அல்சைமர் (Alzheimer) முதுமையில் வரும் `டிமென்ஷியா’ என்கிற ஞாபகமறதி நோயின் ஒரு வடிவம். டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது கவலைக்குரிய விஷயம். ஒருவர் அல்சைமர் பிரச்னைக்கு ஆளாகியிருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே தரப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
பொருள்களை இடம்மாற்றி வைத்தல்
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், வழக்கத்துக்கு மாறான இடங்களில் பொருள்களை வைப்பார். பொருள்களைத் தொலைத்துவிட்டு, அதை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் திணறுவார்.
முடிவெடுக்கும் திறன் குறைதல்
பணம் தொடர்பான விவகாரங்களில் மோசமான முடிவுகளை எடுப்பார்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வது அல்லது சுத்தமாக வைத்துக்கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.
ஞாபகமறதி
சமீபத்தில் கற்றுக்கொண்ட விஷயத்தைக்கூட மறந்து போவார்கள். முக்கியமான தேதிகள் நினைவில் இருக்காது. ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
வார்த்தைகளில் குழப்பம்
பேசுவது, எழுதுவது எதிலும் அல்சைமர் பாதித்தவர்களால் ஓர் உரையாடலைத் திக்கல், திணறல் இல்லாமல் மேற்கொள்ள முடியாது. உரையாடும்போது நடுவில் நிறுத்திவிடுவார்கள். பிறகு அதை எப்படித் தொடர்வது என்பது அவர்களுக்குத் தெரியாது.
சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகுதல்
பொழுதுபோக்குகள், சமூக நடவடிக்கைகள், வேலை தொடர்பான புராஜெக்ட்கள், விளையாட்டு ஆகியவற்றில் இருந்து ஒருவர் விலக ஆரம்பித்தால், அவர் சமூகத்தைப் புறக்கணிக்கிறார் என்று அர்த்தம். இதுவும் அல்சைமருக்கான ஓர் அறிகுறியே!
காணும் உருவங்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம்
படிப்பது, தூரத்தைக் கணக்கிடுவது, நிறங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் சிலருக்குச் சிரமம் ஏற்படும். முகம் பார்க்கும் கண்ணாடியைத்தான் கடந்து போயிருப்பார்கள். ஆனால், அங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் என்று அவர்களின் புலன் உணர்வு உணர்த்தும்.
நேரம், இடம் தொடர்பான குழப்பம்
இன்றைக்கு என்ன தேதி, இப்போது என்ன நேரம், இது எந்தப் பருவகாலம், எந்த இடம் என்பதை அறிய மாட்டார்கள். ஏதோ ஒரு விஷயம் நடந்திருந்து, அது இப்போது நடக்கவில்லையோ என்கிற குழப்பத்துக்கு ஆளாவார்கள்.
வேலைகளைச் செய்யச் சிரமப்படுதல்
வீட்டில், வேலையில் தினமும் செய்யும் பணிகளைக்கூட முடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். சில நேரங்களில் மிகவும் பழக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் வழி தெரியாமல் திணறுவார்கள் அல்லது வழக்கமாகச் செய்யும் வேலையைச் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
மனநிலை, குணத்தில் மாற்றம்
குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, கவலை, பயம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள், பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி முரண்பட்டு மன வருத்தத்துக்கு ஆளாவார்கள். வீடு, அலுவலகம் போன்ற பழகிய இடங்கள்கூட இவர்களுக்கு அந்நியமாகத் தெரியும்.