தினமும் 30 தடவைக்கு மேல் சிரித்தே ஆக வேண்டும்
17 Oct,2017
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது வழக்குமொழி மட்டும் அல்லஸ விஞ்ஞான உண்மையும் கூட. எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் கார்டிசால் ஆகியவை, மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். மனம்விட்டுச் சிரிப்பதால், இந்த ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறதாம்.
இதனால், இயல்பாகவே மன அழுத்தம் குறைந்து விடுகிறது. சிரிப்பு, மூளையில் எண்டார்பின்களை சுரக்கச் செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தகுழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்பு படிதலும் தான், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு என, பல பிரச்னைகளுக்கு காரணங்கள். மனம் விட்டு சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடைய செய்யும்.
சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும், வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே. உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பை காட்டிலும், மகிழ்ச்சி குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் என, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தை சீராக்கும்; இருதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல் போன்ற மூளையின் செயல்திறனை கூர்மையாக்கும்.
தினமும் 30 தடவைக்கு மேல் சிரித்தே ஆக வேண்டும் என்பது தான், நல்வாழ்வுக்கான கட்டாயம். இணையதளத்தில் உலா வரும் சிரிப்புகள் காமெடிகள், நகைச்சுவை நடிகர்களின் சேட்டைகளை பார்ப்பது என, தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்து சிரித்தால் தான், நோய்களை தள்ளிப்போடலாம் அல்லது தவிர்க்கலாம். வீட்டுச்செல்லக் குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.