உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும்.
மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது, வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
செயற்கை சுவையூட்டிகள் :
இன்றைக்கு துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் சேர்க்கப்படுகிற செயற்கையான விஷயங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உங்களின் செரிமானத்தையே சீர்குலைத்திடும். இதனை தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைந்திடும்.
இப்படி செயற்கையான இனிப்பினை எடுத்துக் கொள்ளும் போது, நார்மல் சுகரை விட ஐநூறு மடங்கு அதிகமான இனிப்பினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
கால்சியம் :
உங்கள் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்பட்டால் கூட, உங்களது மெட்டபாலிசம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பலரும் கொழுப்பு தரக்கூடிய பொருள் என்று சொல்லி பால், சீஸ் போன்ற பல்வேறு பால் சார்ந்த பொருட்களை தவிர்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்படும்.
இது உங்களது மெட்டபாலிக் ரேட்டினை குறைத்திடும். தொடர்ந்து கால்சியம் அதிகமுள்ள பொருட்களை உணவில் சேர்த்து வர உங்கள் உடலின் மெட்டபாலிக் ரேட் அதிகரிக்கும்.
கலோரி :
நீங்கள் தினமும் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என எண்ணிப் பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிடுவது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை கொடுத்துக் கொண்டேயிருக்கும். இன்றைக்கு போதுமான கலோரி எடுத்துக் கொண்டோம் என்ற நிறைவைத் தரும்.
அதே போல உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நினைத்து சாப்பாட்டினை சாப்பிடாமல் ஸ்கிப் செய்வது தவிர்க்கப்படும். தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்ளப்படுவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட் சீரான அளவில் இருக்கும்.
டீ ஹைட்ரேஷன் :
உங்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பது தண்ணீர் தான். உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உங்கள் உடலின் எல்லா செயல்பாடுகளும் சீர்குலைந்திடும். தினமும் போதுமான அளவு நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள்.
டயட் :
டயட் என்றதுமே எந்த உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டும், பசிப்பதற்கு முன்பாகவே சாப்பிடுவது, சுவைக்காக சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
மதுப்பழக்கம் :
மதுவில் எம்ப்டி கலோரி இருக்கிறது. இதனைக் குடிப்பதால் நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. ஆனால் நம் உடலுக்கு ஏராளமான தீங்கினை விளைவிக்கும். அவற்றில் ஒன்றாக நம் உடலின் மெட்டபாலிசத்தை இது சீர்குலைக்கும்.
காய்கறிகள் :
பச்சைக் காய்கறிகள் சாலெட்டாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இவற்றில் அதிகப்படியான செல்லுலோஸ் இருக்கும். இது ஒரு வகையான ஃபைபர். இது செரிமானம் ஆக அதிக நேரம் பிடிக்கும். டயட் என்ற பெயரில் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்குத் தேவையான பிறச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
தொடர்ந்து ஒரே உணவை எடுத்துக் கொள்ளாது பல உணவுகள் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கார்போ ஹைட்ரேட் :
உங்களது எனர்ஜிக்கு முக்கிய ஆதரமாக விளங்குவது நீங்கள் சாப்பிடுகிற கார்போஹைட்ரேட் உணவுகள் தான், அவை போதுமான அளவு இல்லையென்றால் உங்களது மெட்டபாலிசம் குறையும், இதனால் சோம்பலாக உணர்வீர்கள். பகலில் அடிக்கடி தூக்கம் வரும், உடல் உழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள்.
ஒரே நாளில் :
ஒரே நாளில் உடல் எடையைக் குறைக்கிறேன். ஆறே வாரத்தில் சிக்ஸ் பேக் என்று ஆசைபட்டு உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உணவோ உடற்பயிற்சியோ சரியான அளவில் செய்ய வேண்டும்,அதிகபட்சமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அது உங்களின் மெட்டபாலிசத்தை குறைக்கும்.
அரை மணி நேரம் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய போதுமானது. எப்போதும் உடற்பயிற்சி செய்த பிறகு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் மாறாக உங்களுக்கு சோர்வு தட்டினால் நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
பசியுணர்வு :
சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசியுணர்வு அடங்காது எதையாவது சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். சிலருக்கு எப்போதுமே பசியெடுக்காது. இதற்கும் உங்களது மெட்டபாலிசம் தான் காரணம்.
ஹார்மோன் மாற்றங்கள் :
உங்கள் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் கூட மெட்டபாலிசத்தை குறைத்திடும். தைராய்டு சுரப்பி சீராக செயல்படாமல் போகும் போது அவை உங்கள் மெட்டபாலிசத்தை குறைக்கும், பசியுணர்வு இருக்காது. கிட்டத்தட்ட தைராய்டு பாதிப்பிற்கான அறிகுறிகளும், மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஓய்வு :
உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவை உங்கள் உடலுக்கு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு அவசியமானது ஓய்வு, சரியாக தூங்காமல் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்கிறேன் என்று சொல்லி தூங்காமல் கண் கொட்ட விழித்திருப்பது என்பது மிகவும் கேடுதரக்கூடிய செயலாகும்.
சரியாக தூக்கமில்லை என்றாலும் உங்கள் மெட்டபாலிசத்தை அது குறைத்துவிடும்.
ப்ரோட்டீன் :
தசைகளை வலுவூட்ட ப்ரோட்டீன் அவசியமான ஒன்றாகும். தசைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கலோரிகள் தேவைப்படும் அதோடு உங்களது எனர்ஜியையும் எடுத்துக் கொள்ளும். இதற்கெல்லாம் அடிப்படையாய் இருப்பது ப்ரோட்டீன் தான்.
உடலில் ப்ரோட்டீன் குறைபாடு ஏற்படும் போது இவற்றில் எல்லாம் மாற்றம் நிகழும். உங்களது மெட்டபாலிசத்திலும் மாற்றம் இருக்கும்.
ஸ்ட்ரஸ் :
இந்த இயந்திர உலகத்தில் யாருக்குத் தான் ஸ்ட்ரஸ் இல்லை என்று தேடிப்பார்க்கும் அளவிற்கு இருக்கிறது இன்றைய நவீன உலகம் யாரைக் கேட்டாலும் பயங்கர ஸ்ட்ரஸ் என்ற புகார் சொல்லாமல் இல்லை. இது கூட உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை குறைக்கக்கூடியது.
ஸ்டரஸ் வந்தாலே உங்கள் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரப்போகிறது என்பதை புரிந்து கொள்ளவும். உடல் எடை அதிகரிப்பதில் ஆரம்பித்து மாரடைப்பு வரை ஏற்படக்கூடும்.
காலை உணவு :
நம்மில் பெரும்பாலானோர் இந்த வேலையைச் செய்வார்கள். தாமதமாகிவிட்டது என்று சொல்லி காலை உணவைத் தவிர்ப்பார்கள். காலை உணவு சாப்பிட மாட்டேன் என்று சொல்லிக் கொள்வது ஃபேஷனாகவும் பழகிவிட்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர்.
இரவு நீண்ட நேரம் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்திருக்கிறீர்கள். காலை எழுந்தவுடன் உங்களது மெட்டபாலிசம் குறைந்திருக்கும், காலை உணவு சாப்பிட்டால் தான் மெட்டபாலிசம் நார்மலாகும் அப்போது தான் சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க முடியும். இல்லையெனில் தலைச்சுற்றல், சோர்வு,அதீத தூக்கம் ஆகியவை ஏற்படும்.