ஆஸ்பர்ஜஸ் சிண்ட்ரோம்.
29 Apr,2018
சமீபகாலமாக மருத்துவம் தொடர்பான திரைப்படங்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. புரியாத, கேள்விப்படாத நோய்களைப் பற்றிய கதையை சுவாரஸ்யமாகவும் படமாக்கி மனதில் பதியவும் வைத்துவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் வெளிவந்திருக்கும்
மலையாளப் படம்தான் Hey Judeஸ
Asperges syndrome பிரச்னை கொண்ட இளைஞராக நிவின் பாலியும், Bipolar disorder கொண்ட இளம்பெண்ணாக த்ரிஷாவும் நடித்திருக்கிறார்கள். அதீத சந்தோஷம் அல்லது அதீத துக்கம் என்ற இரண்டு எதிரெதிர் நிலைகளுக்கிடையிலான ஊசலாட்டமே Bipolar disorder என்ற இருதுருவக் கோளாறு என்று நமக்குத் தெரியும். Asperges syndrome என்பது என்ன என்று மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் கேட்டோம்ஸ
‘‘நரம்பு வளர்ச்சி குறைபாடான ஆட்டிஸத்தோடு தொடர்புடையதுதான் ஆஸ்பர்ஜஸ் சிண்ட்ரோம். குழந்தைப் பருவத்தில் மூளை உருவாகும் நிலையில் ஏற்படும் குறைபாடு இது. ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உருவ அமைப்பு, செயல்பாடுகளை வைத்து அடையாளம் காண முடியும். ஆஸ்பர்ஜர் சிண்ட்ரோம் உள்ளவர்கள் சாதாரண உருவ அமைப்போடு இருந்தாலும், சற்றே வித்தியாசமான குணாதிசயங்களோடு தனித்துவமாகத் தெரிவார்கள்.
மற்றவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் எதிர்வினையாற்றுவதற்கு கஷ்டப்படுவார்கள். ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது, பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவது, அணியும் உடை, வாட்ச் என இவர்களின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அதேநேரத்தில் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்வதிலும், செய்வதிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்வார்கள். உணவு விஷயத்தில் தினமும் குறிப்பிட்ட நேரத்திலும், தனக்கு பிடித்தமானதை மட்டுமே உண்ணக்கூடியவர்கள். நேரம் தவறினாலோ, அல்லது சற்று மாறியிருந்தாலோ அன்று உணவு உண்பதையே தவிர்த்துவிடுவார்கள்.’’
இந்த குறைபாடுள்ளவர்களை எவ்வாறு கையாள்வது?‘‘இவர்களை மாற்றுகிறேன் என்று நினைத்து கட்டாயப்படுத்தக்கூடாது, அவர்களின் மாறுபட்ட குணாதிசயங்களை புரிந்துகொண்டு கொஞ்சம், கொஞ்சமாக பழக்கங்களை மாற்ற முயற்சிக்கலாம். அவர்களின் திறமைகளைஅடையாளம் கண்டு அதில் பயிற்சிகள் கொடுத்தால் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இதுதான் சிகிச்சையும் கூட!’’