குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 70% அதிகம் நீரிழிவு நோயால் இறக்கும் அபாயம்:
02 Nov,2017
குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 70% அதிகம் நீரிழிவு நோயால் இறக்கும் அபாயம் உள்ளது என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை குழந்தையின்மையை சந்திக்கும் பெண்களுக்கு வர அதிக வாய்ப்புள்ளதால், இறப்பு ஆபத்து அதிகமாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் டெக்ஸாஸ் மாகாணத்தில் வெளிவரும் அமெரிக்க சமூக மருத்துவ அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது. அவை பின்வருமாறு:
''ஆய்வுக்காக 78,214 பெண்கள், 1992-ல் இருந்து 2001 வரை 9 ஆண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 14.5% பேருக்கு குழந்தையின்மை பிரச்சினை இருந்தது.
மகப்பேறு இன்மையைச் சந்திக்கும் பெண்களுக்கு 44% அதிகமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 70% அதிகம் நீரிழிவு நோயால் இறக்கும் அபாயம் உள்ளது.
நாளமில்லாச் சுரப்பிகளின் சீர்குலைவு காரணமாக நீண்ட கால அடிப்படையில் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக புற்றுநோய் அல்லது நீரிழிவு நோய்க்கு அதிக வாய்ப்புண்டு''.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.