உலக அளவில் 13.5 சதவிகிதக் குழந்தைகளும் இந்தியாவில் 15 முதல் 18 சதவிகிதக் குழந்தைகளும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக இருந்துவரும் இப்பிரச்னையின் தீவிரம் இன்று வேகமாக அதிகரித்து இருப்பது அச்சத்தை உண்டாக்குகிறது.
“ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை’’ எனக் கூறும் குழந்தைகள் நலம் மற்றும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன், ஆஸ்துமாவை வெல்லும் வழிமுறைகளை விரிவாக விளக்குகிறார்.
“சொந்தத்தில் திருமணம் செய்வது, பரம்பரை, சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்க வழக்கங்கள், மாறுபட்ட வாழ்வியல் முறைகள் போன்றவை ஆஸ்துமா உண்டாவதற்கான முக்கிய காரணங்கள்.
ஃபுட் (food), இன்ஹேலன்ட்ஸ் (inhalants), ஆக்குபேஷனல் (occupational) எனப்படும் மூன்று வகையான ஒவ்வாமை உண்டாகி, ஆஸ்துமாவாக உருமாறுகிறது.
பசி ஏற்படும்போது சாப்பிடாமல் இருந்துவிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி, அது செரிமானக் குழாயில் மேல்நோக்கிச் செல்லும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux) என்கிற, ஆஸ்துமாவை உண்டாக்கும் காரணியாக மாறும்.
துரித உணவுகள் மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதும் பல நேரங்களில் அலர்ஜியை உண்டாக்கி, ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.
காற்றோட்ட வசதியின்றி நெருக்கமான வீடுகளில் வசிப்பது, செயற்கையான ஏசி காற்றைச் சுவாசிப்பது, அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தால் உண்டாகும் புகை மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்கள் அலர்ஜியை உண்டாக்கி, மூச்சுக்குழலின் அளவை இயல்பைவிட சுருங்கச் செய்து, சீரான சுவாசத்தைத் தொடர முடியாமல் செய்யும்.
அறிகுறிகள்ஸ
மூக்கில் ஏற்படும் அலர்ஜியால் நுரையீரலின் செயல்திறன் குறைந்து தொடர் சளி, நெஞ்சுச் சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூக்கினால் சுவாசிக்க முடியாமல் வாயால் மூச்சுவிடும் நிலை, மூச்சு விடும்போது விசில் சத்தம், சிரித்தாலோ, பேசினாலோ இருமல் வருவது, கொஞ்ச நேரம் நடந்தால்கூட அதிகமாக மூச்சு வாங்குவதுஸ இவையெல்லாம்் ஆஸ்துமாவின் முதல்நிலை அறிகுறிகள்.
இவற்றைச் சரிப்படுத்தாவிட்டால் சைனஸ், அலர்ஜியா கவும், அடுத்து மூச்சுக்குழல் அலர்ஜியாகவும் மாறி, இறுதியாக ஆஸ்துமா உருவாகும்.
அலட்சியம் வேண்டாம்!
குழந்தைகளுக்கு அடிக்கடி அலர்ஜி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் வந்தால், அதற்கான காரணம் அறியாமல், `அது சாதாரண பிரச்னைதான்’ என அலட்சியமாக இருப்பதால்தான், பிற்காலத்தில் ஆஸ்துமா வினால் பெரிய அளவில் பாதிப்புகள் உருவாகின்றன.
இப்படி குழந்தைகள் தொடர் இருமல், மூச்சு விடுவதில் தொடர் அவதிக்குள்ளாவதை `cough variant asthma’ என்கிறோம்.
சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைத் தவிர, குழந்தைகளுக்குப் போடக்கூடிய தடுப்பூசிகளும் சில நேரங்களில் அலர்ஜியை உண்டாக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருத்துகள் அதிகமாக இல்லை. இப்போதுள்ள மருத்துவ வளர்ச்சியால் நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. தொற்று நோய்கள் பெரும்பாலும் தடுக்கப்படுகின்றன என்றாலும், சில நேரங்களில் நோய்
எதிர்ப்புச் சக்தியானது மாறுபாடு அடைந்து, அவற்றின் உட்பிரிவு களின் நோக்கம் மாறும். `இம்யூன் டீவியேஷன்’ (immune deviation) எனப்படும், நோய்க் கிருமிகளைத் தாக்கும் பாதையில் இருந்து மாறுபாடு அடைந்து ஒவ்வாமையை உருவாக்கும் ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி அலர்ஜியை உண்டாக்கும். இது `ஹைஜின் ஹைபோதிசிஸ்’ (hygiene hypothesis) எனப்படுகிறது.
ஆரம்பகட்ட சிகிச்சைதான் மிக அவசியம்!
ஆரம்பக் காலத்திலேயே ஆஸ்துமா கண்டறியப்பட்டால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதேநேரம் நாள் கடந்த ஆஸ்துமா பிரச்னைக்கு சரியான சிகிச்சை கொடுத் தால் பிரச்னையின் வீரியத்தை முழுமையாகவே கட்டுப் படுத்தலாம். ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டவுடன் நோய் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கும் `ஸ்டீராய்டு இன்ஹேலர்’ (steroid inhaler), `பிரான்கோடை லேடர் இன்ஹேலர்’ (bronchodilator inhaler) மருந்துகளைப் பயன்படுத்தலாம். இக் கருவியானது சுருங்கியிருக்கும் மூச்சுக் குழலின் இயக்கத்தைச் சீர்செய்து எளிதாக மூச்சு விட உதவும்.
கண்டுகொள்ளப்பட்டாத, சிகிச்சை இல்லாத முற்றிய ஆஸ்துமா நிலையானது, உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. குறிப் பாகக் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் வரக்கூடிய ஆஸ்துமாவின் நிலையில் மாற்றங்கள் இல்லை. குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே உருவாகும் ஆஸ்துமாவுக்கு முறையான சிகிச்சைக் கொடுக்காதபட்சத்தில் அவர்கள் பெரியவர்களாக ஆன பிறகு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆஸ்துமாவால் பாதிப்புள்ள குழந்தைகள் இயல்பாக இல்லாமல் மூச்சு விடவே சிரமப்படுவது, சரியாகச் சாப்பிட முடியாமல் போவது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவது, விளை யாட்டில் நாட்டம் இன்றி இருப்பது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். போதிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கடைப்பிடித்து ஆஸ்துமா வராமல் பார்த்துக்கொள்வதுடன், ஒருவேளை ஆஸ்துமா வந்திருப்பின் அதை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து வெல்லலாம்’’ என்று நம்பிக்கையும் தருகிறார் மருத்துவர் ஸ்ரீதரன்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்கஸ
`டஸ்ட் மைட்’ (dust mite) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத, மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடிகிற பூச்சியினம், தலையணை, பெட், டவல், மேட், குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் அதிக அளவில் இருக்கும். இவை மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர்வாழும். இந்த `டஸ்ட் மைட்’ பூச்சியினமானது நாம் படுத்த சில மணி நேரம் கழித்தே மூக்கினுள் சென்று தன் பணியைத் தொடங்கி அலர்ஜியை உண்டாக்கும். இதனால்தான் குழந்தைகள் தூக்கத்தில் தும்முவது, மூச்சு விடச் சிரமப்படுவது, வாய் வழியாக மூச்சு விடுவது, மூச்சுடன் விசில் சப்தம் வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்வார்கள். எனவே, படுக்கை அறையை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், குழந்தைகள் பயன்படுத்தும் துணி வகைகளை தினம்தோறும் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
தலையணை மற்றும் படுக்கைக்கு என கடைகளில் விற்கப்படும் பிரத்யேக பாதுகாப்பு உறைகளை (Dust Mite Mattress and Pillow Covers) பயன்படுத்தியும், அவற்றை அடிக்கடி சுத்தம் செய்தும் `டஸ்ட் மைட்’ பூச்சியின் வருகையைத் தடுக்கலாம். கார்ப்பெட் போன்றவற்றில் `டஸ்ட் மைட்’ அதிகளவில் இருக்கும் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம்.
நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த புத்தகங்களைக் குழந்தைகள் எடுக்கும்போது அவற்றில் இருக்கும் தூசி, குப்பைகள் எளிதாக குழந்தையின் மூக்கில் சென்று தும்மலை உண்டாக்கி ஒவ்வாமையை ஏற்படுத்தும். குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
சோஃபாக்களை நீண்ட நாள்களாகச் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால், குழந்தைகள் அதில் ஏறிக் குதித்து விளையாடும்போது, குழந்தைக்கு அடிக்கடி அலர்ஜி ஏற்படக்கூடும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வளர்ப்புப்பிராணிகளின் வாயிலாக தூசு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் பரவக்கூடும் என்பதால், அவற்றையும் சுகாதாரமான முறையில் பராமரிப்பது அவசியம்.
கொசுக்களை விரட்டப் பயன்படுத்தும் கொசுவத்தி மற்றும் ரசாயனங்களால் வரும் புகையும் குழந்தைகளுக்கு அதிக அளவில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கொசுக்களை விரட்ட ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
கரப்பான் பூச்சிகளும் ஒவ்வாமையை உண்டாக்கும் என்பதால் அவற்றின் வரவையும் தடுக்க வேண்டும்.
குழந்தைகள் வீட்டில் நாலாபுறமும் சுற்றிவந்து, படுத்து, உருண்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதனால், வீட்டில் குப்பைகள் சேராமல், தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்வதுடன், அவற்றில் குழந்தைகள் கைபடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாசு அதிகம் இருப்பதால் குழந்தைகள் சாலைகளில் செல்லும்போதும் வெளியில் விளையாடும் போதும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் தேவை. இதனால் அலர்ஜி ஏற்படுவது குறையும். காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களுக்குக் குழந்தைகள் செல்வதைத் தடுக்க வேண்டும்.
இன்றைக்குப் பெரும்பாலான குழந்தைகள் உடல் உழைப்பைச் செலுத்தி விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதே இல்லை. டி.வி., செல்போன் பார்த்துக்கொண்டு, ஜங்க் ஃபுட் சாப்பிட்டு வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதனால் ஒபிசிட்டி எனப்படும் பருமன் பிரச்னை உண்டாகிறது. ஆரோக்கியமில்லா உணவின் மூலமாக ஒவ்வாமையும் உண்டாகிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு, குடிநீர், சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறுவயது முதலே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதால் ஆஸ்துமா வராமல் தடுக்க முடியும்.
குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதும், குழந்தையின் ஒரு வயது வரை பசும்பால், பவுடர் பால் கொடுப்பதைத் தவிர்ப்பதும் அவசியம். குழந்தையின் ஒவ்வொரு வருட வளர்ச்சிக்கும் ஏற்ற திரவ, திட, சரிவிகித உணவுகளை சரியாகக் கொடுக்க வேண்டும்.
ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அவ்வப்போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று குழந்தையின் மூச்சுக்குழல் இயல்பான செயல்பாட்டுடன் இருக்கிறதா, சுருங்கியிருக்கிறதா, ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்கலாம்.
ஆஸ்துமாவும் பருமனும்!
உலகம் முழுக்க ஆஸ்துமா மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், யூ.எஸ்.சி (University of South Carolina) ஆய்வு முடிவு இன்னும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளில், 51 சதவிகிதத்தினர் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. ஆஸ்துமா பாதிப்புடன், பருமனும் ஏற்படுவதால், பிற்காலத்தில் வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு பிரச்னைகளும் ஏற்படலாம் என அறிஞர்கள் பலரும் ஆய்வு மூலம் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்திலேயே ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட காற்று மாசுபாடு பிரதான காரணமாக இருப்பதுடன், அது சுவாச மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளை அதிக அளவில் ஏற்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு முடிவில் பெரும்பாலான குழந்தைகள் போதிய உடல் உழைப்பைக் கொடுக்காததும், உடற்பயிற்சி செய்யாததும், உணவுக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்காததுமே குழந்தைப் பருவ ஆஸ்துமா பாதிப்புக்குக் காரணம் என்பதும் அறியப்பட்டுள்ளது.