பருமனை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு மரபியல்ரீதியாக ஹார்மோன் கோளாறு இருக்கும். அவர்கள் அதிக உடல் பருமனாக இருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே போதாது. இதற்கு வளர்சிதை மாற்றங்களைத் தூண்டும் மாத்திரைகளும் பசியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளும் இருக்கின்றன.
குறிப்பாக, பிஎம்ஐ அளவு 35-க்கு மேல் இருந்தால் லைப்போசக்ஷன் (Liposuction) என்னும் கொழுப்பு நீக்கு சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், தொடர்ந்து உடல் எடை அதிகமாகாமலிருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம். வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் சிறந்த பலன் தரும். உடற்பயிற்சி செய்வதும் முந்தைய தினத்தின் கொழுப்பை எரிக்க உதவும். ஆனால், இந்தச் சிகிச்சைகள் அனைவருக்கும் ஏற்றவை அல்ல. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாதவர்கள் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”என்கிறார் ஆர். கண்ணன்.
உணவுகளும் உதவும்
தொப்பையைக் குறைப்பதில் முறையான உணவுப் பழக்கங்களும் பின்பற்றப்பட வேண்டும்.
* முதலில் அதிக அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைப்பதுடன் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். மேலும், தண்ணீரானது வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.
* தொப்பை இருக்கிறது என்று உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்து. அது நொறுக்குத்தீனிகளை உண்ண வழிவகுத்துவிடும். சரியான நேரத்துக்கு, சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும்.
* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவுக்கு முன் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டால் உண்ணும் உணவின் அளவு குறையும்.
* காபி, டீ போன்ற பானங்களை அருந்தக் கூடாது. இதிலுள்ள கஃபைன், இன்சுலின் அளவை அதிகரித்து செரிமானத்தைத் தாமதமாக்கும். அதற்குப் பதிலாக ஹெர்பல் டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவற்றில் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.
* வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகப் பனைவெல்லம், தேன் போன்றவற்றை அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
* சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் குறுநடை போடலாம்.
* அரிசி, கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, சம்பா ரவை, ஓட்ஸ், பார்லி கஞ்சி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* தொலைக்காட்சி பார்த்தபடியோ, செல்போனில் பேசியபடியோ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சாப்பிடும் உணவின் அளவு அதிகரிக்கும். சாப்பிடும் உணவில் கவனம் செலுத்திச் சாப்பிட வேண்டும்.
* பால் பொருள்களில் கலோரிகளை அதிகரிக்கும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்து மோர், யோகர்ட் (கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்) போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சாப்பிடும் உணவில் உப்பு, எண்ணெயின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 15 மி.லி எண்ணெய் போதுமானது. சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது.
* கேக், வெள்ளை பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள், மைதா, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
* நமது அன்றாட உணவில், பழங்கள், பச்சை நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவற்றிலுள்ள நார்ச்சத்து ஜீரணமண்டல இயக்கத்தைச் சீராக்கும்.
* செயற்கைக் குளிர்பானங்கள், ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. இது, உடலில் கலோரியை அதிகரித்துத் தொப்பையை உருவாக்கும்.
* தொப்பை குறைய, தினசரி அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நீச்சல், சைக்கிள் பயிற்சியும் நல்லது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும்.
* மதுப்பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தொப்பைக்கும் இதயத்துக்கும் தொடர்புண்டு!
தொப்பை போட்டவர்களுக்கு இதய பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிற இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம், அதன் பின்னணி விளக்குகிறார்.
“அதிகக் கொழுப்பு உடலில் எங்கே இருந்தாலும் ஆபத்துதான். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கலாம். தொப்பை இருந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உள்பட என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ, அதுபோன்ற பாதிப்புகள் தொப்பை அதிகமாக இருந்து, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும் வரும். அதேபோல, உடல் பருமனாக இருப்பவர்களைவிட தொப்பை இருப்பவர்களுக்கே இதயநோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும், மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், அவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.
ஆண்களுக்கு அதிகம் ஏன்?
உடலில் மெல்லிய உறுப்புகள் இருக்கும் பகுதியில்தான் கொழுப்பு படியும். ஆண்களின் உடலில் மென்மையான பகுதி மற்றும் அதிக வேலையின்றியிருக்கும் இடம் அடிவயிறுதான். அதனால்தான் அங்கு கொழுப்பு சேர ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு அடிவயிற்றில் கர்ப்பப்பை இருப்பதால் அதன் செயல்பாடுகள் பாதிக்காதவாறு பிற இடங்களில் சேமிக்கப்படுகிறது. ஆண்களுக்கு வயிற்றிலும் பெண்களுக்குத் தொடை மற்றும் பின்புறத்திலும் கொழுப்பு சேர்கிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.