இன்றைய சூழலில் சர்க்கரைநோய் என்பது சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிகளும் நவீனமயமாகி வருகின்றன. இருந்தாலும், சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போடப்படும் இன்சுலின் உபயோகம் குறித்த விழிப்பு உணர்வு நம் மக்களிடையே இன்னும் அதிகமாகவில்லை. இன்சுலின் யாருக்குத் தேவை, அதன் வகைகள், அதன் பயம் தீர்க்கும் வழிகள் அனைத்தையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.
எப்போதெல்லாம் இன்சுலின் தேவை?
சர்க்கரைநோய் கண்டறியப்பட்ட பின்னர் சில மாதங்களுக்குள் இன்சுலின் தேவையா, இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள். கணையம் உற்பத்திசெய்யும் ஹார்மோன்தான் இன்சுலின். அது குறையும் நிலையில், ஊசியின் வழியாக இன்சுலின் செலுத்தப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காமலே இருக்கும் அல்லது குறைந்த அளவில் சுரக்கும். அதை ஈடுகட்ட அவர்களுக்கு இன்சுலின் தேவைப்படும். சிலரின் உடலிலிருக்கும் செல்களில், இன்சுலினின் தாங்குதிறன் இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டு உடல் சீரமைக்கப்படும்.
யாருக்கு இன்சுலின்?
சர்க்கரைநோய் பாதிப்பின் அளவு முதலில் சோதிக்கப்படும். ஹெச்.பி.ஏ1சி அளவு 8.5 ஐவிடவும் அதிகமாக இருந்தால், கணையம் மிகவும் பாதிப்படைந்துள்ளது என அர்த்தம். அவர்களுக்கு 3-4 வாரங்களுக்கு இன்சுலின் பரிந்துரைக்கப்படும்.
சர்க்கரைநோய் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் உபயோகம் முக்கியம். ஆபரேஷன் செய்யப்போகும் சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு, இன்சுலின் உபயோகம் பரிந்துரைக்கப்படும்.
காசநோய் உள்ளவர்கள் மற்றும் இன்ஃபெக்ஷன் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், இன்சுலினை உபயோகப்படுத்தி, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டியது அவசியம்.
இன்சுலின் வகைகள்
* குறைந்த வினையாற்றும் இன்சுலின் (Short Action Insulin) – 30 நிமிடங்களில் செயல்படத் தொடங்கும்.
* இடைநிலை வினையாற்றும் இன்சுலின் (Intermediate Acting Insulin)- 1 முதல் 2 மணி நேரத்தில் செயல்படத் தொடங்கும்.
* நீண்ட நேரம் வினையாற்றும் இன்சுலின் (Long Action Insulin) – 6-10 மணி நேரத்தில் செயல்படத்தொடங்கி, ஒரு முழு நாளும் நீடிக்கும். இந்த வகை இன்சுலினை எடுத்துக்கொண்டவர்களுக்கு, குறைந்த சர்க்கரை அளவே ஏற்படாது. எந்த நிலையிலும், சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
* துரிதமாக வினையாற்றும் இன்சுலின் (Rapid Action Insulin) – எடுத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கி, 4 மணி நேரம் வரை நீடிக்கும்.
இன்சுலின் உபயோகம் எப்போதுமே மருத்துவர் பரிந்துரைப்படிதான் இருக்க வேண்டும். எந்த வகை இன்சுலின், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவரிடம் கேட்டுத்தான் பின்பற்ற வேண்டும்.
தேவையில்லாத பயங்கள்
சர்க்கரையின் அளவு அதிகமானால்தான் அல்லது நீரிழிவின் கடைசிகட்டத்தில்தான் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆரம்பக்காலத்திலேயே இன்சுலின் எடுத்துக்கொள்வது, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இன்சுலினை ஒருமுறை உபயோகிக்கத் தொடங்கினால், அதிலிருந்து மீள முடியாது என்பதும் தவறு. உடலில் சர்க்கரை அளவு சீரான பிறகு, இன்சுலின் உபயோகத்தை மருத்துவர் பரிந்துரையின் பேரில் நிறுத்திக்கொள்ளலாம்.
இன்சுலின் எடுத்துக்கொண்டால், உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும் என்பது மிகவும் தவறான கூற்று. சிலருடைய பாதிப்புக்கு, மாத்திரை வடிவ மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இன்சுலின் உபயோகம் மட்டுமே அவர்கள் உடலைச் சீர்செய்யும்.
இன்சுலின் உபயோகித்ததால்தான், உறுப்பு நீக்கம், விரல் நீக்கம் போன்றவற்றைச் செய்ய நேர்ந்தது என்பதும் தவறுதான். நோயின் கடைசிகட்டத்தில் இன்சுலின் உபயோகிப் பதாலேயே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து இன்சுலின் உபயோகிப்பதைக் கடைப்பிடித்திருந்தால், சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.
ஒருநாளைக்கு ஒருமுறை போடும் இன்சுலின் வகையும் நீண்ட நேரம் வினையாற்றும் இன்சுலினும் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் படுகின்றன. தவிர்க்க முடியாத காரணத்துக்காக இன்சுலின் உபயோகம் தள்ளிப்போடப்பட்டால், பயப்படத் தேவையில்லை. ஆனால், தீவிர சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒருநாளைத் தாண்டியும் இன்சுலின் உபயோகிக்காமல் இருக்கக் கூடாது.