இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்
22 Sep,2017
நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவுவதுபோல், மன ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது.
இன்றைய விளையாட்டு என்பதும் அதிகபட்சம் 10-க்கு 10 அறைக்குள் சுருங்கிவிட்டது. கோலி, பம்பரம், கிரிக்கெட் மட்டை, ஹாக்கி ஸ்டிக், டென்னிஸ் ராக்கெட் எல்லாம் மறைந்து ‘பி எஸ் 3, எக்ஸ் பாக்ஸ், மொபைல், ஆன்ட்ராய்ட், கம்ப்யூட்டர், நெட்’ இவையே இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் தவிர்க்க முடியாத விளையாட்டுச் சாதனங்களாக உருவெடுத்துள்ளன. இதைத் தாண்டி அவர்கள் அதிக நேரம் செலவிடுவது தொலைக்காட்சியின் முன்புதான். நாள் முழுக்க படிப்பு, கம்ப்யூட்டர், டி.வி. என்று நேரத்தைச் செலவிடும் இன்றைய இளைஞர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இன்று பள்ளி மாணவர்களுக்குக்கூட ‘இளந்தொந்திகள்’ இருக்கிறது.
பாடி பில்டராக வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களைத் தவிர்த்து, மற்ற இளம் ஆண், பெண்களைப் பொருத்தவரை உடற்பயிற்சி என்பது ‘முதியவர்கள் செய்வது, அல்லது ஸ்லிம் ஆக ஆசைப்படுபவர்கள் செய்ய வேண்டியது’ என்ற எண்ணம் மனதில் பதிந்திருக்கிறது.
போதுமான உடற்பயிற்சி இல்லாததால் இளம் வயதிலேயே ‘டைப் 2’ சர்க்கரை நோயால் அவதிப்பட நேரலாம். நாம் சாப்பிடும் உணவு குளுக்கோசாக மாற்றப்படுகிறது. அளவுக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு, எதிர்கால உபயோகத்துக்கு என்று சேகரித்து வைக்கப்படுகின்றன. இப்படி, தொடை, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புக்கள் ஆபத்தானவை.
இது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய்கள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு, குறைந்தது 45 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால்கூட போதும். உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பு எரிக்கப்பட்டுவிடும். ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறலாம்.
தற்போது கொழுப்புச் சத்து நிறைந்த துரித உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம்.அதிலும், இளம்பருவத்தினருக்கு உணவில் வரைமுறையே இல்லை. இரவு நேரத்தில் மிதமான உணவை பலரும் பின்பற்றுவது கிடையாது. விளைவு, உடல் எடை கூடி கொழுப்பு சேர்ந்து ரத்தக்குழாயில் படிகிறது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தக் குழாயில் அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பாகவும் அமைகிறது. இதனால், சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட வீண்பதற்றம் அடைகின்றனர். அதுவே மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.
நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவுவதுபோல், மன ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான தூக்கத்துக்கும், கவனச்சிதறலில் இருந்து காப்பதற்கும் உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலில் ‘எண்டோர்பின்’ (endorphin) என்ற ரசாயனம் உற்பத்தியாகிறது. இது மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உதவிபுரிகிறது. குழுவாக இணைந்து விளையாடும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், கூச்சம், தாழ்வு மனப்பான்மையும் விலகும்.
உடற்பயிற்சிக்கு கடுமையாக, பலமான பொருட்களைத் தூக்கிச் செய்யவேண்டும் என்பதில்லை. டீன் ஏஜினர் 20 வயதுக்கு மேல் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். மற்றவர்கள் ‘எடை’ தூக்கும் பயிற்சிகளைச் செய்யாமல், நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
காலை நேரத்தில் பிள்ளைகளோடு நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிள்ளைகள் விரும்பிய விளையாட்டை ஊக்குவித்தல், முறையான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் போன்றவைகளால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளமுடியும். இளம் பருவத்தினருக்கு எடுத்துக்காட்டாக பெற்றோர்கள் இருந்தாலே போதுமானது. இன்றைய இளைஞர்களுக்கு யோகா சிறந்த தீர்வாக அமையும். அதை உருவாக்கித் தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
இந்நாளை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பின்நாளை சுகமாகக் கழிக்க மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வோம்.