உடல் பலத்தைக் கூட்டும் பாதாம்
01 Sep,2017
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
உடல் பலத்தைக் கூட்டும் பாதாம்
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது.
சத்துக்கள் பலன்கள்: இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது. 100 கிராம் பாதாம் பருப்பில் 25 கிராம் வைட்டமின் இ சத்து உள்ளது. இது நம் ஒரு நாளையத் தேவையில் 170 சதவிகிதம். இதுதவிர, பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. அதாவது, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் இ, பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஃபிளவனாய்டுகள் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் அதிக அளவில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இது மிகவும் குறைவான கிளைசிமிக் இ்ண்டெக்ஸ் கொண்டதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
பாதாம் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் உலர்தல் பிரச்னை நீங்கி, பளபளப்பைக் கூட்டும்.
தேவை: நாள் ஒன்றுக்கு ஒரு கை அளவு பாதாம் மட்டுமே சாப்பிடுவது அன்றைக்குத் தேவையான அளவு தாது உப்புக்கள், வைட்டமின்கள், புரதம் உள்ளிட்டச் சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, தினமும் 4 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், குண்டானவர்களும் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டாலே போதும்.