பருக்கள்.
30 Jan,2018
இப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பருவ வயது வந்துவிட்டாலே அனைவருக்குமான பொதுவான பிரச்னையாகிவிட்டது. இதனால் இளைஞர்களின் முகத்தையும் மனதையும் வாடச் செய்துவிடுகின்றன இந்த பருக்கள். இந்த பருவிலிருந்து நம் சருமத்தைக் காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதைப்பற்றிய சில விஷயங்களை புரிந்து கொள்வோம்.
நம் சருமத்தின் எண்ணெய் பசைக்கு காரணம் சீபம் என்ற திரவம். செபேசியஸ் சுரப்பியிலிருந்து வரும் திரவம். நம் சருமத்தைப் பாதுகாப்பது அதன் வேலை என்றாலும், சீபத்தில் உள்ள எண்ணெயின் தன்மை மாறி, லினோலியிக் (Linoleic) அமிலத்தின் அளவு குறைந்தால் பரு உண்டாகும்.இது தவிர, Propionibacterium என்ற பாக்டீரியாவும் பரு உருவாக காரணமாகிறது. P.acnes, p.granutosum மற்றும் p.avielum என்ற மூன்று வகை பாக்டீரியாக்கள் உள்ளது. இவற்றில் சில வகை என்ஸைம்களைச் சுரந்து நம் சருமத்தின் உள்ளே ஒரு போராட்டம் நடக்க காரணமாகிறது.
நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது இந்த பாக்டீரியாவை எதிர்த்து போராடும். இந்த போராட்டம் யாருடைய உடலில் அதிகமாக நடக்கிறதோ, அவர்களுக்கு பரு மிகவும் சிவந்து, தடித்து காணப்படும். இந்த போராட்டத்தை inflammatory response என்று சொல்வோம். இது யாருக்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கெல்லாம் பரு மறையும்போது அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு மாறாத தழும்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும். கார்போஹைட்ரேட் உணவுகள், சர்க்கரை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு பருக்கள் பிரச்னை அதிகமாகிறது.
இவர்களுக்கு செபேசியஸ் சுரப்பியில் எண்ணெய் அதிகம் சுரந்து பரு எளிதாக உருவாகிறது. அதனால் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பால் மற்றும் பால் சேர்த்த உணவுப் பொருட்களாலும் பரு வருகிறது என்பதால், பால் உணவுகளைத் தவிர்த்துவிடுவதும் நல்லது. பரு தற்போது நாகரிகத்தின் வளர்ச்சியால் உண்டாகும் நோய்கள் சிலவற்றின் காரணமாகவும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, உடற்பருமன், டைப்-2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றாலும் மேற்கத்திய உணவுப் பழக்கங்களால் உண்டாகும் பிரச்னைகளோடு ஒன்றாகவும் பரு கருதப்படுகிறது.
ஆண்களிடம் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் பரு ஏற்படுகிறது. பெண்களுக்கும் சிறிதளவு இந்த ஹார்மோன் சுரக்கும். அந்த சிறிதளவுதான் நம்முடைய தலைமுடி, அக்குள் மற்றும் பிறப்புறுப்புகள் அருகில் உள்ள முடி கொஞ்சம் தடிமனாக உடம்பில் உள்ள முடிகளிலிருந்து மாறுபட்டு இருப்பதற்கு காரணம். ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இருப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் அவர்களுக்கு முகத்தில் அதிகமாக பரு, மீசை முளைத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஆன்ட்ரோஜனின் அளவு அதிகமானால் தலைமுடி வளர்வதற்கு பதிலாக அதிகமாக கொட்டவும் ஆரம்பித்து விடும். ஆன்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் உருவாகும் பருக்கள் தாடை பகுதியில் அதிகம் காணப்படுகிறது.பெண்கள் பருவம் அடையும் தருணங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பரு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் பருக்கள் அவர்களின் முகத்தில் தழும்பை ஏற்படுத்திவிடுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன்பு உடம்பில் நீரின் தன்மை அதிகரிக்கும்போதெல்லாம் பருக்கள் உற்பத்தியாகின்றன.
ஆனால், கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் மாதவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிகமாக பரு வருவதை கவனிக்கலாம். ஆகையால், மாதவிலக்கு வரும் 1 வாரம், 10 நாட்களுக்கு முன்பே கவனமாக செயல்பட்டு, அந்த குறிப்பிட்ட இடங்களில் பருக்களை தடுக்கும் மருந்தை தடவினால் அது பெரிதாவதை தடுக்கலாம். அதேபோல், முன்பெல்லாம் பருவுக்கு வைத்தியம் தேவையில்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் முகப்பொலிவுக்கு முக்கியத்துவம் தரும் இந்நாட்களில், பருவை ஆரம்ப நிலையிலேயே கவனித்து மருத்துவம் செய்தால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
சிகிச்சை முறைகள்ஸ
சில வகை க்ரீம்களை உபயோகித்தால் பருக்கள் வரலாம். எண்ணெய் அதிகம் சுரக்கும் சருமம் உடையவர்கள் எந்த க்ரீமாக இருந்தாலும் அது ஜெல் பேஸ்டு (Based) க்ரீம்களாக இருந்தால் மட்டும் உபயோகிக்க வேண்டும். அதில் Non-comedogenic என்று எழுதப்பட்டுள்ளதா என்று பரிசோதித்தபின்
உபயோகிக்கலாம்.
மிகுந்த இனிப்பு பண்டங்களை தவிர்த்து தண்ணீர், காய்கறி, பழங்களை உணவில் நன்றாக சேர்த்து மனதை கவலையின்றி வைத்து கொண்டாலே பாதி பிரச்னையை சமாளித்து விடலாம். அதையும் தாண்டி பரு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பருவினால் மனதிலும், உடலிலும் ஏற்படும் தழும்புகளை தவிர்க்கலாம்