பெண்களை பாதிக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்னைகளில், 60 சதவீத பிரச்னை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்னைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை. வேறு வழியே இல்லாமல், என்னிடம் ஆலோசனைக்கு வரும் போது, ‘இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது; தன்னால் சரியாகி விடும் என, என் பாட்டி சொன்னாங்க, அம்மா சொன்னாங்க’ என, சொல்வர். இரு
காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்னை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும். அதன் தொடர்ச்சியாக, பல பிரச்னைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். பள்ளி மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்கள், இந்த பிரச்னைக்கு பயந்து, வேலையை விட்டு விடுவதும் உண்டு. வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்; இதனால், மன அழுத்தம் ஏற்படும். சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் சொல்வோம். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம். கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்னையை சரி செய்து விடலாம். பிரச்னை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு,
‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.
அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். இதற்கு பயந்தே, தண்ணீர்
குடிக்காமல் இருப்பர்; இது தவறு.