இரண்டாம் மூன்றுமாத காலம் – 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை (Second Trimester)
பல பெண்கள், முதல் மூன்றுமாத காலத்தை விட இரண்டாம் மூன்றுமாத காலம் எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
களைப்பு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இந்தக் காலகட்டத்தில் இருப்பதில்லை. குழந்தை வளர வளர, தாயின் வயிறும் வளரும்.
இரண்டாம் மூன்றுமாத காலம் – ஒவ்வொரு வாரமாக (Second Trimester Summary week by week)
◾13வது வாரம்: குழந்தையின் பாலுறுப்பு வடிவம் பெறத் தொடங்கும்.
◾14வது வாரம்: குழந்தையின் தலையிலும் புருவத்திலும் சிறிது முடி முளைக்கும்.
◾15வது வாரம்: குழந்தை வளைந்து நிமிரத் தொடங்குகிறது, கைமூட்டு மற்றும் கால்களை அசைக்கும். இந்தச் சமயத்தில் தாய்க்கு பல் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
◾16வது வாரம்: குழந்தைக்கு கண்கள் உருவாகும். தாயின் எடை கூடும்.
◾17வது வாரம்: குழந்தை விழுங்கவும் உறியவும் கற்றுக்கொள்கிறது.
◾18வது வாரம்: இப்போது குழந்தையின் அசைவுகளை நன்கு பார்க்க முடியும்.
◾19வது வாரம்: இச்சமயத்தில் தாய்க்கு கால் வலி ஏற்படலாம்.
◾20வது வாரம்: இந்த வாரத்தில் குழந்தையின் பாலுறுப்பு வடிவம் பெறுகிறது.
◾21வது வாரம்: குழந்தையின் அசைவுகள் அதிகமாக உள்ளது. இந்த சமயத்தில் தாயின் வயிறு விரிவடைதால் ஏற்படும் தழும்புகளைக் காண முடியும்.
◾22வது வாரம்: குழந்தையின் முக அம்சங்கள் நன்கு தெரியும். குறிப்பாக உதடுகள், புருவங்கள் நன்கு தெரியும். குழந்தையின் எடை சுமார் 450 கிராம் இருக்கும்.
◾23வது வாரம்: குழந்தையின் எடை கூடுகிறது, தாயின் வயிற்றின் மேல், ஒரு கருமையான செங்குத்து வரி ஒன்று தென்படுகிறது. இதை கருங்கோடு (லீனியா நீக்ரா) என்பர்.
◾24வது வாரம்: குழந்தையின் எடை துரிதமாகக் கூடுகிறது, நுரையீரலும் மூளையும் மேலும் வளர்ச்சியடைகின்றன. தாயின் வயிற்றில் தொப்புள் துருத்திக் கொண்டு தெரியும்.
◾25வது வாரம்: குழந்தையின் தோல் மேலும் மென்மையாகும், முடி மேலும் அதிகமாக வளர்ந்திருக்கும்.
◾26வது வாரம்: குழந்தையின் காதுகளின் நரம்புகள் நன்கு வளர்ந்திருக்கும், இச்சமயத்தில் குழந்தையால் உங்கள் குரலைக் கேட்க முடியும்.
◾27வது வாரம்: இப்போது குழந்தை தொடர்ச்சியான இடைவெளியில் தூங்கித் தூங்கி விழிக்கும். குழந்தையின் எடை இப்போது சுமார் 900 கிராம் இருக்கும். இரண்டாம் மூன்றுமாத காலத்தின் முடிவின்போது, தாய்க்கு கால் வலியும் முதுகு வலியும் ஏற்படலாம்.
◾28வது வாரம்: இந்தச் சமயத்தில் குழந்தை முழுவதுமாக உருவாகி, சுமார் ஒரு கிலோ எடை இருக்கும்.
இரண்டாம் மூன்றுமாத காலத்தில் தோன்றும் அறிகுறிகள் (Symptoms of the second trimester)
முதல் மூன்று மாதகாலத்தில் ஏற்பட்ட அறிகுறிகள் மறைந்து, வயிறு விரிவடைதல், குழந்தையின் அசைவுகளை உணர்தல் போன்ற புதிய மாற்றங்கள் ஏற்படும்.
மேலும், பின்வரும் மாற்றங்களும் ஏற்படலாம்:
◾உடல் வலி இருக்கும், குறிப்பாக கவட்டை, முதுகு அல்லது அடிவயிற்றுப் பகுதிகளில் அதிக வலி இருக்கும்
◾மார்பகங்கள், அடிவயிறு மற்றும் தொடைகளில் தோல் விரிவடைவதன் அடையாளங்கள் ஏற்படும்
◾உள்ளங்கை, அடிவயிறு மற்றும் உள்ளங்காலில் அரிப்பு ஏற்படும்
◾நெற்றி, கன்னங்கள் அல்லது மூக்கில் கருமையான தோல் திட்டுகள் ஏற்படும்
◾கால் பிடிப்பு வலி, முகம், கணுக்கால் அல்லது விரல்கள் வீங்கும்
◾மூலம் மற்றும் சிரை புடைப்பு பிரச்சனைகள் வரலாம்
எச்சரிக்கை (Red Flags)
பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும் அல்லது ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்லவும்:
◾அதிக இரத்தப்போக்கு
◾அடிவயிற்றில் கடுமையான வலி
◾அதிக காய்ச்சல்
◾கைகளிலும் முகத்திலும் கடுமையான வீக்கம்
◾பார்வை மங்குதல்
கர்ப்பத்தின் இரண்டாம் மூன்றுமாத காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் (Tests during the second trimester of pregnancy)
◾அல்ட்ராசவுண்ட்: நஞ்சுக்கொடி கருப்பையின் திறப்பை அடைத்துக்கொண்டுள்ளதா (பிளாசென்டா பெல்வியா) என்பதை சோதித்து அறிவதற்கு, ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று கண்டறிய அல்லது குழந்தை பிறக்கும் தேதியைக் கணக்கிடுவதற்காக சோனோகிராம் சோதனைகள் வழக்கமாக செய்யப்படுகின்றன. ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தென்பட்டால், மரபியல் சோதனை செய்யும்படி பரிந்துரைக்கப்படலாம்.
◾இரத்த குளுக்கோஸ் கணக்கீடுகள்: கர்ப்பகால நீரிழிவுநோய் (கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவுநோய்) உள்ளதா எனக் கண்டறிவதற்காக, கர்ப்பத்தின் 24-28 வார காலத்தில் இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன.
◾ஃபீட்டல் டாப்ளர் அல்ட்ராசவுண்ட்: நஞ்சுக்கொடியிலிருந்து கருவிற்கு இரத்தம் சரியாகப் பாய்கிறதா என்பதை சோதிக்க இந்தச் சோதனை செய்யப்படுகிறது.
◾பனிக்குடத் துளைப்பு: இந்த சோதனையில், ஒரு ஊசியின் மூலம் பனிக்குடத் திரவம் உறிஞ்சி எடுக்கப்பட்டு, மரபியல் கோளாறுகள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏதும் உள்ளதா என அறிவதற்காக ஆய்வு செய்யப்படும். மரபியல் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பெண்களுக்கும் 35 அல்லது அதற்கு அதிக வயதுடைய பெண்களுக்கும் இந்தச் சோதனை செய்யப்படுகிறது.