நண்பர் ஒருவர் சொன்ன ஆச்சரியத் தகவல் இது!‘அதிகாலையில் எழுகிறவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுகிறார்கள்.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சரியாகத்தான் தோன்றுகிறது. உடல்நிலை சரியில்லாத நாட்களில் சீக்கிரமே எழுவது நமக்கே முடியாத காரியமாகத்தான் ஆகிவிடுகிறது. அதிகாலைக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு?
ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் விளக்குகிறார்.
‘‘இளம்வயதினர் ஆரோக்கியமாக இருந்தும் தாமதமாக எழுவதையோ, உடல்நலக் குறைவானவர்கள் வயது மூப்பு காரணமாக தூக்கம் குறைந்து அதிகாலையிலேயே விழிப்பதையோ இதில் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. மற்றபடி அதிகாலையில் எழுகிறவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுகிறார்கள் என்பது உண்மைதான். உடல்நலக் குறைவு கொண்டவர்கள்கூட அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பின்பற்றும்போது உடல்நிலை சீராக இருக்கவும், சமயங்களில் நோய் குணமாகிவிடவும் கூட வாய்ப்பு உண்டு.
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் தூங்கத்திலிருந்து எழுவதால் உடலில் உள்ள வாதம் சீர்கெடாது. அதிகாலையில் புத்தம்புதிய காற்று வளிமண்டலத்திலிருந்து நமக்குக் கிடைக்கும். சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது நோய்கள் தாக்கும் அபாயம் குறையும்.
அதிகாலையில் எழுகிறவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதன் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான். தாமதமாக எழுகிறவர்கள் மந்தத்தன்மையோடு இருப்பதன் காரணமும் இந்த புத்தம்புதிய காற்றை சுவாசிக்க முடியாமல் போவதுதான். அதிகாலையில் எழ வேண்டும் என்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், அப்போதுதான் நம் உடல் முழு ஓய்வில் இருக்கும்.
அந்த நேரத்தில் உடலுக்கு ஓர் இயக்கம் தேவையிருக்கும். ஏதாவது செய்ய வேண்டும் என்றும் துறுதுறுப்பான உணர்வு தோன்றும். அதனால், காலை கடனை கழித்தபிறகு யோகாசனங்கள், தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை அந்த நேரங்களில் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்ல வேண்டும். அதிகாலையில் தூங்கி எழுவதால் மன அழுத்தத்தை உருவாக்கும் Cortisol என்ற ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படும். இதனால் மனதுக்குப் புத்துணர்வு கிடைக்கும் உணர்வை அனுபவத்திலேயே உணர முடியும். தூக்கம் வரவில்லை என புலம்புபவர்கள்
அதிகாலையிலேயே எழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் தூக்கப் பிரச்னை நீங்கும். இரவில் தாமதமாகத் தூங்கும் பழக்கமும் அதிகாலையில் எழ பெரிய தடையாக இருக்கும்.
அதனால் நேரமே தூங்கப் பழக வேண்டும். தூக்கமின்மை பிரச்னை இருந்தால் சூடான பாலில் கொஞ்சம் தேன் கலந்து இரவில் பருகினால் நல்ல தூக்கம் நிச்சயம். இதனால் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழவும் முடியும்’’ என்கிற மருத்துவர் சாந்தி விஜய்பால், தாமதமாக எழுகிறவர்களுக்கு இந்தப் பலன்கள் எல்லாமே தலைகீழாக மாறும் என்கிறார்.
‘‘தாமதமாக எழும்போது மந்தத்தன்மை, நேரம் கடந்து சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவது, அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் அதிகமாவது, மீண்டும் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் உருவாவது, ஹார்மோன்கள் குறைபாடு காரணமாக தைராய்டு, நீரிழிவு போன்ற பல பிரச்னைகள் வருவது என்று பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றவரிடம், தாமதமாக எழுகிறவர்களுக்கு வேறு ஏதும் ஆலோசனை உண்டா என்று கேட்டோம்.
‘‘மன அழுத்தம் கொண்டவர்கள், இரவில் அதிகமாக, தாமதமாக சாப்பிடுகிறவர்கள், ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உடல் வலி உள்ளவர்களால் அதிகாலையில் எழ முடியாது. இதை ஓர் அலாரமாக உணர்ந்து தக்க மருத்துவத்தை மேற்கொள்வது அவசியம்’’