கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், முதலில், கர்ப்பப்பை மற்றும் அதன் வாய்ப்பகுதி ஆகியவற்றை பரிசோதித்துப் பார்ப்பது தான் எளிய வழி. இதைத் தொடர்ந்து, கர்ப்பப்பை, கருவகம் முதலியவற்றை, ஒலியலைக் கதிர் கருவி மூலம், பரிசோதித்துப் பார்க்க வேண்டும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் கசிவு இருந்தால், அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்; புண் இருந்தால் அதை, ‘கிரையோ’ சிகிச்சையில் சரிசெய்யப்படும்.
ஒலியலை கதிர்கருவி மூலம், கர்ப்பப்பையின் முழுத் தன்மையை அறிய முடியும்; கருவகம், கருவகத்தின் அளவு, கருமுட்டை உண்டாகிறதா, இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்; முட்டை வெளியேறும் தினம், கரு இணைக் குழாய் விலகி இருப்பது, மற்றும் ரத்தக் கட்டிகளையும் அறியலாம். ஹிஸ்டிரோ சால்பிங்கோ கிராபிஸ கருப்பை உள் வடிவம், கரு இணைக் குழாய் தோற்றம் மற்றும் அடைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இடுப்பெலும்பு பகுதிக்கு கீழ், கிருமிகள் பாதிப்பு ஏதும் இல்லையா என்பதை உறுதிபடுத்திய பின்னரே, இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். மாதவிடாய் துவங்கியதிலிருந்து, எட்டு முதல், 12 நாட்களுக்குள் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்தில் ரத்தப் போக்கு சீராக இருந்திருக்க வேண்டும். குறைவான ரத்தப் போக்கு இருந்தால், கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு; இதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், என்னிடம் வந்த ஒரு பெண், மாதவிடாயின் போது, ரத்தப் போக்கு சீராக இல்லை என்றதால், இந்தப் பரிசோதனை செய்த போது, அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.லேப்ராஸ்கோபி – இது மிகவும் துல்லியமான கண்டுபிடிப்பு முறை. திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும், கர்ப்பம் அடையாத நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு முறையை மேற்கொள்ளலாம். கர்ப்பப்பை, கருவகம், கரு இணைக் குழாய்கள் முதலியவற்றில் உள்ள இடுப்பெலும்புப் பகுதியை, இம்முறையில் நேரடியாகப் பார்த்து சிகிச்சை அளிக்கலாம். இந்த முறையில், கருவகத்தில் உள்ள கோளாறு, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படும் தொற்றுநோய் போன்ற குறைபாடுகளை, அறியலாம்.
பல பெண்களுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அதுவும் கடுமையான ரத்தப் போக்குடன், மாதவிடாய் ஏற்படுகிறது. ஒலியலை மூலம் குறைபாடுகளைக் கண்டுபிடித்து, மாதவிடாய் சீராக வருவதற்கு, தேவையான மருந்துகளைக் கொடுத்து, கருவுறச் செய்யலாம்.
டாக்டர் கமலா செல்வராஜ், மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.drkamala@gghospital.in