நவீன மருத்துவ ஆராய்ச்சிகளின் விளைவாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அதற்குத் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிய வேண்டும். மக்கள் மத்தியிலோ புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை.
புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன. மனித உடலில் பல பாகங்களிலும் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்கிறது மருத்துவம். ஆனால், பல தருணங்களில் புற்றுநோய் என்றே உணராமல் பலர் முற்ற விட்டுவிடுகிறார்கள். அப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்படும் புற்றுநோயில் முதன்மையானது தைராய்டு புற்றுநோய். இதை, சாதாரணக் கழுத்து வீக்கம் என்று நினைத்துப் பலர் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது, சுளுக்கு எடுப்பது என எளிதாகக் கருதி விடுகிறார்கள்.
ஆண்,பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானோரைப் பாதிக்கக்கூடிய தைராய்டு புற்றுநோய் பற்றிப் போதிய விழிப்பு உணர்வு உருவாகவில்லை. அதே நேரம் தைராய்டு புற்றுநோய் பற்றிய பல தவறான நம்பிக்கைகளும் உள்ளன. குறிப்பாக, எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்தால்கூட தைராய்டு புற்றுநோய் வந்துவிடும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் புற்றுநோய் வந்தால், தைராய்டு சுரப்பியை நீக்கி விடுவார்கள் என்றும் அப்படி நீக்கினால் சீக்கிரமே மரணம் ஏற்படலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். எனவே, தைராய்டு புற்றுநோய் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.
தைராய்டு பிரச்னை என்றால் என்ன, அது எதனால் வருகிறது, என்னென்ன அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
தைராய்டு புற்றுநோய் என்றால் என்ன?
தைராய்டு என்பது உடல்வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடிய தைராக்சின் (T4), டிரைஅயடோதைரோனின் (T3) போன்ற ஹார்மோன் களைச் சுரக்கும் ஒரு நாளமில்லாச் சுரப்பி. இது தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பக்கத்தில், குரல்வளையைச் சுற்றி, இருபக்கமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சியின் வடிவத்தில் அமைந்துள்ளது. இந்தச் சுரப்பியில் உள்ள செல்களில் பாதிப்பு ஏற்பட்டு, மரபணு பாதிக்கப்பட்டுக் கட்டிகள் உருவாகின்றன. அதையே தைராய்டு புற்றுநோய் என்கிறோம்.
இந்தப் புற்றுநோய் யாருக்கு வரலாம்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புற்றுநோய் உருவாகக் காரணங்கள் என்னென்ன?
தைராய்டு புற்றுநோய் மரபுரீதியாக வரலாம். கதிரியக்கம் தொடர்பான வேலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பணியாற்றுபவர்களுக்குத் தைராய்டு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுவயதில் வேறுவகைப் புற்றுநோய்க்காகக் கதிர்வீச்சு (Radiation) சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும் இவ்வகைப் புற்றுநோய் வரலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
கழுத்தில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படலாம். இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். வலி இருக்காது. குரலில் மாற்றம் ஏற்படும். எச்சிலோ, உணவோ விழுங்கும்போது சிரமம் இருக்கும். சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். வறட்டு இருமல் இருக்கும்.
பொதுவாகக் கழுத்தின் பக்கவாட்டில் கட்டி தென்பட்டால், காது, மூக்கு, தொண்டை நிபுணர், நாளமில்லாச் சுரப்பி நிபுணர், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் இவர்களில் ஒருவரைப் பார்த்துக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
எந்தப் பரிசோதனை, எப்போது செய்ய வேண்டும்?
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கட்டி இருக்கிறதா, அது எங்கு உள்ளது, அதன் அளவு போன்றவற்றை அறிய முடியும்.
பரிசோதனையில் நிறைய கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தால், அதை ‘மல்டி நாடுலர் காய்டர்’ (Multinodular goiter -MNG) என்றும் ஒரு கட்டி மட்டும் இருந்தால் ‘சாலிட்டரி தைராய்டு கட்டி’ (Solitary thyroid nodule- STN) என்றும் சொல்வார்கள். நிறைய கட்டிகள் இருந்தால், அவை சாதாரணக் கட்டிகளாகவும், ஒரே கட்டியாக இருக்கும்பட்சத்தில் புற்றுநோய் கட்டியாகவும் இருக்க வாய்ப்புண்டு.
புற்றுநோய்க் கட்டியா, சாதாரணக் கட்டியா என்பதை ‘ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி’ (Fine Needle Aspiration Cytology -FNAC)) எனும் பயாப்சி சோதனைக்கு உட்படுத்தி உறுதிசெய்துகொள்ளலாம். தைராய்டு புற்றுநோய் அருகில் உள்ள உறுப்புகளுக்குப் பரவியிருக்கிறதா என்பதையும், எந்த நிலையில் உள்ளது என்பதையும் சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் துல்லியமாக அறிய முடியும்.
தைராய்டு புற்றுநோய்களில் எத்தனை வகைகள் உள்ளன?
பல வகைகள் உள்ளன. இதில், ‘பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்’ (Papillary Thyroid cancer), ‘ஃபாலிகுலர் தைராய்டு புற்றுநோய்’ (Follicular Thyroid cancer), ‘மெடுல்லரி தைராய்டு புற்றுநோய்’ (Medullary Thyroid cancer), ‘அனாபிளாஸ்டிக் தைராய்டு (Anaplastic Thyroid cancer) புற்றுநோய்’ போன்றவை முக்கியமானவை.
சிகிச்சைகள் எப்படியிருக்கும்?
பொதுவாக முதற்கட்டமாக, எந்த இடத்தில் கட்டி உள்ளதோ அந்த இடத்தில் அறுவைசிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்ற வேண்டும்.
புற்றுநோய் இல்லாத கட்டிகளுக்கு, பட்டாம்பூச்சியின் வடிவம் போன்ற தைராய்டு சுரப்பியின் ஏதேனும் ஒரு பாகத்தை (Lobe) மட்டுமோ அல்லது அந்தக் கட்டி உள்ள பகுதி மட்டுமோ அகற்றப்படும். இதற்கு லோபெக்டோமி (Lobectomy) என்று பெயர். புற்றுநோய் உள்ளவர்களுக்கு முழு தைராய்டு சுரப்பியையுமே (Total Thyroidectomy) அகற்ற வேண்டும்.
இந்த முதல்கட்ட அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் நீக்கப்பட்ட பகுதி, பயாப்சி பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்தப் பரிசோதனையின் முடிவில்தான், என்னவகை தைராய்டு புற்றுநோய் என்று துல்லியமாக அறிய முடியும்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் வயது, உடல் நிலை மற்றும் புற்றுநோய்க் கட்டியின் வீரியத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு என்ன சிகிச்சை என்பது தீர்மானிக்கப்படும்.
குறைந்த அளவு பாதிப்பு (Low Risk) உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மட்டுமே போதுமானது. பாதிப்பின் வீரியம் (High Risk) அதிகமாக இருந்தால், `ரேடியோ ஆக்டிவ் அயோடின் ட்ரீட்மென்ட்’ (Radioactive Iodine Treatment) என்று ஒரு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையிலேயோ, மற்ற இடங்களில் பரவி இருந்தாலோ கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் தைராக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
பாப்பிலரி மற்றும் ஃபாலிகுலார் வகை தைராய்டு புற்றுநோய்தான் அதிகமாகப் பாதிக்கக் கூடிய தைராய்டு புற்றுநோய்களாகும். இவை இரண்டுக்கும், முதலில் அறுவைசிகிச்சை செய்யப்படும். அதன்பிறகு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய கதிரியக்க ஐசோடோப் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பிறகு சிலருக்கு தைராக்ஸின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். மெடுல்லரி மற்றும் அனாபிளாஸ்டிக் வகை தைராய்டு புற்றுநோய்களுக்கு அறுவைசிகிச்சை மட்டுமே போதுமானது.
அடிக்கடி எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துக்கொள்பவர்களுக்குத் தைராய்டு புற்றுநோய் ஏற்படுமா?
கதிரியக்கம், தைராய்டு புற்றுநோய் வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுதான். எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற உபகரணங்கள் குறைந்த அளவே கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. அடிக்கடி எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துக்கொள்வதனால் மட்டும் இந்த வகை புற்றுநோய் வந்துவிடும் என்பதில்லை. அது அவரவர் உடலமைப்பைப் பொறுத்தது. அதே நேரத்தில், கதிரியக்கத்தைத் தடுக்கக்கூடிய உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தாமல் பாதுகாப்பற்ற முறையில் கதிரியக்கம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்குத் தைராய்டு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தைராய்டு புற்றுநோய் மற்ற புற்றுநோய்களை விடக் கொடிய நோயா? தைராய்டு சுரப்பியை முற்றிலும் அகற்றுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
நிச்சயம் இல்லை. மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது, உரிய சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்தான் தைராய்டு புற்றுநோய். தைராய்டு சுரப்பியை அகற்ற வேண்டிய நிலை இருந்தால், தைராக்ஸின் போன்ற அடிப்படையான ஹார்மோன்கள் சுரக்கச் செய்வதற்கு, வாழும் காலம் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும்.
தைராய்டு புற்றுநோயைத் தவிர்க்க முடியுமா?
மரபு வழியாக வரக்கூடிய புற்றுநோய்களைத் தவிர்க்க முடியாது. கதிர்வீச்சு போன்றவற்றால் இந்தப் புற்றுநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். தைராய்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், முறையான பரிசோதனை செய்து கொள்வதும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும்போது, தைராய்டுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது.