குடல் இறக்க நோய் ஏன் வருகிறது ?
20 Feb,2018
அவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு வந்த சில நாட்களிலேயே கடும் வயிற்று வலிக்கு ஆளாகிறார். செரிமானக் கோளாறு காரணமாக ஏற்படும் சாதாரண வயிற்று வலியாகத்தான் இருக்கும் என நினைத்து அதற்கான சிரப் அருந்துகிறார். அது பலனளிக்கவில்லை. அடுத்ததாக வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்படுகிறது. அதனைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகி மருத்துவரை
அணுகுகிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் incisional hernia எனும் குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். சமீபத்தில் மேற்கொண்ட சிசேரியன் அறுவை சிகிச்சையின் காரணமாக இப்பிரச்னை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறுகிறார்.
அறுவை சிகிச்சை நமது நல வாழ்வுக்கு இன்றியமையாதத் தேவை. ஆனால் அதன் பொருட்டு ஏற்படும் பக்க விளைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அவற்றுள் ஒன்றான incisional hernia எனும் குடலிறக்க நோய் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கார்த்திக் குணசேகரனிடம் கேட்டேன்ஸ‘‘குடல் இறக்கம் என்பது குடல் அதன் இடத்திலிருந்து இறங்கி வருதல் மற்றும் சரிந்து வருதல்.
இதில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு வகையான incisional hernia எனும் தொப்புளைச் சுற்றி ஏற்படும் குடல் இறக்கப் பிரச்னைக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்தபின் அந்த இடத்தில் குடல் சரிவதுதான் incisional hernia. சிசேரியன் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான அறுவை சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை என வயிற்றுப்பகுதியில் பெண்களே அதிக அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களினாலும் இப்பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது. கர்ப்பம் தரித்த பின் குழந்தையை தாங்கிக் கொண்டிருப்பதால் கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்படலாம். உடல் பருமன், அதிக பாரம் தூக்குதல், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவற்றாலும் இப்பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பக் காலத்துக்குப் பின்னரே இப்பிரச்னை அதிக அளவில் ஏற்படும்.
அதிக அளவிலான வலி இருப்பதும், குடல் இறங்கியது வீக்கம் போல் வெளியே தெரிவதுமே இதற்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தெரிந்ததும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அலட்சியமாக விட்டு விடவே கூடாது. ஏனென்றால் குடல் இறக்கம் காரணமாக குடல் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் மாட்டிக்கொண்ட குடல் பகுதிக்கு ரத்த ஓட்டம் கிடைக்காமல் அழுகி விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குடல் மாட்டிக் கொள்வதன் காரணமாக கடுமையான மலச்சிக்கலும் ஏற்படும்.
மாத்திரை, மருந்து மூலம் சரி செய்ய முடியாத பிரச்னை என்பதால் அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான தீர்வு. அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோபி என இரண்டு முறைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம். இதன் மூலம் சரிந்திருக்கும் குடலை சரியாக உட்புகுத்தி Mesh என்கிற வலையைக் கொண்டு மூடி விடுவோம். அதன் மூலம் விரைவில் தசை கூடி குடல் இறக்கம் இனியும் ஏற்படாதபடிக்கான வழிவகை செய்ய முடியும். அறுவை சிகிச்சையைக் காட்டிலும் லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது.
லேப்ராஸ்கோபியில் லேசர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதால் வலியும், ரத்தப்போக்கும் குறைவாகவே இருக்கும். ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடலாம். இன்றைக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதால் இதற்கான தீர்வு எளிது. ஆனால் தீர்வை நோக்கி நாம் சீக்கிரம் நகர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அலட்சியம் கூடாது’’ என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்