சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை! இதைக் கவனிக்காமல் விடுவதால் வருவதுதான் சர்க்கரை நோய். தொற்றா நோய்களுக்கு நுழைவுவாசல். ஒருவருக்கு இது வந்துவிட்டால், வாழ்நாள் முழுக்கஇன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, மாத்திரை, மருந்து சாப்பிட்டு உடலிலுள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டே வாழவேண்டும். வாய்ப்பிருந்தாலும் விரும்பியதைச் சாப்பிட முடியாது; இஷ்டம்போல வாழ முடியாது. சர்க்கரை, இனிப்பான விஷயம்தான். ஆனால், அது சர்க்கரைநோயாளிகளின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும்.
சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடும் நாம், சர்க்கரைநோய் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதற்குக் காரணம் அதற்கென வலியோ, அறிகுறிகளோ இல்லாததுதான். இதனாலேயே பலரும் சர்க்கரைநோயால் ஏற்படும் பின்விளைவுகளுக்குத் தங்களையும் அறியாமல் இடமளித்துவிடுகிறார்கள். சர்க்கரைநோய் முற்றுவதற்கு இதுதான் காரணம். சீரற்ற சர்க்கரையின் அளவு நீண்ட நாள் தொடர்ந்தால் கண்கள், சிறுநீரகம், இதயம், கால்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கும் இது ஒரு கொடிய நோய்.
இதுபோன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படலாம் என்று நம் உடல் செய்யும் அலர்ட் சிக்னலுக்கு ‘சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை’ (Pre diabetes) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதென்ன, ‘சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை?’ அதை எப்படி அறிந்துகொள்வதுஸ சர்க்கரைநோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? விளக்குகிறார் சர்க்கரை நோய் நிபுணர் சி.பி.ராஜ்குமார்.
“கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன்தான் ரத்தத்தில் உள்ள குளுகோஸை உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றால் அல்லது சுரக்கும் இன்சுலின் போதிய ஆற்றல் கொண்டதாக இல்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துப் பிரச்னையை ஏற்படுத்தும். இதைத்தான் ‘சர்க்கரை நோய்’ என்கிறோம். இதை நோய் என்று சொல்வதைவிட ஒருவிதக் குறைபாடு என்று சொல்வதுதான் சரி.
சர்க்கரை நோய்க்கான விழிப்புஉணர்வு அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.
சர்க்கரை நோயை ‘புதுப் பணக்காரர்களின் நோய்’ என்றும் சொல்வதுண்டு. வசதி படைத்தவர்கள் தங்கள் உடலை முறையான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியால் பராமரித்துக்கொள்கிறார்கள். அதேபோல் வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம்; அவர்கள் உழைப்புக்கேற்ற உணவைச் சாப்பிடுபவர்கள் என்பதால் அவர்களுக்கும் பாதிப்பில்லை. ஆனால், புதிதாகப் பணம் சம்பாதித்தவர்கள் சைக்கிளுக்குப் பதிலாக பைக் பயன்படுத்துகிறார்கள்; அதிக அளவில் அசைவ உணவு, பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது போன்ற தவறான வாழ்க்கைமுறையால் சர்க்கரை நோய் அவர்களைப் பாதிக்கிறது.
பாதிப்புகள் என்னென்ன?
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலுள்ள 20-50 சதவிகித மக்கள்தான் சர்க்கரை நோயாளி களாக மாறுகிறார்கள். இதோடு, ரத்தக்குழாய் அடைப்புகளால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இதில் ஒரு நல்லசெய்தியும் உண்டு. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை எளிமையான வாழ்க்கைமுறை மாற்றங்களால் தடுக்கலாம். அத்துடன் மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோயின் பின்விளைவுகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். இந்த நிலை சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் உடல் நலத்தோடு மன நலமும் வலிமையாகும். சர்க்கரை நோய்க்கான முந்தைய நிலையைக் கண்டறிவதால் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைக்கான பணச் செலவு, நேரம் எல்லாம் மிச்சமாகும்.
வாழ்க்கைமுறை மாற்றம் என்பது உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது. சர்க்கரை நோய் வருவதற்கு அதிக உடல் எடை மிக முக்கியக் காரணம் என்பதால், வாழ்க்கைமுறை மாற்றத்தால் அதை வெல்லலாம்.
வாழ்க்கை முறை மாற்றத்தின் முதல் அம்சம்ஸ உணவு! மூன்று வேளைகள் சாப்பிடவேண்டிய உணவை ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடவேண்டும். உடல் எடை கூடாதபடி நம் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துகளை சரிவிகிதமாகச் சாப்பிட வேண்டியது அவசியம். உடல் எடை மற்றும் ரத்தச் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளான இனிப்பு வகைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள பரோட்டா, கூழ், களி, பிஸ்கட், சாக்லேட், கேக், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், பழரசங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவேண்டியது அவசியம். உடல் எடை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய், அப்பளம், உப்பு மிகுந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, சர்க்கரை நோயிலிருந்து விலகி வாழ, `விருந்தும் வேண்டாம் விரதமும் வேண்டாம்’ என்பதே நாம் பின்பற்றவேண்டிய உணவுமுறைக் கொள்கை.
வாழ்க்கை முறை மாற்றத்தில் இரண்டாவது அம்சமான உடற்பயிற்சியில் எளிமையானது நடைப்பயிற்சி. மூட்டுத் தேய்மானம், இதயச் செயலிழப்பு மற்றும் சர்க்கரை நோயால் கண் விழித்திரை ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் இல்லாத அனைவரும் செய்யக்கூடிய எளிய பயிற்சி இது. ஒரு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு 30 நிமிடங்களுக்குக் குறையாமல் தங்களால் முடிந்த வேகத்தில் நடப்பது போதுமான ஒன்று. நடைப்பயிற்சி, ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையைக் குறைத்து, எலும்புகளுக்கு வலிமை ஊட்டவும் உதவும்; இதய ஆரோக்கியம் காக்கும். மனச்சோர்வு நீக்கி நிம்மதியான தூக்கம் வரவும் உதவும்.
வாழ்க்கைமுறை மாற்றத்தில் மூன்றாவது அம்சம் மன ஆரோக்கியம். அதற்குத் தெளிவான சிந்தனைகள், காலத்தை வீணாக்காமல் உரிய நேரத்தில் நம் கடமைகளை, வேலைகளை முடிப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பது, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம், மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்ப்பது போன்றவை இன்றியமையாதவை.
இவற்றையெல்லாம் மேற்கொண்டால் நம் உடல் எடை ஏழு முதல் பத்து சதவிகிதம் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் சர்க்கரை நோயிலிருந்து மட்டுமல்லாமல், அதன் தொடர் பாதிப்புகளான இதய பாதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றிலிருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
அரிசி, பருப்பு, சர்க்கரை என எல்லாவற்றையும் ‘ரீஃபைண்டு’ என்ற பெயரில் பாலீஷ் செய்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாலீஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி, பனை வெல்லம் மற்றும் பார்லி அரிசி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயைப்பற்றிய விழிப்புஉணர்வும், மருத்துவரின் ஆலோசனையும், பாரம்பர்ய உணவின் பக்கபலமும், மகிழ்வான மனமும், நல்ல வாழ்வியலும் மட்டுமே இந்த நோயைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் கிடைத்திருக்கும் ஒரே வழி. விழிப்புஉணர்வுடன் இருந்து சர்க்கரை நோயை வெல்வோம்.
கர்ப்பகால சர்க்கரைநோய்
கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ (Gestational Diabetes) ஏற்படும். 22 முதல் 28 வாரங்களில் இந்தப் பிரச்னை ஏற்படும். இதுவும் ஒரு வகையில் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை அறிகுறிதான்.
இந்த ஹார்மோன் பிரச்னை பிரசவத்துக்குப் பிறகு பலருக்கும் சரியாகிவிடும். முதல் 12 வாரங்களில் கர்ப்பிணிகள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தை பிறந்த பிறகு, பெரும்பாலும் அவர்களுக்கு சர்க்கரைநோய் மறைந்துவிடும். சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்னை தொடரும். அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னையும் அடிக்கடி வருவதால், சர்க்கரைநோய் நிலைத்துவிடும். குறிப்பாக, கர்ப்பத்தின்போது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், மூன்றரை கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தை பெற்ற பெண்களுக்கும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் சர்க்கரைநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நேரங்களில் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர் களுக்குப் பரிந்துரைக்கும் ஆலோசனைகளையே இவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.