துரித உணவுகளுக்கு எதிரான பிரசாரங்கள் அண்மையில் தொடங்கியதல்ல. ஆரம்பம் முதலே துரித உணவுகளின் தீங்குகளை உணர்ந்து ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுவையூட்டிகள், பதப்படுத்திகள், உப்புகள், நிறமிகள்ஸ என நமது உணவுத் தட்டில் துரிதமாக இடம்பிடிக்கும் துரித
உணவுகளுக்குள் ஒளிந்திருக்கும் விஷயங்களோ ஏராளம். அவற்றில் குறிப்பாக மோனோசோடியம் குளூடமேட் (Monosodium glutamate) எனும் சுவையூட்டி குறித்து நாம் அக்கறைகொள்ள வேண்டியிருக்கிறது. இது சுருக்கமாக `எம்.எஸ்.ஜி’ (MSG) என்று அழைக்கப்படுகிறது. குளூடமிக் அமிலம் எனும் அமினோ அமிலத்தின் உப்பு வடிவம்தான் எம்.எஸ்.ஜி. மோனோசோடியம் குளூடமேட் சார்ந்த பல்வேறு சர்ச்சைகள் நெடுங்காலமாக நடைப்பெற்று வருகின்றன.
வரலாறு
ஜப்பானைச் சேர்ந்த கிகுனே இகிடா (Kikunae Ikeda) என்பவர்தான் 1908-ம் ஆண்டு முதன்முதலில் வெள்ளை நிறத்திலான மோனோசோடியம் குளூடமேட்டின் சுவையூட்டும் தன்மை குறித்து அறிமுகம் செய்தார். `அதிகச் செலவில்லாமல் உணவுகளுக்குச் சுவையூட்டப் பயன்படும் பொருள்’ என்ற வகையில் ஜப்பான் மக்களிடையே இது பரவியது. இதைக் கண்டுப்பிடித்தவர், ’யுமாமி’ (ஜப்பானிய மொழியில் ’சுவையானது’) என்று ’எம்.எஸ்.ஜி’-க்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார். ’யுரேகாஸ யுரேகாஸ’ என்று ஆர்க்கிமிடிஸ் உற்சாகமானதைப்போல, ’யுமாமிஸ யுமாமிஸ’ என்று உற்சாகத்தில் கிகுனே இகிடா கூச்சலிட்டிருக்கலாம்!
உணவோடு பின்னிப் பிணைந்த எம்.எஸ்.ஜி
ஜப்பானிய இல்லத்தரசிகளைக் குறிவைத்த வியாபாரம் பட்டையைக்கிளப்ப, விரைவில் அனைத்துச் சமையலறைகளிலும் நீக்கமற இடம்பிடித்தது எம்.எஸ்.ஜி. உணவக மேஜைகளிலும் கைக்கெட்டும் தூரத்தில் அது காட்சிப்படுத்தப்பட்டது. ஜப்பானைத் தொடர்ந்து தைவான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தைவானில் பெரும்பாலான உணவுகளில் எம்.எஸ்.ஜி சேர்க்கப்பட்டு சுவையற்ற உணவுகளுக்குப் புதுமையான சுவையைக் கொடுத்து, மக்களின் நாவோடு ஒன்றிணைந்தது. பல்வேறு நாடுகளுக்குப் பரவும்போது, அங்குள்ள உணவு அரசியல் சார்ந்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியவண்ணம் இருந்தன.
சுவைக்கு அடிமை
’மனிதன் சுவைக்கு அடிமை’ என்பதைப் புரிந்துகொண்ட பல பன்னாட்டு உணவுப்பொருள் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் மோனோ சோடியம் குளூடமேட்டை சுவையூட்டியாகப் பயன்படுத்துகின்றன. இதன் தனித்துவம் என்னவென்றால், பிரத்யேக சுவையைக் கொடுப்பதோடு, திரும்பத் திரும்ப அதே உணவை உண்ணத் தூண்டும் வகையில் செயலாற்றும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம்போல, மதிமயக்கும் செயற்கைச் சுவையூட்டி கலந்த துரித உணவுகளுக்கு அடிமையானவர்களும், போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் போன்றவர்கள்தாம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
எதில் கிடைக்கிறது?
காளான், சீஸ், தக்காளி, சோயா சாஸ் போன்றவற்றிலுள்ள புரதங்களில் இயற்கையாகவே மோனோசோடியம் குளூடமேட் அடங்கியிருக்கும். கவர்களில் அடைக்கப்பட்ட சிப்ஸ், சூப் வகைகள், ரெடிமேடாகக் கிடைக்கும் குழம்பு மிக்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உடனடியாகத் தயாராகும் நூடுல்ஸ் மற்றும் அனைத்து வகையான துரித உணவுகளிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது. மேற்சொன்ன அனைத்திலும் கிடைக்கும் பிரத்யேகச் சுவைக்கு அதில் கலக்கப்படும் எம்.எஸ்.ஜி-தான் மிக முக்கியக் காரணம்.
பாதிப்புகள்ஸ
சீன வகை உணவுகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த எம்.எஸ்.ஜி,, இப்போது அனைத்து வகை உணவுகளிலும் நீங்காமல் இடம்பிடிக்கிறது. அதிகளவில் இதனை உட்கொள்ளும்போது, தலைவலி, மார்புப் படபடப்பு, தோலில் அரிப்பு போன்றவை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் துன்பத்தை அதிகரிக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலத்தைத் தூண்டி, பாதிப்புகளை உண்டாக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் உட்கொண்டால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா வியாதிகளின் எண்ணிக்கைப் பெருகுவதாக `ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம்’ (Journal of Nutrition and Metabolism) ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.
கர்ப்பிணிகளும் குழந்தைகளும்
கர்ப்பிணிகளும் குழந்தைகளும் எம்.எஸ்.ஜி சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், இன்றையச் சூழலில் குழந்தைகளின் விருப்ப உணவாக இருக்கும் துரித உணவுகள் அனைத்திலும் எம்.எஸ்.ஜி-யின் தாக்கம் அதிகமிருக்கிறது. துரித உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். தொடர்ந்து எம்.எஸ்.ஜி கலந்த உணவுகளுக்கு அடிமையாகும்போது, ’சாப்பிட்டது போதும்’ என்று மூளைக்கு சிக்னல் கொடுக்கும், பசியுணர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய லெப்டின் (Leptin) ஹார்மோனின் அளவு குறையுமாம். பிறகென்னஸ அன்லிமிடெட் மீல்ஸ்தான்! கட்டுப்பாடற்ற உணவு உடல் பருமனை ஏற்படுத்தும்.
’சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்’ (Chinese Restaurant Syndrome) எனப் பெயரிட்டு வகைப்படுத்தும் அளவுக்கு எம்.எஸ்.ஜி சேர்ந்த சீன உணவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைபாரம், குமட்டல், வயிற்றுவலி, அரிப்பு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இதை, ’சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோ’ என்பதைவிட ’எம்.எஸ்.ஜி சிண்ட்ரோம்’ என அழைத்தால் சரியாகயிருக்கும். சீன உணவுகளில் மட்டுமா இப்போது எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது?
அளவிற்கு மீறினால்..?
’ஓர் உணவுப் பொருளில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படாது’ என்பது உணவுப் பெரு நிறுவனங்களின் வாதம். எஃப்.டி.ஏ-வும் அதையே முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், நாம் ஆசை ஆசையாகச் சாப்பிடும் அனைத்து துரித உணவுகளின் மூலமும் சிறிது சிறிதாக அவை உட்சென்றால் நிச்சயம் பாதிப்புதானே! காலை முதல் இரவு வரை நாம் சாப்பிடும் உணவுகளை அலசி ஆராய்ந்தால், எவ்வளவு செயற்கைச் சுவையூட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாவிலிருந்து ஆழமான செரிமானப் பகுதிக்குள் நழுவிச் செல்கின்றன என்பது தெரியவரும்.
`கொஞ்சம் டிகாக்ஷன் தூக்கலாகப் போட்டு காபி கொடுங்கஸ’ என்பதுபோல, ’எம்.எஸ்.ஜி தூக்கலாகப் போட்டு சீன உணவுகளைப் பரிமாறுங்க’ என்று கேட்டு அதன் சுவைக்கு மயங்கிய கூட்டம் பன்னாட்டு உணவகங்களில் காத்துக்கிடக்கிறது. மளிகைக் கடைகளில் உப்பு, மிளகாய் கிடைப்பதுபோல, எம்.எஸ்.ஜி தாராளமாகக் கிடைக்கிறது. சமையல் பொருள்களை வாங்கும்போது, சர்வ சாதாரணமாக எம்.எஸ்.ஜி-யின் கம்பெனி பெயரைச் சொல்லி கேட்டு வாங்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகம்.
எம்.எஸ்.ஜி எதிர்காலத்தில் ரேஷன் கடைகளில் கிடைக்காமல் இருந்தால் சரி. உணவுக்கு சுவை மற்றும் நறுமணத்தை வாரி வழங்குவதோடு, நோய்கள் வராமலும் தடுத்து நிறுத்தின நமது பாரம்பர்ய நறுமணமூட்டிகள். செயற்கையாகக் கிடைக்கும் எம்.எஸ்.ஜி பிரத்யேகச் சுவையைத் தரலாம். ஆனால், நோய்களுக்கு ஆதாரமாக விளங்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை வீட்டுச் சமையலறையினுள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
எம்.எஸ்.ஜி சேர்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடனடியாகவும் பாதிப்புகள் உண்டாகலாம்; பல நாள்கள் கழித்தும் உண்டாகலாம். எனவே, இதை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தனியாகக் கொஞ்சம் எம்.எஸ்.ஜி-யைச் சுவைத்துப் பாருங்கள். பல்வேறு துரித உணவுகளின் அடிப்படைச் சுவையின் சூட்சுமம் தெரியவரும். தங்கள் உணவுகளின் பிரத்யேக சுவைக்கான ஆதாரத்தை (எம்.எஸ்.ஜி-யை) பல ஆண்டுகளாக சில நிறுவனங்கள் மறைபொருளாக வைத்திருந்தனவாம்!
ஐந்து சுவைதானா?
எம்.எஸ்.ஜி-யின் சுவை பல ஆராய்ச்சியாளர்களால் ஐந்தாம் சுவையாக அங்கீகரிக்கப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என ஆறு சுவைகளை அடிப்படையாகக்கொண்டு உணவியல் நுணுக்கங்களை வடிவமைத்த நமது மரபுக்கு, இதென்ன புதிதாக ’ஐந்தாம் சுவை’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், நீங்கள் மரபின் வழி ஆரோக்கியமாக பயணம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். பயணம் சிறக்க வாழ்த்துகள்!