பிரசவத்துக்கான டேட் கணிக்கப்படுவது எப்படி?கடைசி மாதவிடாய் தேதியை மறந்தவர்களுக்கு!கணக்கிடும் முறை
12 Jan,2018
‘லாஸ்ட் பீரியட் டேட் எப்போது என்பது ஞாபகமில்லை என்பவர்களுக்கு, முதல் ஸ்கேன்தான் டியூ டேட்டைக் கணித்துச் செல்லும் காரணியாக இருக்கும். பொதுவாக, கருவுற்ற 11-வது வாரத்திலிருந்து 14 வாரத்துக்குள் எடுக்கப்படும் இந்த முதல்
ஸ்கேன்தான், கருமுட்டை வெளியான நாளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, பிரசவத் தேதியைச் சரியாகக் கணிப்பதாக இருக்கும். இதனை ‘ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர் ஸ்கேன்’ என்று குறிப்பிடுவார்கள்.
கர்ப்பக்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டாலும், முதன்முறை எடுத்த ஸ்கேன் சொல்லும் பிரசவத் தேதியையே ஃபாலோ செய்வார்கள். ஏனென்றால் ஒரு கரு உருவாகி, 30 வாரங்கள் ஆகிவிட்டிருக்கும் நிலையில், சில காரணங்களால் அதன் வளர்ச்சி 30 வாரங்களைவிட சற்றுக் குறைவாக இருக்கலாம். அதுபோன்ற சூழலில், அப்போது எடுக்கப்படும் ஸ்கேன் பிரசவத் தேதியை அதற்கு ஏற்ப சற்றுப் பின்தள்ளி மாற்றிச் சொல்லும்.
அந்த மாதத்துக்கு உரிய வளர்ச்சியைவிட சற்று அதிக வளர்ச்சிகொண்டிருக்கும் கருவெனில், அந்நிலையில் எடுக்கப்படும் ஸ்கேனில் பிரசவத் தேதி கருவின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல முன்கூட்டி நிர்ணயிக்கப்படும். அதனால் முதன்முறை எடுக்கும் ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர் ஸ்கேன் தெரிவிக்கும் பிரசவத் தேதியே சரியானதாக இருக்கும். எனவேதான், எட்டாம் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக `செக்-அப்’புக்கு வரும் பெண்களிடம், ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டரில் எடுத்த ஸ்கேனை முக்கியமானதாகக் கேட்கிறார்கள்.
மறப்பது ஆபத்து!
‘‘கரு உருவான 11-வது வாரத்திலிருந்து 14 வாரத்துக்குள் எடுக்கப்படும் ஸ்கேனில், சிசுவுக்கு ‘டவுண் சிண்ட்ரோம்’ பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிட முடியும். அடுத்து, 20-வது வாரத்தில் எடுக்கப்படும் ஸ்கேனில், கருவில் ஏதேனும் சரிசெய்ய முடியாத பிரச்னை இருந்தால், அதை உடனடியாகக் கலைக்க மருத்துவ ஆலோசனை தரப்படும். கடைசி மாதவிடாயை மறந்து, கரு உருவானதைத் தாமதமாக உணர்ந்து, பிந்தைய மாதங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் கருவுக்குப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், சட்டப்படிக் கருவைக் கலைக்க முடியாமல் போகலாம்” என்று எச்சரிக்கிறார் டாக்டர் நிவேதா பாரதி