ரத்தம், நம் உடலில் என்ன நோய் இருக்கிறது என்பதையும் உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் கண்ணாடி. ஒருவரின் ரத்தத்தைப் பரிசோதிப்பதன்மூலம் பல நோய்களைக் கண்டறிய முடியும். சாதாரண சளி, காய்ச்சல் முதல் சர்க்கரைநோய் வரை சிகிச்சைக்குச் செல்லும்போது, சில ரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இதன் காரணமாகத்தான்.
எளிமையான ரத்தப் பரிசோதனைகளின் மூலம் பல நோய்களை அல்லது நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைச் சரியாகக் கணித்துவிட முடியும். எல்லா நோய்களுக்கும் ஒரேவிதமான ரத்தப் பரிசோதனை செய்ய மாட்டார்கள். அதேபோல நோய்களுக்கு ஏற்ப ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நேரமும் மாறுபடும். ஒருவருக்கு எப்போதெல்லாம் ரத்தப் பரிசோதனை அவசியம் என்பதன் அடிப்படையில், இதை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவைஸ
1. ஆரோக்கியமான ஒருவர் தன் உடல்நலன் பற்றி அறிந்துகொள்ளச் செய்யும் ரத்தப் பரிசோதனை.
2. ஒருவருக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை அறிய உதவும் ரத்தப் பரிசோதனை.
3. நோய்க்கான மருத்துகளை உட்கொண்ட ஒருவர், அது வேலை செய்கிறதா என்பதை அறிய உதவும் ரத்தப் பரிசோதனை.
சர்க்கரைநோய்க்கு
ஒருவர், தனக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை அறிய, இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து, (வெறும் வயிற்றில்) ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு, காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்துப் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்கள் என்றால், உணவுக்குப் பின்னர் செய்ய வேண்டிய ரத்தப் பரிசோதனையை மட்டும் செய்துகொள் ளலாம். அவர்கள் வழக்கமாகச் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகே இதைச் செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனையைத் தங்களின் கர்ப்ப காலத்தின் 24 வாரங்களில் செய்துகொள்ள வேண்டும். ஆனால், உணவுக்கு முன்னர் (வெறும் வயிற்றில்) செய்ய வேண்டியதில்லை. உணவுக்குப் பின்னர் ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேர இடைவெளிகளில் இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இதற்கு `ஓ.ஜி.டி.டி’ (Oral Glucose Tolerance Test- (OGTT) என்று பெயர்.
கொலஸ்ட்ராலுக்கு
ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனையை இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 முதல் 10 மணி நேரம் கழித்து (வெறும் வயிற்றில்) செய்ய வேண்டும்.
தைராய்டுக்கு
தைராய்டு செயல்பாட்டை அறிய உதவும் ரத்தப் பரிசோதனைக்கு Free T3, Free T4 மற்றும் TSH என்று பெயர். இது ரத்தத்தில் உள்ள தைராய்டு அளவைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் பரிசோதனை. இதை வெறும் வயிற்றில், வேறு நோய்களுக்காக மருந்து, மாத்திரை சாப்பிடுவதற்கு முன்னதாகச் செய்துகொள்ள வேண்டும்.
கவனம்: காய்ச்சல் மாதிரியான உடல்நலக் குறைவு உள்ள ஒருவருக்கு மேற்கண்ட பரிசோதனை களைச் செய்யும்போது அந்தப் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்காது. இயல்பான முடிவிலிருந்து சற்று மாறுபட்டிருக்கும்.
காய்ச்சலுக்கு
பொதுவாக ஒருவருக்கு நான்கு நாள்கள் வரை மட்டுமே காய்ச்சல் இருந்தால், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. அதற்குமேலும் காய்ச்சல் நீடித்தால், அது எந்த வகையான காய்ச்சல் என அறிந்துகொண்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
டெங்குக் காய்ச்சலுக்கு
டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கும்போது ஆரம்பநிலையிலேயே அதை உறுதிசெய்ய ‘டெங்கு என்.எஸ்.1 ஆன்டிஜென் பரிசோதனை’ (Dengue NS1 Antigen Test) செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை யைக் காய்ச்சல் நீடிக்கும் முதல் வாரத்திலேயே செய்ய வேண்டும். ஏழு நாள்களுக்குப் பிறகு, டெங்குவை அறிந்துகொள்ள டெங்கு ஐஜிஎம் (Dengue IGM) ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
டைபாய்டு காய்ச்சலுக்கு
முதல் வாரத்தில் ரத்த கல்ச்சர் சோதனை (Blood Culture Test) செய்துகொள்ள வேண்டும். இரண்டாவது வாரத்தில் பரிசோதனை செய்வதாக இருந்தால், வைடல் ரத்தப் பரிசோதனை (Widal Test) செய்ய வேண்டும்.
மலேரியா காய்ச்சலுக்கு
குளிர்க் காய்ச்சல் வந்த பின்னர் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டால் மலேரியாவின் அறிகுறி துல்லியமாகத் தெரிந்துவிடும். ரத்தத்தில் மலேரியாவை உண்டாக்கும் கிருமிகள் இருக்கின் றனவா என அறியும் எம்.பி.க்யூ,பி.சி (MP QBC TEST) ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். தனக்கு வந்திருப்பது எந்த வகைக் காய்ச்சல் என்பது தெரியாதவர்கள் பொதுவான ரத்த கல்ச்சர் சோதனை (Blood Culture Test) செய்து கொள்ளலாம். இந்த ரத்தப் பரிசோதனையை ஆன்டிபயாட்டிக் உட்கொள்வதற்கு முன்னதாகச் செய்ய வேண்டும்.
கல்லீரல் செயல்பாடு அறிய
உடல் பருமனாக இருப்பவர்கள், ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்கள் கல்லீரல் செயல்பாட்டை அறிந்துகொள்ளும் ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம். லிவர் ஃப்ங்ஷன் பரிசோதனை (LFT) மூலம் கல்லீர லின் செயல்பாட்டைத் துல்லியமாக அறியலாம். இவர்கள் வெறும் வயிற்றில் இந்தப் பரிசோதனை யைச் செய்துகொள்ள வேண்டியதில்லை.
சிறுநீரகத்துக்கான பரிசோதனை
சர்க்கரைநோய் உள்ளவர்கள், சர்க்கரைநோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் யூரியா மற்றும் நைட்ரஜன் அளவுகளை அறிய ரீனல் ஃப்ங்ஷன் டெஸ்ட் (Renal Function Test) என்கிற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இதையும் வெறும் வயிற்றில் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.