வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கு இவை ஒருவருக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஒருவருக்கு உடலும் தலையும் சுற்றுவது போல் உணர்வோ, தன்னைச்சுற்றி எல்லாப் பொருட்களும் சுற்றுவது போன்ற உணர்வோ, கீழே விழுந்து
விடுவதோ, தடுமாறுவதோ தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது, “வெர்டிகோ’ எனப்படும் நோய்.
சிலருக்கு இந்த உணர்வுகளுடன் குமட்டல், வாந்தி, காதில் இரைச்சல் என நோயின் அறிகுறிகள் கூடி உடல் நனையும் அளவு வியர்த்து விடும். மாரடைப்பால் வரும் இதய நோயோ என பயந்து, மருத்துவமனைகளில் சேருவர்.
அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து பின், சாதாரண தலைசுற்றல் நோய்தான் என்று சொல்வதற்குள் மூன்று நாட்கள் ஓடியிருக்கும்.
காரணம் புரியாத தலைசுற்றுடன் குமட்டல், வாந்தி, ஜுரம், மயக்கம், மரத்துப்போன உணர்வுகளுடன், பேசுவதோ, கேட்பதோ, திடீரென கஷ்டமானால், கண் பார்வை மங்கி அதனுடன் ஜுரம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இடம் மாறுவதால், அதாவது, உட்கார்ந்து இருப்பவர் படுப்பதாலோ, சாய்வதாலோ, படுத்திருப்பவர் எழுவதாலோ, திரும்பி படுப்பதாலோ ஏற்படலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும் போது வாந்தி வருகிறது.
வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது 5 முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்தானதாகும்.
கெட்டுப்போன உணவை சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பை புற்று, வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்னைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.
காதும் ஒரு காரணமாகும். காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்னைகளாலும் வாந்தி வரும். காதில் வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ் என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது.
இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம், விமானப் பயணங்களின்போது வாந்தி வருகிறது.