கணையம், நம் செரிமான மண்டலத்தின் தளபதி; வயிற்றின் மேல் பகுதியில், இரைப்பைக்குப் பின்னால் அமைந்திருக்கும் ஓர் உறுப்பு. நாளமுள்ள, நாளமில்லா என இரண்டு வகையான சுரப்புக்களையும் செய்யும் ஒரே உறுப்பு கணையம். 250 முதல் 500 கிராம் எடைகொண்ட கணையம், மென்மையான உறுப்புகளில் ஒன்று. உணவு செரிமானம் ஆக உதவும் ஏராளமான என்சைம்களும், ரத்தத்தில் கலக்கும் குளுக்கோஸைத் திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின்
ஹார்மோனும் கணையத்தில்தான் உற்பத்தியாகின்றன.கணையத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும்போது, வீக்கம் அடைந்து, கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படுகிறது.
கணைய அழற்சி: உணவு, செரிமானம் ஆகும்போது கணையத்தில் இருந்து ஏராளமான என்சைம்கள் சுரக்கின்றன. இவை, கணையத்தில் இருந்து ஒரு குழாய் வழியே பயணித்து, சிறுகுடலை அடைகின்றன. பித்தப்பையில் இருந்து வரும் குழாயுடன், கணையத்தில் இருந்து வரும் குழாய் சிறுகுடல் அருகே இணைகிறது. பித்தப்பையில் கல் உருவாகி, அது பித்த நாளத்தை அடைக்கும்போது, கணைய என்சைம் பாதையையும் அடைக்கிறது.கணையத்தில் உருவாகும் என்சைம் செயல்திறன் அற்ற நிலையில் இருக்கும். இது, சிறுகுடலை வந்தடைந்ததும் செயல்திறன் பெறும். அதிக ஆற்றல் கொண்டது என்பதால், இயற்கையாகவே இந்த ஏற்பாடு. பித்தப்பை அடைப்புக் காரணமாக, கணைய என்சைம் செல்வதில் தடை ஏற்படும்போது, குழாயிலேயே இந்த என்சைம் செரிவுத் தன்மை பெறும். இது, மீண்டும் கணையத்துக்குத் திரும்பும்போது, செரிவுடன் இருக்கும். இதுவே, கணைய செல்களை அழித்து, வீக்கம் அடையக் காரணமாக இருக்கிறது.
காரணங்கள்: மது அருந்துதல், சிகரெட் புகைத்தல், சில மருந்துகள் எடுத்துக்கொள்வது, ரத்தத்தில் கால்சியம், டிரைகிளசரைட் அளவு அதிகரித்தல், மரபியல், வயிற்றில் அடிபடுதல், புற்றுநோய் என்று வேறு பல காரணங்களாலும் கணைய அழற்சி ஏற்படலாம். லேப்ரோஸ்கோபி மூலம் பாதிக்கப்பட்ட கணையத்தைப் பார்த்தால், கொதிக்கும் நீர் பட்டதும் தோல் எப்படிக் கன்றிப்போய் புண்ணாகி இருக்குமோ, அப்படிக் காணப்படும். அந்தக் காயத்திலிருந்து நீர் வடியும். கணைய அழற்சியை, உடனடிப் பாதிப்பு, நாட்பட்ட கணைய அழற்சி எனப் பிரிக்கலாம்.
நாட்பட்ட கணைய அழற்சி: உடனடிக் கணைய அழற்சியைக் கவனிக்காமல் விடும்போது, நாட்பட்ட கணைய அழற்சியாக மாறுகிறது. இதனால், கணையம் மட்டும் அல்லாமல், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இது, இதயத்தைப் பாதித்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நுரையீரலைப் பாதித்து, மூச்சுத்திணறலை உண்டாக்கும். சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீர் வெளியேற்றம் குறையும். ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்போது, அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். சிலருக்கு, பார்வைக் கோளாறு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது. மூளையைப் பாதித்து நினைவை இழக்கக்கூடும். மஞ்சள்காமாலையும் வரக்கூடும்.
சிகிச்சைகள்:கணைய அழற்சியால் கணையம் சிறிதாகப் பாதிக்கப்படும்போது, அதை மருந்துகளால் சரிப்படுத்திவிட முடியும். ஆனால், நாட்பட்ட கணைய அழற்சிக்கு மருந்து இல்லை. வலியைக் குறைக்கும் மருந்துகள் மட்டுமே உள்ளன. இதனை, வருமுன் காப்பதே நல்லது. நம் நாட்டில் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில், நூறில் 20 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்பட்ட கணைய அழற்சி முற்றும்போது கணையத்தில் இருந்து வடியும் திரவம், ரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் செல்வதால், மரணம்கூட ஏற்படும். கணையத்தில் உள்ள திரவங்களைச் சீராக்கி, முதல் 24 மணி நேரத்தில் சரிசெய்தால் காப்பாற்றிவிடலாம்.
சிகிச்சைக்குப் பின்
கணைய அழற்சியைத் தொடக்க நிலையில் கட்டுப்படுத்திய பிறகு, மீண்டும் தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணையம் பாதிக்கப்படும்போது, ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். ஆகையால், முதலில் டயட்டில் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். மதுவையும் சிகரெட்டையும் அறவே கைவிட வேண்டும். சரியான உணவு முறை, உடற்பயிற்சி அவசியம். வேறு ஏதேனும் நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளும் முன்னர், மருத்துவரிடம் இந்தப் பிரச்னையைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
கணைய அழற்சி மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. கணையத்தில் கற்கள் தோன்றும், சினைப்பை நீர்க்கட்டிகள் தோன்றும். எனவே, கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
அறிகுறிகள்
கடுமையான வயிற்றுவலி.
வலி வயிற்றில் இருந்து இடுப்புப் பகுதிக்குப் பரவுதல்
நிமிர்ந்து அமர்ந்தால் வலி இருக்கும். எனவே, குனிந்தே அமர்ந்திருக்கத் தோன்றும். முன்னால் வளையும்போது வலி குறையும்.
அதிகப்படியான பித்தத்தினால் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வாந்தி எடுப்பார்கள்.
அடிக்கடி காய்ச்சல் உண்டாகும்.
வயிற்று உப்புசம் இருக்கும். ஏப்பமோ, வாயுவோ வெளியேறாது.
வயிற்று வலியினால் உடல் முழுதும் வியர்த்துக்கொட்டும்