பூச்சிகள் இறந்த பிறகும் மனிதர்களைத் துன்புறுத்தும்
01 Oct,2017
பெரும்பாலான நோய்கள் மனிதர்களுக்குக் கொசுகள் மூலமாகவே பரவுகின்றன. கொசுகள் நன்னீரில் வாழக்கூடியவை. வீடுகளில் இருக்கும் மூடப்படாத தண்ணீரில் இவை உயிர் வாழ்வதுடன் நோய்களையும் பரப்புகிறது. இந்தக் கொசுகள் வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. அதன்படி இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் கொசுகளினால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், பூச்சிகள் இறந்த பிறகும் மனிதர்களைத் துன்புறுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கொசுகள் இறந்த பிறகும் மனிதனுக்கு ஆபத்தானதாக இருக்கும். இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்ட்டியூட் ஆய்வு நடத்தியது. அதில், இறந்த பூச்சிகளின் முடிகள், எச்சில், கழிவுகள் காற்றில் கலந்துவிடுகின்றன. பின்னர் அதைச் சுவாசித்தல் மூலமாக மனிதர்கள் உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ஆய்வுத் தலைவரும், நுரையீரல் மருத்துவத்தின் தலைவருமான டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், “ஆஸ்துமா, அலர்ஜி நோயாளிகள் வாழும் வீடுகள் தூய்மையாக இருக்க வேண்டும். 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயாளிகளிடம் ஏரோ அலர்ஜன்ஸ் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 4,000 பேரிடம் நடத்தப்பட்டது. பூச்சிகள் 39% அளவுக்கு ஏரோ அலர்ஜன்ஸ் ஆக இருக்கின்றன.
இதையடுத்து தூசி பூச்சிகள் (12%), களை மகரந்தம் (12%), தூசி (11%), பூஞ்சை வித்திகள் (6%) மற்றும் மரம் மகரந்தம் (6%) பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளில் கரப்பான் பூச்சிகள் (49%), கொசுகள் (31%) என காற்று மூலம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த விளைவு ஏற்படுகிறது.
ஆஸ்துமா என்பது நீண்ட கால அழற்சி நோயாகும். இது அனைத்து வயதினர் மக்களையும் பாதிக்கிறது. ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் 2 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34% பேர் 20 வயது முதல் 29 வரை உள்ளவர்கள். இது இளைஞர்களிடையே உற்பத்தித் திறனைப் பாதிக்கும். அதனால், இதுகுறித்து அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு அதிலிருந்து விலகியிருக்கவும் தெரிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.