சோர்வு
14 Mar,2018
மனித உடலும் எந்திரம் போலத்தான். ஓரளவுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் பழுதாகிவிடும் ஆபத்து உண்டு. உடல் சோர்ந்து, உற்சாகம் இழப்பது என்பது ஓய்வு அவசரம் என்பதற்கான அலாரம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், வாகனம் ஓட்டுபவர்கள், கலைத்துறையினர் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வரைகூடப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் மெள்ள மெள்ள நோய்கள் உருவாகிப் பிணிகளின் பெட்டகமாக அவர்களின் உடல் மாறிவிடுகிறது.
முடி கொட்டுவதில் தொடங்கிப் பாத வெடிப்பு வரை எல்லா நோய்களிலும் உங்களின் பணிச்சூழல் சம்பந்தப்பட்டுள்ளது என்கிறார் பொது மருத்துவர் அனன்யா. அவர் சொல்லும் தீர்வுகள் இங்கேஸ
“ஒரே இடத்தில் அமர்ந்து இரவும் பகலும் தொடர்ந்து வேலை செய்வதால் உடல் உஷ்ணத்தில் தொடங்கி இதய நோய் வரை பல்வேறு பாதிப்புகள் வரலாம். இது மனநலனைப் பாதிக்கிறது. ஆரம்பத்தில் வேலையின் மீது எரிச்சல், கோபம் உண்டாகி நாளடைவில் உடன் பணிபுரிவோரிடம் தொடர்புகொள்வதில் சிக்கல் உண்டாகி மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது மனநோயாகவே மாறிவிடுகிறது. ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், தூக்கமின்மை, பல மணி நேரம் உட்கார்ந்தநிலையில் பணியாற்றுவது, போதிய தண்ணீர் குடிக்காதது, மலக்கட்டு போன்றவை பணிச்சுமையால் ஏற்படும் ஆபத்துகளே. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோய்களை உண்டாக்கிவிடும். சோர்வினால், சுவாசம் தடைப்பட்டு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும் ஆபத்தும் உண்டு. மூளை மந்தமாகிவிடும். கண்கள் எரியும். சரியான தூக்கமின்மையால் தலைவலி, தலைப்பாரம் ஏற்படும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் செரிமானக்கோளாறு உருவாகி நாளடைவில் வயிற்றில் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
முதுகு வலி, எடை அதிகரிப்பு, மூட்டு வலி, சர்க்கரைநோய், இதயநோய், ஆண்களுக்கு தாம்பத்யக் குறைபாடு, பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை ஓய்வில்லாமல் பணியாற்றுபவர்களுக்கே அதிகம் வருகின்றன.
என்ன செய்யலாம்?
* சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே கவனியுங்கள்.
* எதிர்மறையான சிந்தனைகளை விட்டு மகிழ்ச்சியாக இருங்கள்; நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பிலேயே இருங்கள். அவர் களுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.
* அலுவலக நண்பர்களிடம் இணக்கமாக இருந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* 10 மணிநேரத்துக்குமேல் தொடர்ந்து வேலை செய்யாமல் இடைவெளி விட்டு உங்கள் வேலைகளைப் பிரித்து எளிமையாகச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
* நீங்கள் அமரும் நாற்காலி, காற்று, வெளிச்சம் வரும் திசை, அமர்ந்திருக்கும் விதம் எல்லாவற்றையுமே கவனித்து சீர்செய்து கொள்ளுங்கள். சாப்பாடு சாப்பிட முடியாத நேரத்தில் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். நீர் அதிகம் அருந்துங்கள்.
* முகத்தையும் பாதங்களையும் அடிக்கடி கழுவிக்கொள்ளலாம். அடிக்கடி எழுந்து நடக்கலாம்.
* நேரம் கிடைக்கும்போது நன்றாகத் தூங்குங்கள். ஓய்வு தேவை என உடல் உணர்த்தினால் அதற்கு மதிப்பளியுங்கள்.