நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:
மன இறுக்கம் (Depression)
உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்குக் காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன, ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாகக் கருதப்படுகின்றன, அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவதில்லை.
உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாகத் தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அடையாளங்களாகும்.
இந்த அறிகுறிகளில் ஒன்றோ, சிலவோ இரண்டு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
பீதி மற்றும் மனக்கலக்கக் கோளாறுகள் (Panic and anxiety disorders)
பெரிய செயல்களைச் செய்யும் முன்பு ஒருவருக்கு ஓரளவு பீதியாகவும் மனக்கலக்கமாக இருப்பதும் சகஜம் தான். ஆனால், அந்த பயம் நீங்காமல் தொடர்ந்து இருப்பதும், சமூக மற்றும் மனம்சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும் அளவுக்கு இருப்பதும் உங்களை எச்சரிக்கும் அடையாளங்களாகும். இளம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களில் பலரும் பீதிக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதற்றம், பரபரப்பு, களைப்பு, தூக்கம் வராமை, தொடர்ந்து ஏதேனும் நினைவுகளை அசைபோட்டபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மனக்கலக்கக் கோளாறுகளின் அறிகுறிகளில் சிலவாகும். பீதிக் கோளாறு உள்ளவர்களுக்கு, திடீரென்று பீதியடைவார்கள், அந்த சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மயக்கம் ஏற்படும், உளறுவார்கள், தொண்டை அடைத்துக்கொள்ளும்.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒருவருக்கு அடிக்கடி தென்பட்டால், குறித்த நேரத்தில் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் (Eating disorders)
ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சமூகத்தின் அபிப்ராயமும், சாப்பிடுவது குறித்த கோளாறுகள் பெண்களுக்கு ஏற்பட ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் சாப்பிடுவது தொடர்பான பொதுவான கோளாறு பசியின்மையாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதைத் தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள். இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஆஸ்துமா மற்றும் வகை -1 நீரிழிவுநோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சனை பசியின்மை ஆகும். எனினும், மெலிதாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சனை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ எப்போதும் உடல் எடை கூடிவிடும் என்ற பயம், உடல் எடை பற்றிய கவலை இருந்தால், ஓரிரு வாய் சாப்பிட்டுவிட்டு அத்தோடு போதும் என்று சொல்லும் பழக்கம் இருந்தால், அவர்கள் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்