.......................
பித்தப்பை கல்பாதிப்பு உள்ள அனைவரும் கேட்கும் கேள்வி, ‘கல்லை மட்டும் அகற்ற முடியாதா? ஏன் பித்தப்பையை முற்றிலுமாக அகற்றுகிறீர்கள்?’ என்பதுதான். பித்தப்பை என்பது மிகவும் மென்மையான உறுப்பு. அதில், அறுவைசிகிச்சை செய்து கல்லை அகற்றி மீண்டும் தையல் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை. இருப்பினும், இதில் நல்ல விஷயமும் உள்ளது. மனித உடல், சில உறுப்புகள் இல்லை என்றாலும், அவற்றின் பங்களிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழும் தன்மை கொண்டது.
கண்கள், கைகால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதேபோல், குடல் வால், பித்தப்பை, டான்ஸில் போன்றவற்றை நீக்கினாலும் எந்தப் பிரச்னையும் இல்லை.
சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புக்களில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுகுடலிலோ பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவைசிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழுப் பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. வயிற்றில் வலி இருப்பவர்களுக்கு மட்டுமே நீக்கப்படுகிறது. ஏனெனில், பித்தப்பையின் இயங்கும் தன்மை முழுமையாகக் குறையும்போதுதான் வலி ஏற்படுகிறது. பித்தப்பையை நீக்குவதால் உடலின் செயல்பாடுகளில் வேறு பாதிப்புகள் எதுவும் இருக்காது. பித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும்.
உடல் பருமன் அறுவைசிகிச்சையில், முன்பு இரைப்பைக்கு உணவு செல்லாமல், நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் வகையில் பைபாஸ் செய்யப்பட்டது. தற்போது, இரைப்பையின் அளவை குறைத்து அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இரைப்பை இல்லை என்றாலும் உயிர்வாழ முடியும்.
அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வால் என்பது குடலின் நுனியில் உள்ள வால் போன்ற ஓர் உறுப்பு. இது ஏன் உள்ளது என்பது பற்றிய மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால், சிலருக்கு இந்த குடல்வாலில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இதை அப்பெண்டிசிட்டிஸ் (appendicitis) என்கிறோம். கடுமையான அடிவயிற்றுவலி இதன் முக்கியமான அறிகுறி. இந்த உறுப்பை நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, ஆண்களுக்கு ப்ராஸ்டேட், விதைப்பை அகற்றினாலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.
மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் பாதிப்படையும்போது மற்றொரு சிறுநீரகமே கூடுதல் வேலை செய்து பாதிப்பைத் தவிர்க்கும். இரண்டும் பழுதடைந்தால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதில், தானமாகப் பெறப்படும் ஒரு சிறுநீரகம் நோயாளிக்குப் பொருத்தப்படும். இவர்களுக்கும், பழுதடைந்த சிறுநீரகங்கள் அகற்றப்படுவது இல்லை.
சிறுநீர்ப்பையில் பாதிப்பு இருந்தால் அதை அகற்றிவிட்டு, செயற்கை சிறுநீர்ப்பையுடன் ஆரோக்கியமாக வாழ முடியும்.