கான்டாக்ட் லென்ஸை சரியாகப் பராமரிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
05 May,2017
கான்டாக்ட் லென்ஸை சரியாகப் பராமரிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மங்கலான பார்வை, அருகில் உள்ள பொருட்களை சிரமத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து பார்வை குறைபாடுகளையும் சரிசெய்ய கான்டாக்ட் லென்ஸ் இருக்கிறது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு உருண்டை வடிவ லென்ஸ்கள் உள்ளன. மங்கலான பார்வையை சரிப்படுத்தக்கூடிய டோரிக் லென்ஸ்கள் மற்றும் முதுமையின் காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்படுபவர்கள் அணியக்கூடிய மல்ட்டி போகல்லென்ஸ்களும் இருக்கின்றன.
தினமும் அணியும் லென்ஸ்களை ஒவ்வொரு நாள் இரவிலும் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நீடித்த நாட்களுக்கு லென்ஸ்களை அணிவோர் எத்தனை இரவுகள் லென்ஸ்களை அணிந்து தூங்கலாம் என்பதை கண்சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று அணியலாம்.
கான்டாக்ட் லென்ஸ் இன்றைய இளைஞர்களுக்கு சரியான தேர்வாக இருந்தாலும், சரியாகப் பராமரிக்காவிட்டால் கண் தொற்று வருவதோடு விழிப்படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பும் நேரிடலாம். லென்ஸ் அணிந்து கொண்டே தூங்குவது, அடிக்கடி லென்ஸ்களில் கை வைப்பது, கான்டாக்ட் லென்ஸ் சொல்யூஷனை மீண்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட சுகாதாரமற்ற செயல்களால் கண்களில் இருந்து நீர் வழிதல், சிவப்பு நிறமாக மாறுவது, தெளிவற்ற பார்வை போன்றவை தொற்றினால் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாகவே கான்டாக்ட் லென்சைக் கையாள வேண்டும்.
ஒவ்வொரு முறை லென்ஸ் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். லென்ஸ் வைக்கும் பாக்சை சுத்தமான துணியால் துடைத்து காய வைக்க வேண்டும். இந்த பாக்சை 3 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணிவதற்கு முன்பும் லென்சில் ஏதேனும் சேதமுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். பெண்கள் மேக்கப் போட்டுக் கொள்வதற்கு முன்பே லென்சை அணிந்து கொள்ள வேண்டும். லென்ஸ் அணிந்து கொண்டு கணினி மற்றும் மடிக்கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் மற்றும் அதை வைக்கும் பாக்சை அதற்கென்றே இருக்கும் திரவத்தால் கழுவ வேண்டும். குழாய்த்தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாது. தரையில் அல்லது வேறு எங்கேனும் கீழே விழுந்தால் அதனை சுத்தப்படுத்தாமல் அணியக்கூடாது.
அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த லென்ஸ் அணிவதையும், நீச்சல் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கும் போதும் லென்ஸ் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவரின் அனுமதியின்றி கடைகளில் வாங்கும் சொட்டு மருந்துகளை கண்களுக்கு போட்டுக் கொள்ளக்கூடாது. லென்ஸ் அணிந்திருக்கும் போது வெப்பம் கண்களை நேரடியாக தாக்கும்படி நிற்பதும் தவறான செயல்.