................................
.
பக்கத்து ஊரிலிருந்து வருவார் அந்தப் பிணியாளர்.தலைவலி, கால்வலி, நெஞ்சுவலி, வயிறு உப்புசம், பசி இல்லை, தூக்கம் இல்லை, தூங்கினால் என்னென்னவோ தோன்றுகிறது, தூக்கத்தில் தானாக உளறுகிறேன் என்று உடம்பில் அத்தனை பகுதிகளிலும் புகார் வாசிப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் அவருக்கு இருப்பது மனப் பதற்ற நோய் (Anxiety disorder). ஆனால், நுட்பமாகப் பார்த்தால் அவரது விஷயமே வேறு மாதிரியானது.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அவரது மகன் காதல் திருமணம் செய்துகொண்டார். அதுவும்
சொந்த மதத்தில்தான் திருமணம் செய்து தனிக்குடித்தனம் இருக்கிறார். சொந்தக்காரங்க எல்லாம் கேவலமாப் பேசறாங்க சார், எங்க பழக்கப்படி இது எல்லாம் ரொம்ப தப்பு சார், அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணி இருக்குதாம் சார், நான் இவனை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்ப தனியா வேலைக்குப் போறான், பணக் கஷ்டம் வந்தா என்ன செய்யபோறானோ தெரியலை, எனக்கு இருக்கிறது ஒரே பையன், என் சம்பாத்தியம் அத்தனையும் அவனுக்குத்தான், ஆனால் அவனை பார்த்தால் பெத்த வயிறு பத்தி எரியுது. நல்ல சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, அந்தப் பொண்ணு அவனைப் பிழிஞ்சி எடுக்கிறா போல இருக்கு. ஆளே பாதியாய் போயிட்டான்ஸ’- இப்படி என்னிடம் மட்டுமல்ல. பார்ப்பவரிடம் எல்லாம் எப்போது பார்த்தாலும் மகனைப் பற்றி புலம்பிக் கொண்டிருப்பார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டு சலனம் இல்லாமல் அமர்ந்திருப்பார் அவர் மனைவி.
விஷயம் இதுதான். மகன் தனது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதிலிருந்து இவருக்கு ஏகப்பட்ட குழப்பங்கள். பல ஆண்டுகளை இப்படியே கழித்துவிட்டார். அவரது மனக் குழப்பங்கள் எல்லாம் அவருள்க்குளேயே புதைக்கப்படுகின்றன. எதற்கும் விடை கிடைக்கவில்லை. அவருக்கு கேள்விகள் நிறைய. விடைதான் கிடைக்கவில்லை. அவர் சமூகத்துக்காகவும், சொந்த பந்தங்களின் விமர்சனத்துக்காகவும் அதிகம் அச்சப்படுகிறார். உண்மையில் தன் மகன் தன் மீது கொண்டுள்ள பாசத்தை கூட குழப்பங்கள் மறைத்துவிடுகிறது. ஒரு சமயம் மகனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசிக்கிறார். அதேநேரம் அந்த பெண்ணை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறுகிறார். ‘பேசாம அவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வெச்சிட்டா கொஞ்ச நாள்ல இந்த பொண்ணு அவனை மறந்திடும். இல்லைன்னா யார் கூடவாவது ஓடிப்போயிடும்(!?). அப்புறம் அவனுக்கு நம்மோட சொந்தத்திலேயே நல்லப்பொண்ணா பார்த்து கட்டி வெச்சிடலாம், எப்படி சார் என் ஐடியா?’ என்று கேட்பார்.
ஆனால், மகன் இவருக்கு நேர்மாறானவர். அழுத்தக்காரர். அதிகமாகப் பேச மாட்டார். அந்தத் தம்பி ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்துவைத்து நல்ல குடும்பஸ்தனாக வாழ்கின்றார். தந்தை மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். அதேசமயம், தான் காதலித்து மணந்த பெண்ணையும் உளமாற நேசிக்கிறார். பிரிதல் என்பதெல்லாம் அவர்களிடம் சாத்தியமே இல்லை என்று அந்த இளைஞரிடம் பேசியதில் தெரிந்தது. பெரியவரை எனக்கு மூன்று ஆண்டுகளாக தெரியும். அதில் நிம்மதியாக இருந்த நாட்கள் மிகக் குறைவு. இதனை Somatisation என்கிறோம். அதாவது, உள்ளம் சார்ந்த பிரச்னைகளை உடல் பிரச்னையாக மாற்றிக்கொள்ளுதல். மன ரீதியான பிரச்னைகள் எல்லாம் உடல் ரீதியாக வெளிப்படும். அநேகமாக உடலின் அத்தனை பகுதிகளிலும் வலி என்று புலம்பித் தள்ளுவார்கள். எந்த மருத்துவ விளக்கமும் சொல்ல முடியாத விசித்திர புகார்களை அள்ளி வீசுவார்கள். தனது ஆழ்மன முரண்பாடுகள்தான் உடல் உபாதைகளாக வெளிப்படுகிறது என்பது அவர்களுக்கே தெரியாது. சரி என்னதான் தீர்வு? அந்தப் பெரியவர் என்ன செய்திருக்க வேண்டும்?
* மகனின் காதலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது மறந்துவிட வேண்டும்.
* ஓரளவுக்கு மேல் சமூகத்தின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்கக் கூடாது.
* சில செயல்களுக்கு விதியின் மீதுதான் பழியைப் போடவேண்டும். அப்போது மட்டுமே நம்மால் அதை ஜீரணம் செய்ய முடியும். அடுத்தவரது கோணத்தில் அதாவது அவரது மகனின் இடத்திலிருந்து இந்தப் பிரச்னையை பார்க்க தவறிவிட்டார் அவர். உண்மையில் தந்தையையும் சமாளித்துக்கொண்டு குருவித் தலையில் பனங்காயாக சிறு வயதில் தனிக்குடித்தனமும் போய் எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் இடையிலும் அந்த பெண்ணையும் காப்பாற்றுகிறார் இளைஞர்.
இருதலைக் கொள்ளி நிலை. சொந்த மதம், இனத்தில் கல்யாணம் செய்தாலும் இப்படி எல்லாம் பிரச்னைகள் வந்தால் காதல் எப்படி வாழும்? காதல் ஒருபக்கம் கிடக்கட்டும். தந்தை இப்படி நோயாளியாகி அவஸ்தைப்படும் பரிதாபத்தை என்னவென்று சொல்லஸசமூகத்தின் விமர்சனங்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கும் ஒரு அப்பாவி தந்தையான இவர், அளவு கடந்த மகன் பாசத்தையும் விட்டுத் தரமுடியாமல் அவர் செய்த காரியத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் துடிக்கிறார். உடலுக்கும், மனதுக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது என்பதற்கு உதாரணம்தான் இந்த Somatisation disorder. இதனுள் இருக்கும் உளவியல் காரணங்கள் இவை.
* ஒருவருக்கு வேலையில் தோல்வி, சமூகத்தில் தோல்வி, உடல் ரீதியாக துணையை திருப்திபடுத்த இயலாமை – இவற்றை நியாயப்படுத்திக்கொள்ள உடல் ரீதியான பல்வேறு தொந்தரவுகளை வலியை இழுத்துப் போட்டுக் கொள்வார்கள். உண்மையில், அது மன வலியே. ஆனால், அவர்களுக்கு அது உடல் வலியாக வெளிப்படும். இதனை Rationalization என்கிறோம்.
* சில சிக்கலான மனிதர்களையும், சம்பவங்களையும் சரி செய்வதற்காக தமது சக்தியை வெளிப்படுத்துவதற்கான ஆயுதமாக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். ஆனால், அவர் அதை போலியாக அரங்கேற்றுகிறார் என்பது அவருக்கே தெரியாததுதான் இந்த மனநோயின் விந்தை.
* எனக்கு தீராத மன வலி இருக்கிறது, உதவுங்கள் என்பதை மற்றவர்களுக்கு சொல்லும் ஓர் ஆயுதமாகவும், கழிவிரக்கம் அதிகமாகி கதறும்போதும் இப்படிப்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். மனதில் வலி – உடல் அழுகிறது என்பது இதுதான். மனதில் அழுத்தம், மனநோய் என்று இதை வெளியே சொல்லவும் அச்சம். சமூகம் கேவலப்படுத்திவிடும் என்று வாயே திறக்காமல் மனதில் புதைத்து, புதைத்து கடைசியில் அவை உடலியல் கோளாறுகளாக வெடிக்கின்றன.
ஆரம்ப நிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் 25 சதவிகிதம் பேருக்கு இதுபோன்ற Somatoform disorders இருப்பது சகஜமே. தனக்கு இருப்பது மனக்கோளாறுதான் என்று அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு சீக்கிரம் மனநல மருத்துவரிடம் வந்துவிடமாட்டார்கள். ஜோசியர், சாமியார், மந்திரவாதி கடைசியாய் பொது மருத்துவர் என்று பல சுற்றுக்கள் சுற்றிய பின்பே இவர்களுக்கு மனநல மருத்துவம் என்கிற ஞானோதயம் பிறக்கும். அதுவும் மேற்படி பொது மருத்துவர்கள் மனநல நிபுணரை சுட்டிக்காட்டியிருப்பார்கள். மன நல மருத்துவத்தில் இதனை செல்லமாக KKK syndrome என்போம். அப்படி எனில் என்ன என்கிறீர்களா? அது ஒன்றுமில்லை, கை, கால், குடைச்சல் சிண்ட்ரோம்!