வீடு சுத்தமாக இல்லையா? – எடை கூடும்!
14 Sep,2017
அதிக எடை அல்லது பருமன் ஏற்படுவதற்கு டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சர்யமான காரணம் அறியப்பட்டுள்ளது. அது வீட்டில் ஆங்காங்கே காணப்படும் தூசு!
மண்டிக்கிடக்கும் தூசுவில் உள்ள ஒரு மாசுப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்டோகிரைன் டிஸ்ரப்டிங் கெமிக்கல்ஸ் (EDC) என்கிற அப்பொருள் நம் உடலின் நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களைப் பாதிக்கும் தன்மை உடையது. இதனால் நோய் எதிர்ப்புசக்தி முதல் இனப் பெருக்கம், நரம்பியல் செயல்பாடுகள் வரை சகலமும் பாதிக்கப்படுகின்றன. சிறுவயதிலேயே EDC வகை நச்சுத்தன்மை உடைய தூசுகள் உடலில் புகுந்தால், அடுத்துவரும் ஆண்டுகளில் உடல் எடை அதிகமாகும் என்றும் அறியப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினாவின் 11 வீடுகளில் தூசுகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் 7 மாதிரிகள் கொழுப்பு செல்களில் வேகமாகச் செயல்பட்டு அவற்றை அசுர வேகத்தில் வளரச் செய்திருக்கின்றன. இதனால் ட்ரைகிளிசரைடுகள் (கொழுப்பு அமிலங்கள்) உடலில் சேரத்தொடங்கும். அதிர்ச்சியூட்டும் விதமாக, 9 மாதிரிகள் அந்தக் கொழுப்பு செல்களை அதிகப்படுத்தி, இப்போது இல்லாவிட்டாலும் பின்னாளில் கொழுப்பு கூடுவதற்கு வழிவகுக்கின்றன என்றும் உறுதி செய்துள்ள விஞ்ஞானிகள், அன்றாடம் நம் வீட்டில் தேங்கும் தூசுகளில் 44 வகை ரசாயனங்கள் இருப்பதாகவும் அதிர்ச்சி அளிக்கின்றனர். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கைப்படி, ஒவ்வொரு குழந்தையும் சராசரியாகத் தினம் 50 மில்லிகிராம் தூசை உட்கொள்கிறது. 3 மில்லிகிராம் மாசு உள்ளே சென்றாலே விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறபோது இது அதிர்ச்சித்தகவல்.
இந்த அபாயத்திலிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதே முதலும் முழுமையுமான வழி. அடுத்து கைகள் சுத்தமாக இருந்தால், தூசு கெமிக்கல்கள் உட்செல்வதைத் தடுக்கவும் முடியும்.