எலும்புகளை உறுதியாக வைத்திருக்க, பல உடற்பயிற்சி முறைகள் உண்டு. இதில், சைக்கிளிங் மிகச்சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சைக்கிளிங்கை விட, ஓட்டப்பயிற்சியால், எலும்புகள் உறுதியடைகின்றன என, ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், பயிற்சி முடிந்ததும், உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில், சில உணவுகள் கைகொடுக்கின்றன. உடலை சோர்விலிருந்து மீட்டெடுக்க, சால்மோன் மீனில் உள்ள ஒமேகா 3, கொழுப்பு அமிலங்களும், ஆன்டிஆக்சிடென்ட்களும் உதவுகின்றன.
சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்ப்பதன் மூலம், இதன் ஆரோக்கிய பலன் அதிகரிக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் ஒரு வகை உணவு இது.
ஓட்ட பயிற்சியை மேற்கொள்பவர்கள், ஆற்றலை அதிகரிக்க கார்போஹைட்ரெட் அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது அதிகம் உள்ள ஒரு உணவு, வாழைப்பழம். இதை பழமாக உண்பதை விட, பால் சேர்த்து வாழைப்பழ மில்க் ஷேக்காக பருகலாம். கொழுப்பில்லாத பால், வாழைப்பழம் மாறும் ஸ்ட்ராபெரியை ஒன்றாக சேர்த்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால், உங்கள் காலை உணவு சிறக்கும்.
ஓட்டப்பயிற்சிக்கு பின், பழங்கள் உண்ணுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரஞ்சு, ஆப்பிள் ப்ளாக்பெர்ரி மற்றும் நாரத்தம்பழம் போன்றவை
உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஒரு நாளை ஆரோக்கியமாக துவங்க, காய்கறிகள், முக்கிய பங்கு வகிக்கின்றன. இவைகளில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், புரதம், வைட்டமின், மினரல் ஆகியவை, உடலுக்கு வலுவை சேர்க்கின்றன. மெலிந்த தசைகளை வலு பெற செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கீரைகள், லெட்டூஸ், ப்ரோக்கோலி, கேரட் போன்றவற்றையும் உண்ணலாம். பிரெட்டுடன், காய்கறிகளை சேர்த்து உண்ணுவது நன்மை கொடுக்கும். வேக வைத்த முட்டையும் காலை உணவில் இடம் பிடித்தால், இன்னும் சிறப்பு.
ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், பாதாம் சாப்பிடுவது நல்லது. கார்ன்பிளக்ஸ், மில்க்ஷேக்குடன் இதை சேர்த்து எடுத்துக் கொள்வது, வயிற்றை நிரப்பும்.
ஓட்சில் உள்ள புரதம், கார்போஹைடிரேட் போன்றவை உடலுக்கு ஆற்றலை மீட்டு தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி பசியை குறைக்கிறது. ஓட்ஸ்வுடன் சேர்த்து பழ வகைகளையும் உண்ணலாம். இது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உடல்நலப்பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, பயிற்சி மேற்கொள்ளலாம். வழக்கமான ஓட்டப்பயிற்சியை செய்ய விரும்பாவிட்டால், வித்தியாசமான பயிற்சியை எடுத்துக் கொள்ள நினைத்தால், உங்கள் மருத்துவரை அணுகலாம். வாரத்துக்கு ஒரு முறைக்கு மேல், ஓட்டப்பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டால், நீங்கள் உங்கள் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம். படிப்படியாக ஒரு மணிநேரம் வரை அதிகரிக்கலாம். களைப்பாக இருக்கும்போது, இடைவெளி எடுத்துக்கொண்டு பயிற்சியைத் தொடரலாம்.
பயிற்சிக்கு பயன்படும் ஷூக்கள், மிகவும் கனமாகவும், தடிமனாகவும் இருக்கக் கூடாது. ஷூக்கள், கால்கள் இயல்பாக இயங்குவதற்கும், தரையை உணரும் வகையிலும் இருக்க வேண்டும். வழக்கமான அளவைவிட சற்று பெரியதாக இருக்கும் நல்ல வடிவமுள்ள ஷூக்களைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு வசதியாக இருக்கக்கூடிய ஷூக்களைப் பயன்படுத்துவது உங்களுக்கு சவுகரியத்தையும், சோர்வடையாமல் இருக்கவும் செய்யும்.