வைரஸ்க்கு கடிவாளம்
08 Nov,2017
வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய புரதத்தைக் (Protein) கண்டுபிடித்துள்ளார்கள் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
மனித நோய்கள் பலவற்றை பாக்டீரியாக்களும் வைரஸ்களும்தான் ஏற்படுத்துகின்றன. வைரஸ், பாக்டீரியாவை விட மிகவும் சிறியது. எவ்வளவு சிறியதென்றால் நமக்குத் தெரிந்த மிகமிக நுண்ணிய பாக்டீரியாவின் அளவில்தான் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகப் பெரிய வைரஸ் இருக்கும்.
வைரஸ்கள் தங்களுக்குத் தேவையான இடத்தை இன்னோர் உயிரின் உள்ளேதான் கண்டறியும். அந்தப் புரவலனின் செல்களில் புகுந்து, தங்களுக்கு ஏற்றவாறு செல்களைத் தகவமைத்துக் கொள்ளும். தங்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடன் செல்களை உடைத்து வெளிவரும். வைரஸ்களால் ஹோஸ்ட் இல்லாமல் உயிர்வாழவோ, இனப்பெருக்கம் செய்யவோ இயலாது. இந்தக் காரணங்களால்தான் நம் கணினிகளைத் தாக்கும் நச்சுகளை பாக்டீரியா என்று அழைக்காமல் கணினி வைரஸ் என்றழைக்கிறோம். நம் கணினிகளைப் பாதுகாக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் போன்றவையோ அல்லது பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் ஆன்டி பயாடிக்ஸ் போன்ற மருந்துகளோ, வைரஸைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்படவில்லை
இந்தக் காரணத்தால்தான் டெங்கு வைரஸைக் கண்டு மிரள்கிறது மருத்துவ உலகம். இவற்றின் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் HIRA புரதம், அறிவியல் உலகில் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
HIRA புரதம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது என்கின்றன ஆராய்ச்சிகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேட்ஸன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கிளாஸ்கோ பல்கலைக்கழகமும் இணைந்து முனைவர் தரன்ஜித் சிங்கின் தலைமையில் நடத்திய ஆராய்ச்சி முடிவுகள்படி ஒழுங்கற்ற செல் பிளவை HIRA புரதம் கட்டுப்படுத்துகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
“புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளின் போது மரபணுப் பிறழ்வை (Mutation), செல்களுக்குள் உட்செலுத்த வைரஸைப் பயன்படுத்துவோம். ஒவ்வொருமுறை நாங்கள் வைரஸை உட்செலுத்தும் போதும் HIRA புரதம் புதிய இடத்தை நோக்கி நகரும். இதுதான் எங்களுக்குப் புதிராகவே இருந்தது” என்கிறார் டாக்டர் தரன்ஜித். தொடர் ஆராய்ச்சிகளுக்கு பிறகு HIRA புரதம் வைரஸின் மரபணுக்களைக் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது எனக் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புரதம் எங்கு கிடைக்கும் என்று கேள்வி எழுகிறதா? HIRA புரதம் நம் செல்களில்தான் இருக்கிறது. இதுதான் நம் உடலின் இயற்கையான ஆன்டி வைரஸ். இந்த ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தைத் தாண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. வருங்காலத்தில் HIRA மருத்துவ உலகின் ஹீரோவாகக் கொண்டாடப்படும்.