அதீத வியர்வை
25 Feb,2018
ஒரு சிலர் எழுதும்போது, பேப்பரில் தங்களின் கைக்குட்டையையும் வைத்தபடியே எழுதுவார்கள். காரணம், அவர்களின் உள்ளங்கையின் வியர்வை பேப்பரையே முழுதாக நனைத்துவிடும்.
இந்த அதீத வியர்வை சுரக்கும் நிலையை “ஹைபர் ஹைட்ராஸிஸ்’ என்று சொல்வார்கள். அக்குள், உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்தப் பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம்.
வியர்வையினால் துர்நாற்றம் எடுப்பது, அதீத வியர்வை வருவது என, இரு முக்கிய பிரச்னைகள் இருக்கும். இரண்டிற்குமே இரு வேறு விதமான சிகிச்சைகள் இருக்கின்றன.
வியர்வை துர்நாற்றத்தை தடுக்க அக்குள்களில் இருக்கும் முடி, லேசர் சிகிச்சையின் மூலம் நீக்கப்படும். இது துர்நாற்றத்தை, 70 சதவிகிதம் வரை குறைத்துவிடும்.
அதீத வியர்வை வருவது, மரபணு பிரச்னையாக இருக்கலாம். அது மட்டுமின்றி அதீத மன அழுத்தமும் முக்கியக் காரணம். மேலும், புகை, மதுப்பழக்கங்களும் இந்நிலையை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பெரும்பாலும், உடலில் அதிக வியர்வையின் காரணமாக சளி, சைனஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்கிற கேள்வி பலருக்கும் எழும்.
வியர்வைக்கும் சைனஸிற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. வியர்வையினால் உடல் பிரச்னைகளைவிட மனப் பிரச்னைகளே அதிகம் ஏற்படுகின்றன.
தங்களின் வியர்வை நாற்றம் தங்களைச் சுற்றிருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடுமோ என்கிற அச்சம் இங்கு எல்லோருக்குள்ளுமே இருக்கின்றது. இன்றிருக்கும் மருத்துவத்தைக் கொண்டு தீர்த்துவிடலாம். வியர்வைக்கு முக்கிய காரணியாக இருக்கும் மன அழுத்தத்தை போக்கினால்தான், பிரச்னை நீங்கும்