நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை . ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டாக்டரிடம் சென்று உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கேட்கும் போது, கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.
ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரி உணவை சாப்பிட வேண்டும். கலோரிகள் அதிகமானால் உங்கள் எடை அதிகரிக்கும் என்று கூறுவார். உடற்பயிற்ச்சிக்காக ஜிம் செல்லும்போது அங்குள்ள பயிற்சியாளர் கலோரிகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி நமக்கு க்ளாஸ் எடுப்பர். நமக்கு ஒரே குழப்பம். கலோரி என்றால் என்ன? கொழுப்பு என்றால் என்ன?
இது ஒரு பக்கம். கடைகளுக்கு செல்லும்போது, நாம் வாங்கும் உணவு பொருட்களில் அவற்றின் கலோரிகள், மற்றும் சத்துகளின் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும்.
இவர்கள் உணர்த்த விரும்பும் கருத்துகளில் இருந்து நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.
கொழுப்பு கலோரி இரண்டுமே உடலில் எரிக்கப்படுகின்றன. அப்படியென்றால் இரண்டும் ஒன்றா? மறுபடியும் கேள்வி! இல்லை இரண்டும் வேறு வேறு.இதன் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை அறிவதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும். வாருங்கள்! இதன் வித்தியாசத்தை அறிவோம்.
கலோரிகள் என்றால் என்ன?
கலோரி என்பது அளவிடுவதற்கு பயன்படும் யூனிட் ஆகும். நாம் உண்ணும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு(unit) தான் கலோரி. ஆகவே நம் உடல் உணவை உடைத்து செரிமானம் செய்ததும் கலோரிகள் கிடைக்கிறது. அதிகம் ஆற்றல் கிடைக்கும் போது உடல் அதற்கு தேவையான ஆற்றலை எடுத்து கொண்டு மீதம் உள்ளதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.
உணவு வெளியிடும் கலோரிகளை உடல் முழுவதுமாக ஆற்றலாக பயன்படுத்தும் வரையில் உங்கள் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது. இந்த விகிதத்தில் சமநிலை இல்லாதபோது , அதாவது ஆற்றலை சேமிக்க ஆரம்பிக்கும் போது உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எல்லா உணவுகளிலும் கலோரிகள் உள்ளன. அது கார்போஹைடிரேட் அல்லது புரதம் அல்லது கொழுப்பு உணவாக இருக்கலாம்.
1கிராம் கார்போஹைட்ரெடில் 4 கலோரிகள் உள்ளன. 1கிராம் பபுரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. 1 கிராம் கொழுப்பில் இரண்டு மடங்கு அதாவது 9 கலோரிகள் உள்ளன.
கொழுப்பு என்றால் என்ன?
கொழுப்பு என்பது உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்களுக்கு ட்ரிகிளிசரைட் என்ற ஒரு துணை குழு உண்டு.ரசாயன மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கான தொகுதிகள் உருவாவதற்கு கொழுப்புகள் தேவை.
உடலின் எரிபொருளாகவும் இந்த கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதன் கொழுப்புகளை உண்ணும்போது அதை உடல் பயன்படுத்தாமல், கொழுப்பு செல்களில் தக்க வைத்து கொள்கின்றன. உணவு இழப்பு ஏற்படும் வேளையில் உடல் இந்த தக்க வைத்த கொழுப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது.
சில வகை கொழுப்புகள் உடலுக்கு அவசியமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது தவறான செயல். அதற்கு மாற்றாக நிறைவுறாத (unsaturated) கொழுப்புகளை பயன்படுத்தலாம்.
கார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உடலுக்கு தேவையான கலோரிகளின் 15-20% கொழுப்பு சத்துக்களாக இருக்க வேண்டும். அந்த கொழுப்பு சத்தில் நெய், வெண்ணை மற்றும் எண்ணெய் போன்ற கண்ணுக்கு தெரிந்த கொழுப்பு பொருட்களால் பாதி தேவையும் மற்ற உணவு பொருட்களில் மறைந்திருக்கும் கொழுப்பு சத்தால் மீதி தேவையும் பூர்த்தியாகின்றன. 3 பகுதி பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும், 1 பகுதி நிறைவு கொழுப்பு அமிலங்களிலும் நல்ல ஆரோக்கியம் தரும்.
எந்த உணவை சாப்பிட்டாலும் கலோரிகள் கிடைக்கும். சமவிகித உணவில் ஒரு முக்கிய பொருளாக கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அதிகரிக்கும்போது செல்களில் சேமிக்க பட்டு உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. ஆகவே கொழுப்பை பற்றி அதிகம் பதற்றம் கொள்ளாமல், ஓரளவுக்கு எடுத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
இப்போது கலோரிகள் மற்றும் கொழுப்புகளை பற்றிய ஒரு தெளிவு கிடைத்ததா வாசகர்களே!