அளவுக்கு அதிகமான நீர்
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என முன்பு படித்திருப்பீர்கள். ஒரு நாளில் ஒருவர் நீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தைக் குடிக்கிறார்களோ, அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
சிறிய சிறுநீர்ப்பை
ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதேப் போல் உள்ளுறுப்புக்களின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1-1.5 கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.
உடல் வறட்சி
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு உடல் வறட்சியும் ஓர் காரணம் என்று கூறுவது சற்று ஆச்சரியத்தை வழங்கலாம். எப்படி உடலில் போதிய நீர் இல்லாமல், சிறுநீர் உற்பத்தியாகும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஆய்வு ஒன்றில், உடலில் போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும்.
சிறுநீரக கற்கள்
நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பலவீனமான இடுப்பு தசைகள்
இடுப்புப் பகுதியைச் சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை வெளியேற்றுகிறது. இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட மருந்துகள்
நீங்கள் உயர் இரத்த அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுப்பவர்களாயின், தற்காலிகமாக சிறுநீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை கழிக்கச் செய்யும். ஆகவே இம்மாதிரியான பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி, அவரிடம் உங்களது பிரச்சனையைக் கூறி, தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.
அடிவயிற்றில் சிறுகட்டி
அடிவயிற்றுப் பகுதியில் சிறு கட்டிகளின் வளர்ச்சி இருந்தால், அதுவும் ஒருவரை அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்யும். ஏனெனில் இந்த கட்டிகள் சிறுநீர்ப்பையில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் போது, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும். எனவே இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே நீண்ட நாட்களாக இப்பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
தாழ் இரத்த அழுத்தம்
உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்றவற்றுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும். எனவே உங்களுக்கு தாழ் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சையை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
இறுதி மாதவிடாய்
45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது.