உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!
16 May,2018
ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக்காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட, சரியான நேரத்தில் பொருத்தமான நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
இப்போதைக்கு `க்ரையோபிரிசர்வேஷன்’(Cryopreservation) முறை மட்டுமே இதற்குத் தீர்வு என்கிறது மருத்துவ உலகம். நம் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எப்படிக் குறிப்பிட்ட சில நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறதோ, அதே போன்றுதான் இம்முறையும் செயல்படுகிறது. உயிரிப்பொருள்களை மைனஸ் 70 முதல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் அந்தப் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடும், செல்களின் செயல்பாடும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இதனால் எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகாத இந்த உயிரிப்பொருள்களைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடலின் செல்கள், உறுப்புகள் மட்டுமல்லாமல் முழு மனிதனையேகூட இந்த முறையில் எவ்வித மாற்றத்துக்கும் உட்படாமல் பாதுகாக்க முடியும் என்கிறது மருத்துவம்.
இது எப்படி சாத்தியம்? உறைய வைத்தல் மட்டுமே ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாக்குமா? செல்களை உறையவைக்கும்போது அதற்குள் இருக்கும் தண்ணீர் முதலில் உறைய ஆரம்பிக்கும். இதனால் செல்களுக்குள் இருக்கும் திரவத்தின் அடர்த்தியும் அளவும் குறைவதால் செல்லுக்குள் அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். செல்லினுள் மூன்றில் இரண்டு பங்கு நீர் முழுவதும் உறைந்த பிறகு ஏற்படும் வெற்றிடத்தால் செல்லின் வடிவம் முழுவதும் உருக்குலையும் அபாயம் உள்ளதே? ஆம்ஸ உறையவைக்கப்பட்ட உயிரிப்பொருள் வேறெந்த பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதற்காகத்தான் cryoprotectant என்கிற பாதுகாப்பான்கள் உதவுகின்றன. சுக்ரோஸ், ஆல்கஹால், கிளைகால், சில அமினோ அமிலங்கள் போன்றவை பாதுகாப்பான்களாக உபயோகப்படுத்தபடுகின்றன. இப்படிப் பதப்படுத்தப்பட்ட உயிரிப்பொருள்கள் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுவதன் மூலம் நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளை மீண்டும் உருகச் செய்வதன் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரமுடியும். ஆனால், இப்படிச் செய்யும்போது செல்லுக்குள் வெற்றிடம் ஏற்படுவதால் செல்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.
அண்டார்டிகா பகுதியில் காணப்படும் அண்டார்டிகா பூச்சி ஒன்று மேற்கூறிய பிரச்னைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கைச் சுழற்சியில் இந்தப் பூச்சி பல நாள்களை இப்படி உறைநிலையிலே கழிக்கிறது, எவ்வித பாதிப்பும் இல்லாமல்! இந்தப் பூச்சிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? யோசித்தபோதுதான் பாதுகாப்பான்கள், அதாவது கிளிசராலும், குளுகோசும் இயல்பாகவே சுரப்பது கண்டறியப்பட்டது. இந்தப் புரதங்கள் பெரும்பான்மையான நீரை உடலிலிருந்து வெளியேற்றும் சவ்வாகச் செயல்படுவதுடன், அழுத்தத்தைச் சமம் செய்வதும் கண்டறியப் பட்டிருக்கிறது. நீரின் அளவும், அழுத்தத்தின் அளவும் சமன் செய்யப்படுவதால் மேற்கூறிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் இந்தப் பூச்சிகளால் சமாளிக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது நீரைப் பெருமளவில் வெளியேற்றுவதால் மனிதர்களில் இந்த நடைமுறை சாத்தியப்படவில்லை. பூச்சியின் உடலில் 70 சதவிகித அளவு நீரை வெளியேற்றினாலும் அதனால் உயிர் வாழ முடியும். மனித செல்களிலிருந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமான நீரை வெளியேற்றமுடியாது என்னும் நிலைதான் மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்க்க முடியாததாக மாற்றியுள்ளது.
இருப்பினும், க்ரையோபிரிசர்வேஷன் முறை சில குறிப்பிட்ட வகை செல்களைத் தவிர மற்ற செல்களில் பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கூடியதுதான். இந்த நம்பிக்கையே இம்முறையை நடைமுறைச் சாத்தியமாக்கியுள்ளது. மேற்கூறிய பிரச்சனைகளுக்கான தீர்வு எதிர்காலத்தில் கண்டறியப்படும் பட்சத்தில், டைனோசர் அழிந்தது போல எந்த இனமும் எதிர்காலத்தில் அழியாது. ஏனெனில் எல்லா செல்களையும் இந்த க்ரையோபிரிசர்வேஷன் மூலம் பாதுகாத்து விடலாம்.