சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை மேஜிக் காளான்களின் காணப்படும் ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம் மீட்டமைக்கும் என்று பரிசோதனைகள் வலியுறுத்துகின்றன.
சிறியளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 19 நோயாளிகளுக்கு, சைகெடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது.
நோயாளிகளில் பாதி பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளை செயல்பாட்டில் அனுபவபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ள தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.
எனினும், லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாகவே மருந்தை எடுத்துகொள்ள கூடாது என்று கூறியுள்ளது.
ஆய்வுகளின் பரிந்துரை
மன உளைச்சலின் போது, சைலோசிபின் மூளைக்கு மசகுப் பொருள் போல செயல்படலாம் என்று பல தொடர் சிறிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
சைலோசிபின் அவ்வாறு செயல்படும்போது, மன உளைச்சல் அறிகுறிகளிலிருந்து நோயாளிகள் தப்பிக்க அனுமதிக்கிறது.
ஆனால், மூளை செயல்பாட்டின் மீது என்ன மாதிரியான குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
நோயாளிகளுக்கு சைலோசிபின் வழங்கப்படுவதற்கு முன்னரும், நோயாளிகள் நிதான நிலைக்கு வந்த பின்னரும் இம்பீரியல் குழுவினர் எம் ஆர் ஐ ஸ்கேனை எடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு, 'சைண்டிஃபிக் ரிபோர்ட்ஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூளையின் இரு முக்கிய பகுதிகளை சைலோசிபின் பாதிக்கிறது.
ஒன்று அமிக்டாலா பகுதி மற்றொன்று நரம்புகளின் பிணையப்பகுதி.
பயம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் அமிக்டாலா பெரும் பங்காற்றுகிறது. சைலோசிபின் உள்ளே சென்றவுடன் இந்த பகுதியின் செயல்திறன் குறைகிறது. அதேசமயம், சைலோசிபின் எடுத்து கொண்டபின் நரம்புகளின் பிணையப்பகுதி மிகவும் நிதானமாக செயல்படத் தொடங்குகிறது.
பெரியளவில் ஆய்வுகள் தேவை:
எனினும், இந்த பரிசோதனைகள் இன்னும் சிறியளவிலேயே இருக்கின்றன.
மேலும், மன உளைச்சலுக்கு சைலோசிபின் சிகிச்சையாக பயன்படுத்த முடியும் என்று ஏற்றுகொள்வதற்குமுன் பெரியளவிலான ஆய்வுகள் இதுகுறித்து இன்னும் தேவைப்படுகின்றன.
ஆனால், மன உளைச்சலுக்கான சிகிச்சையில் புதிய சிகிச்சை அணுகுமுறைகள் தேவை என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.