பாலியல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்
20 May,2017
......................
பாலியல் உறவால் பரவும் நோய்களை சரியான மருத்துவ சிகிச்சை மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம்.
இவ்வாறான நோய்களில் சில பாலுறவு மூலமன்றி குருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம்.
இந்நோய்கள் ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல் இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கடத்தப்படக்கூடும்.
பாலியல் உறவால் ஏற்படும் நோய்களுக்கு பொதுவான அறிகுறிகள் இருக்கும், அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்,
பிறப்புறுப்புப் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் சீழ்
ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும்.
இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு சீழ் வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.
கவட்டியில் நெறிகட்டுதல்
ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
விதைப்பை வீக்கம்
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும், வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி
பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.
இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்